Pages

Wednesday, April 26, 2006

உன்னில் உறைந்து போனேன் நாவாந்துறைடானியல்ஜீவா -


ஊசிக் குளிர்
வந்தென்னை
உரசித் தாக்க
உறை நிலைப் படலமாய்
நீ எந்தன்
நெஞ்சில்..

வாழ்வு
வறுமையின்
கரு முகிலாய்
உன் திருவுருவம்
மனத்திரையில்
தோன்றும் வேளை...
வெண்ணிலவாய் மாறும்
இடுப்புடைய
இடர்வந்து
நொகுமெந்தன்
மெய்யில்
என் நிழல் பார்க்க
எனக்கேது நேரம்....
இன்னும்
எனக்குள்
உன் வாசனை...
நீயும் நானும்
வெயில் சாய
வீதியில் நடந்தோம்.
கவிதையில்
பகிடி பண்ண
காற்றோடு உன் சிரிப்புதிர
எச்சி முறிகள்
என் முகத்திற்கு
சொந்தமாகும....
குளிர் காற்றும்
கொழுத்தும் வெயிலும்
கவி சொல்லும்
கனத்த மழையும்
நம் மகிழ்விற்காய்
வசப்படுத்தினோம்
வெள்ளம் வர முன்
வள்ளம் கரை சேரும்;
வீடு வந்ததும்
உன் தெருவுக்கு
ஓடி வருவேன்.
காற்றில்
கடிப்புதற
சாதாளையோடு
சுங்கான் மீன் கிடந்து
சுள்ளென்று குத்த
உன் புன்னகையை
ஒரு கணம் நினைத்தால்
விண்ணென்ற நோவெல்லாம்
விரல்களிருந்து
விடுதலையாகும்
அன்றொரு நாள்
பின்னிரவும்
பேசாமல்
புலர்ந்துபோனது.
உன் வரவிற்காக
என் உயிர்த்தீ
உருக்குலைந்து
காத்துக்கிடந்தது.
தொடும் தூரம்
நின்ற நீ
இன்று
நெடும் தூரம்
சென்று விட்டாய்
நீ நினைத்தாலே
உன் வேலிச்சிறகு
விாிந்து கொடுக்க
காதல் உட்புகுந்து
உள் சதைவரை பாயும்
நானோ
ஒரு மழையின்
வருகைக்காக
வெண் பனித் தூறலில்
காத்துக்கிடக்கிறேன்
ஆயினும்
உன் உதடு தந்த
ஈரத்தை
எப்படி உலர வைக்கமுடியும்.

No comments: