Pages

Saturday, May 28, 2011

பெண் துறவி


(சிறுகதை)
டானியல்ஜீவா

ஜீவன் மெலிந்து போயிருந்தான். அவன் பெரிய மொத்தமானவன் என்று சொல்லமுடியாது. அதே வேளை ஒல்லியானவன் என்றும் சொல்ல முடியாத இடைப்பட்ட நிலையிலிருந்தவன்;. கடந்த ஒரு வாரமாகத்தான் அவனுடைய உடல் என்றுமில்லாதவாறு மிகவும் மெலிந்திருந்தது. கண்களில் துயர் இழைந்து கன்னம் உள்ளொடுங்கி தோல் வறண்டு கிடந்தது.
ஒரு வேளைச் சாப்பாடு மட்டும் சாப்பிடுவதால் அவனுடைய உடலில் மாற்றம் ஏற்ப்பட்டிருக்கலாம். பசி, பட்டினிச் சாவு, மலிந்து, இருள் கவிந்து கிடக்கும் பூமியிது. அதனால் மற்றவர்கள் போல் இவனையும் சொல்லொனாத் துயர் வந்து கொல்கிறதோ..?
ஜீவனின் ஊர் யாழ்ப்பாண கரையோரப் பிரதேசத்தை அண்டியிருக்கிறது. இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்து அமைதியாய் இருந்த காலத்தில் இவ்வூரில் நடந்த சாதிக் கலவரத்தின் போதே இராணுவம் ஆயுத த்தை மேல் நோக்கிச் சுட்டு தன்னுடைய நடவடிக்கையை முதல் தொடங்கியதாக வரலாற்றில் பதிவாகி யிருக்கிறது. ஆனால் யாரும் கொல்லப் படவில்லை.
ஜீவனுக்கு இருபைத்தைந்து வயதிருக்கும். ஆனால் வயதை மீறிய உடல் வளர்ச்சி. ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தான். சிறுவயதிலேயே யாழ்ப்பாண நகருக்குள் இருக்கும் வெல்டிங் செய்கிற ஒரு தொழிற் சாலையில் வேலைக்குச் சேர்ந்தான். அவனுடைய சொந்த முயற்சியால் வேலையை நன்றாக செய்யப் பழகினான். முதாலாளியும் அவனுடைய திறமையையும் வேலையில் அவன் காட்டுகிற அக்கறையையும் பார்த்து அவனுக்கு நல்ல சம்பளம் கொடுத்தார்.
கடந்த வாரமாக அவன் யாழ்ப்பாண நகரப் பக்கமாக போக மனமற்றிருந்தான். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் வேலனையில் குடும்பத்தோடு அகதியாய் இருந்து விட்டு கடல் வழியாக வீடு திரும்பி யிருந்தான். இன்னும் யாழ்ப்பாண நகரம் வழமைக்கு திரும்பவில்லை. கடைகள் பல இன்னும் பூட்டியபடியே கிடந்தன.
வீதியெங்கும் நெடுந் துயரம் வழிந்து ஒடிய தடம் இன்னும் ஈரமாய் தென்படுகின்றது. காற்றெங்கும் உயிர் மரணித்து காந்தீயத்தின் அகிம்சை அம்மணமாய் படர்ந்து கிடந்தது. இவ்வளவும் நடந்தும் அவன் தன் போக்கில் வாழப் பழகி விட்டான். அவனுடைய தகப்பன் இந்திய இராணுவத்தால் ஒட்டுமடச் சந்தியில் வைத்து சுடப்பட்ட பின்னர் அவனுடைய மனநிலை உறைந்து போயிருக்கலாம். அப்படியும் நினைக்க முடியாது. ஏனென்றால் 83ன் இறுதிப் பகுதியில் இளைஞர்கள், மாணவர்கள் என்று படையெடுத்து இயக் கங்களுக்கு சென்ற போதும் அவன் எந்த மாறுதலுக்கும் உட்படாமல் தான் வாழ்ந்து வந்தான்.
அவன் ஒரு பெண்ணை மனதளவில் விரும்பித் திரிந்தான். அவள் பெயர் ராணி. ஜெயராணி என்னும் இயற் பெயரைக் கொண்டவளை எல்லோரும் ராணி என்றே அழைப்பார்கள். ராணி உயர் தரம் கலைப் பிரிவில் படித்துக் கொண்டிருக்கும் போதே இயக்கத்திற்கு போய் விட்டாள். இந்திய அமைதிப் படைக்கும், விடுத லைப் புலிகளுக்கும் இடையில் நடந்த யுத்தம் ஒரளவுக்கு முடிவுக்கு வந்த பின் அவள் என்ன காரணமோ தெரியவில்லை இயக்கத்தை விட்டு வெளியேறி வீட்டிற்கு வந்து விட்டாள்.
அவள் வீடு திரும்பிய பின் மீண்டும் படிப்பை தொடங்கினாள். வைமன் றோட்டில் இருக்கும் ஐயரிடம் ஆங்கிலமும் ,விக்கினா ரீயூசன் சென்ரரில் கலைப் பிரிவுக்குரிய பாடங்களையும் படித்து வந்தாள். அண் மையில் விக்கினாவில் பொருளாதார பாடம் படிப்பித்துக் கொண்டிருந்த ஆசிரியரும் யாழ்ப்பாண பல்க லைக் கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றிக் கொண்டிந்தவரும் இனந் தெரியாதவர்களால் கொல்லப் பட்ட கதை ஊரில் இன்னும் ஒய்ந்து போகவில்லை. ராணி ஒவ்வொரு நாளும் ரீயுசனுக்குப் போகும் போது ஏக்கமும் வலியும் அவனுக்குள் கிடந்து வதைக்கும். ஆனால் ராணி இந்த போர்ச் சுழலை பெரி தாக எடுத்துக் கொள்ளாதவள் போலவே இருந்து வந்தாள். தன் உயிரை பெரிதாக நினைக்காததோ அல்லது இத்தனை உயிர்களும் தேவையற்று அழிந்து போவதைப் பார்த்து மனம் மரணித்து போய் விட்டதோ தெரியவில்லை..? ஆனாலும் அவளுடைய வாழ்க்கையை நினைத்தவுடனேயே இவனுக்கு நெஞ்சு படபடக்கும். எல்லாம் தெரிந்த போதும் அவள் மீது தீராத காதலும் தவிப்பும் இழைந்திருந்தது. அவனு டைய உணர்வெல்லாம் அவளைச் சுற்றியே ஒடிக்கொண்டிருந்தது. என்ன பிரச்சனை நேர்ந்தாலும் அவள் மீது கொண்ட பற்றை பாசத்தை எப்படியாவது தெரிவிக்க வேண்டுமென்பதில் குறியாக இருந்தான்.
ராணி அவனுடைய சொந்த ஊரைச் சேர்ந்தவள். சிறுவயது முதல் அவனுக்கு அவளைத் தெரியும், அவள் மீது இனம் புரியாத ஈர்ப்பு கடந்த மாதங்களில் இருந்துதான் அவனுக்குள் வளரத் தொடங்கியது. பல சமயம் அவனை கலவரப் படுத்தியது. கடல் இழுத்துச் சென்ற உயிர்களைப் போல் அவனுடைய மனம் அதன் போக்கில் இழத்துச் சென்று அவனுடைய உயிரின் ஒரத்தில் அவளுடைய நினைப்பை குவித்து அது பனிப்படலமாய் மாறிப் போய்விட்டது.
காமக் கெடுவால் முளைத்த காதலாய் அவன் எப்போதும் தன்னை உணர்ந்து கொள்ளவில்லை. சில வேளை அவளை பார்க்கும் போது தேவமாதவைப் பார்ப்பது போல் அவன் உணர்ந்து கொள்வான். தேவமாதாவின் கால்களுக்குள் கீழ் பாம்புகள் ஏன் சபிக்கப்பட்டு கிடக்கின்றன என்று அவன் முரண்பட்டு சிந்திப்பதும் உண்டு.
அவனுடைய உணர்வுதான் எவ்வளவு விசித்திரதமானது..?
அவளுடைய அனுமதியில்லாமலே அவள் மீது காதல் கொண்டதற்கான காரணமாக அவனுடைய ஆய்வின் முடிவில் அவன் கண்டு பிடித்தது ‘சாந்தமான முகபாவனை’ தான்.என்று அவனுக்கு பல தடவை தோன் றியது.
எல்லா நினைப்புகளுக்கும் மேலாக அவனுக்குள் இயல்பாயிருக்கும் அச்ச சுபாவம் அவளிடம் நெருங்கி தன் விருப்பத்தை கூற மறுத்தது. அவன் தன்னுடைய விருப்பத்தை அவள் மீது திணிக்கவும் விரும்ப வில்லை. ஆனால் அவன் தன்னுடைய விருப்பத்தை சொல்ல எடுக்கும் அவகாசம் கூடக் கூடக் அவனு க்குள் உள்ளுறைந்த அவளைப் பற்றிய ஆர்வம் மேலோங்கி அவனுடைய உடல் முழுவதும் பரவி வலித்தது.
ராணி கோயிலுக்கு போவதாலேயே ஜீவனும் ஒவ்வொரு நாளும் தவறாமல் கோயிலுக்கு போகிறவனாக தன்னை மாற்றிக் கொண்டான். அவள் எப்போது சர்ப்பிரசாதம் எடுக்க அடுத்தவர் முன்னால் வருவாள் என்று காத்திருந்து அவள் வரும் போது இவனும் எதிர்த்திசைக்கு வந்து சறாப்பிரசாதம் எடுப்பான். அவன் கோயிலுக்கு போவது கடவுள் மீது கொண்ட பற்றினால் அல்ல அவள் மீது கொண்ட தீராத அன்பினால் தான்.
ஊரில் சில வசதிபடைத்த வீடுகளில் இரவில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு என்றே சிலர் கூடுவார்கள். ராணி எந்த வீட்டிற்கு போனாலும் அந்த வீட்டிற்கு இவனும் போய்விடுவதை வழக்கமாக்கிக் கொண்டான். ஜீவன் இயல்பில் மௌனப் பேர்வழி. எந்தக் கூட்டத்தில் நின்றாலும் அமைதியாக நிற்பதே அது ஒரு தனியழகு. தொலைக்காட்சி நிகழ்சியை பார்ப்பவன் போல் பாவனை காட்டிக் கொண்டு அவனுடையு பார்வை முழுவதும் அவள் மேல் படரும்.
ராணிக்கு சிறு வயதிலிருந்தே துறவறத்திலேயே மனம் ஈடுபாடாய் இருந்தது. கடவுளை தன் தாயை விட அதிகம் நேசிப்பவள். ஆண்டவனிடம் அயராது தன் விருப்பத்தை செபத்தின் வழியாக கேட்டுக் கொண் டேயிருந்தாள். கன்னியாஸ்திரியாக வந்து தான் வாழும் சமூகத்திற்கு தன்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்பதெ அவளுடைய சிறுவயது முதல் முளைத்த முதல் கனவாய் இருந்து வந்தது. இடை யில்தான் திடீரென இயக்கத்திற்கு போனாள். ஆனால் அவளால் தொடர்ந்து அங்கு இருக்க முடியவில்லை. தான் துறவியாகப் போகவேண்டும் என்ற விடயத்தை தன் தாயிடம் ஒரு நாள் சொன்ன போது அவள் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் சம்மதித்தாள்.
ராணியிடமிருந்து மெல்லிய புண்சிரிப்பு அவ்வப்போது முகம் காட்டும். மற்றவர்களுக்கு அது ஒரு வசீகரத் தன்மையை ஏற்ப்படுத்துவதாக அவள் எப்போதாவது உணர்ந்ததில்லை. அதுவே அவனுடைய தூக்கத்தை இயல்பான வாழ்வினை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் குலைச்சு மனச் சிதைவுற்றவன் போல் மாறிப் போனான்.
காலைக் கண்விழிப்பில் யாரோ ஒருவர் துப்பாக்கியோடு வீட்டு வாசலிலோ அல்லது வீதியிலோ நிற்பார் கள். அது எழுதப்படாத விதியாக மாறிப் போய் விட்டது. சுற்றி வளைப்பு தேடுதல,; காணமல் போதல் என்று நித்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. நிம்மதியான வாழ்வென்பது நெடுநாளாக காணமால் போய் விட்டது.
நேற்று யாழ்ப்பாணத்துக்கு வேலைக்குப் போன ஜீவனை புண்கால்களோடு கடலில் இறங்கிய மீனவனை மொய்த்து நிற்கும் மீன் குஞ்சுகள் போல் சுற்றி நின்று இந்திய இராணுவத்தினர் அரைமணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்து விட்டு விடுவித்தார்கள். அதன் பின் அவனுடைய உடலில் ஒருவித பய உணர்வு அப்பிக் கொண்டது. ஜீவனின் அண்ணன் கனடாவில் இருக்கிறார். அங்கு அவனோடு இருந்தால் நிம்மதி யாக இருப்பான் என்று அவனுடைய தாயார் முடிவெடுத்து அவனிடம் கேட்ட போது, அவன் வெளிநாடு போவதை அடியோடு மறுத்து விட்டான். ஜீவன் வெளிநாடு போக மறுத்ததற்கு ராணியும் ஒரு காரணம். ராணியை அவன் விட்டு பிரிய மனமில்லாத போதும் ராணுவ விசாரணையின் பின் ஒரு வகையாக குழம் பிப் போனான். உயிருக்கு ஏதும் நடந்திடுமோ என்று மனதிற்குள் பயப்படத் தொடங்கினான். ஆனாலும் எந்த முடிவானலும் ராணியின் விருப்பத்தை அறிந்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானித் தான். அவள் நாளைக் காலையில் ரீயுசனுக்கு போகும் வழியிலேயே வைத்து தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தான்.
யாழ்ப்பாண வீதி பிள்ளை பிடிப்பவர்களுக்கு பயந்து வெளுத்து காயப்போட்டுக் கிடந்தது. அவ்வப் போது இப்போதெல்லாம் இப்படி கிடப்பது வழக்கமாகி விட்டது. நேற்றிரவு மழை பெய்திருக்க வேண்டும் நிலம் ஈரமும் மணமும் போர்த்திக் கிடந்தது. வீதியின் ஒரங்களில் குடை விரித்து காளான்கள் உறங்கிக் கொண் டிருந்தது. மண்ணுண்ணிப் பாம்புகள் மணலில், தார்றோட்டில் கோடு வரைந்து அடுத்த உயிர்களுக்கு எந்த வித தீங்கும் மனசால் கூட விளைவிக்காமல் தன் போக்கில் மொழி வரைந்த இசையோடு அவைகள் ஊர்ந்து கொண்டிருந்தன. நாவலர் வீதியில் ராணியின் சையிக்கிள் நகர்ந்து கொண்டிருநத்து. அவள் சைக்கிளை அதி வேகமாக ஓட்டுவதில்லைப் போலும். சில வேளை சைக்கிளை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகவோ தெரியவில்லை. சைக்கிள் அவ்வளவு மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.
வெள்ளை நிறத்தில் ‘ஸ்கேர்ட்டு’ம் கறுப்பு கலரில் பாவடையும் அவளுக்கு மிக அலங்காரமற்றவள் போல் தோற்றம் கொண்டிருந்தது. நெஞ்சை மறைத்திருந்த உள்ளாடை கறுப்பு கலரில் இருந்தது. அவள் சைக்கிளை ஓட்டும் போது அவளுடைய பின் கால்களின் அசைவு அழகிய கவிதையொன்றை எழுதிக் கொண்டிருந்தது. அவளுடைய இரண்டு கால்களிலும் முழங்காலிருந்து கீழ் கால்வரை நிறைய புண் வந்த காயங்களின் வடுக்கள் நிறைந்திருந்தன. .சின்ன வயதில் ‘பொக்குளிப்பான்’ வந்திருக்கலாம். இரண்டு கால்களின் விளிம்பிலும் தோல் வெடிப்புகள் கிடந்தன. அது பித்த வெடிப்போ அல்லது தோல் காய்ந்து வெடித்திருக்கலாம். அந்த வெடிப்புகளின் மீது புழுதி படுத்திருந்தது. கீழ்க் காலிருந்து பாவடையின் விளிம்பு வரை ‘பாரை’ மீனின் தோல் மீது படர்ந்திருக்கும் செதில் போல் அவளுடைய கால்கள் இருந்தன. தங்கம் வெள்ளியென்று எதுவுமே அவள் அணிந்திருக்கவில்லை. காதில்கூட ஒன்றுமில்லை. ‘பெந்தகோஸ்’ சபையில் இருக்கிற பெண்களைப் போல் இருந்தாள். கறுப்புக் கலரை உடம்பெல்லாம் ஆசைப்பட்டு பூசியது போல் அவளுடைய நிறம். அவளால் கறுப்புத்தான் எவ்வளவு கச்சிதமாகவும் அழகாகவும் இருக்கிறது. முகத்தில் மட்டும் வசீகரம் வழிந்தோடியது.
அவளைப் பின் தொடர்ந்து ஜீவன் நாவலர் வீதியால் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான். ராணியின் சைக்கிளுக்கு பெரிய இடைவெளி விட்டு அவனுடைய சைக்கிள் போகவில்லை. ஆக மிஞ்சிப் போனால் கூப்பிடும் தூரத்தில் தான் அவள் போய்க் கொண்டிருந்தாள். ஒட்டோ ஒன்று படுவேகமாக அவளைக் கடந்து போனது. ’டற்சன்’ காரொன்று அவள் போயக் கொண்டிருந்த பாதையின் எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தது. காரின் பின் பக்கம் எந்த மறைப்பும் இன்றி கிடந்தது. சிலர் கூர்க்கா படை கட்டுகின்ற தலைப்பாவுடன் ஆயுதம் ஏந்தியபடி நின்றார்கள். சில இளைஞர்கள் சாதராண உடையுடன் ஆயுதம் தரித்தபடி நின்றார்கள். கார் சீரான வேகத்துடன் அவளைக் கடந்து சென்றது. யார் அந்த காரில் போகிறார்கள் என்பதை அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியயாமல் இருந்தது. இந்திய இராணுவ த்தினர் ஒழுங்காகவும் சீராகவும் வீதியின் இருபக்கத்திலும் ஆயுதம் தாங்கியபடி நடந்து போய்க் கொண்டி ருந்தார்கள். பயந்து பயந்து எத்தனை நாளைக்குத் தான் வாழ்வது என்று அவளுக்கு தோன்றியது.
அஞ்சனந்தாள் சந்தியால் ராணி திரும்ப அவனும் தன்னுடைய சைக்கிளை திருப்பினான். சந்தியின் மூலையில் இரத்தம் வடிந்தபடி வெள்ளைத் துனியால் மூடப்பட்டு கிடந்த இறந்த உடலை யாழ்ப்பாண மருத்துவமனையிலிருந்து வந்த மினி வான் ஒன்று ஏற்றிக் கொண்டிருந்தது. உடலில்லிருந்து வழிந்தோடிய இரத்தம் நிலத்தில் காயந்து கிடந்தது. அவள் உடலைப் பார்த்தவுடன் விக்கித்து போனாள். முகம் கறுத்து வாடிப் போனது. ஒரு கணம் தான் அந்த மன மாற்றம் அவளுக்கு நிகழ்ந்திருக்க வேண்டும். ஏதோ யோசனை தோண்ற மறுகணமே அதை மறந்தவள் போல் அதைக் கடந்து சென்றாள். மனித மனம்தான் எவ்வளவு மாறிக் கொண்டிருக்கிறது… ஒரு உயிர் வீதியில் வெட்டப்பட்டோ, சுடப்பட்டோ கிடப்பதைக் கூட மிகச் சாதரணமாய் கடந்து போகிறது.
அவன் கிட்ட நெருங்க நெருங்க அவனுடைய உதடும் உள்ளமும் உறைந்தது. நெடுநாள் தூக்கத்தை கலைத்த கனவு ஒரு கணம் அவனுக்குள் ஓடி வந்தது. வெட்கம் விடுதலையடைந்து எங்கோ ஓடி மறைந்தது. எப்படியோ அவனுக்கு தைரியம் வந்து விட்டது. அவளிடம் கேட்டே ஆகவேணுமென்டு மனம் முடிவெடுத்தது. கிட்ட சைக்கிளில் நெருங்கிய ஜீவன் ‘ராணி’ என்று கூப்பிட்டான். கூப்பிட்ட சத்தம் வந்த திசையை பார்த்த ராணி தன்னை கூப்பிட்டது ஜீவன் தான் என்று கண்டு கொண்டாள். சடுதியாக சைக் கிளை நிறுத்தி சீற்றிலிருந்து இரண்டு கால்களையும் நிலத்தில் ஊன்றிக் கொண்டு திரும்பிப் பார்க்கவும் ஜீவன் அவள் பக்கம் வரவும் சரியாக இருந்தது. “என்ன ஜீவன் என்னைக் கூப்பிட்டனீங்களா…?” என்று கனிவான குரலில் கேட்டாள்.
“ஓம்…ராணி என்று சொல்லிக் கொண்டு அதற்கு மேல் வார்த்தை வராமல் சொல்லுறைந்து அங்கலாய்ப் புடன் நின்றான். எதுவுமே பேசாமல் நின்ற ராணியின் முகத்தில் சோகமும் வியப்பும் விரவி இழைந்தி ருந்தது. இயல்பாக அவளுடைய முகத்தின் தோற்றம் அப்படித்தான என்று அவனுக்கு தெரியவில்லை. அவளுடைய விழியிரண்டும் நேர்த்திசையில் நிமிர்ந்து அவனை கவனித்து விட்டு நிதானம் இழக்காமல் “என்ன ஜீவன் நீங்கதான் கூப்பிட்டுட்டு ஒன்டும் கதைக்காமல் நின்டால் சரியா…ஏதும் வீட்டில பிரச்சி னையா…?” மௌனித்து நிலத்தை பார்த்துக் கொண்டிருந்த ஜீவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு; “அப்படி ஒன்டு மில்லை…எனக்குத்தான்…”வார்த்தை உடைந்து நின்றது.
“எனக்குத்தான் என்றால் என்ன அர்த்தம்…கொஞ்சம் விளங்குமாப்போல சொல்லுங்க ஜீவன்.”
விளங்கிக் கேட்கிறாளா அல்லது விளங்காமல் தான் கேட்கிறாளா? பிடி கொடுக்காமல் கேட்கிறாளே.
“இல்ல கொஞ்ச நாளாக உங்க மீது எனக்கு விருப்பம் வந்திருக்கு. அந்த விருப்பத்தை கன நாளாய் உங்க கிட்ட சொல்லுறதுக்கு நினைத்தனான். ஆனா உங்களைக் காணும் போது உங்க முகத்தை பார்த்து கேடக்கக் கூடிய தைரியம் என்னிடம் இல்லாமப்போய்ச்சு. இப்பகூட எனக்கு இந்தத் தைரியம் எப்படி வந்ததென்றே எனக்கு தெரியல..”
அவள் அவனிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தக் கேள்வியை. நிமிர்ந்து பார்த்தவள் நிதானம் இழக்காமல்; “ஜீவன் உங்கட உணர்வு புரிகிறது. ஆனா காதல், கல்யாணம் என்கிற விடயத்தில் எனக்கு விருப்பமில்லை. நான் தொடர்ந்து ரீயுசனுக்கு போறதை நிறுத்தி விட்டு ‘பெண் துறவியாக’ போகப் போகி றேன். நான் அடுத்த கிழமையே சிஸ்டர் மடத்துக்கு போறதுக்கு ஏக்கனவே அவர்களோடு கதைத்து விட்டேன். அதுதான் என்னுடைய நீண்ட கால கனவாயிருந்தது. இப்ப நிலமை மோசமாக இருக்கிறது. யாருக்கு என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. சிஸ்டர் மடத்திலேயே இருந்து கொண்டு என்னுடைய படிப்பையும் தொடரப் போகிறேன்”என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் வந்து கொண்டிருந்த திசையிலிருந்து எதிர்திசையில் சைக்கிளை ஓட்டினான். அவள் அதை எதிர் பார்த்தவள் போல் ஒன்றும் பேசாமல் தன்னுடைய சைக்கிளை ஓட்டத் தொடங்கினாள்.
அவனுக்கு கோபம் வந்த மாதிரி தெரியவில்லை. ஆனால் ஏன் வெடுக்கென்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போனான் என்றுதான் அவள் யோசிக்கத் தொடங்கினாள். அவனுக்குள் உட்புகுந்து அவனை ஆட்டிப் படைத்து அவனை சித்திரவதை செய்து கொண்டிருந்த கனவொன்று தானாக வெளியேறியது போல் அவன் உணர்ந்து கொண்டான். அவன் அப்படி உணர்ந்து தன்னைத் திருப்திப் படுத்துவதற்காகவா அல்லது எந்தப் பிரச்சினையையும் அப்படித்தான் எடுத்துக் கொள்வான என்று புரியவில்லை.
அடுத்த நாள் காலையில் ஜீவன் வேலைக்கு போவதற்காக வீட்டு வாசலை விட்டு சைக்கிளை கீழே இறக்கிக் கொண்டிருக்கும் போது ஜீவனின் நண்பன் மூச்சு வாங்க ஓடி வந்தான்.
“என்னடா மச்சான் இவ்வளவு வேகமாக ஓடி வாறாய்…அப்படி என்னட நடந்திட்டுது…?”
“நடக்கக் கூடாததுதான் நடந்துட்டு..”
“அப்படியென்னடா..?”
“ராணியை எல்லவோ யாரோ விடியப்புறம் பிடிச்சுக் கொண்டு போய்விட்டாங்க…ஊரே செத்த வீடு கொண்டாடுது…?”அவன் சொன்னான்.
ஜீவன் விக்கித்துப் போய் உறைந்து நின்றான்.கண்களில் நீர் முட்டியது.
( முற்றும்)

Friday, April 01, 2011


Tuesday, March 29, 2011

‘எங்கும் ஒலிக்கிறதுகாற்று’
கூர்2011
கனடாதமிழ் கலை இலக்கியமலர் (இதழ் -8) வெளியீடு
காலம்: 30.04.2011 சனிக்கிழமைமாலை 6 மணிக்கு
இடம்:Don Montgomery Community Recreation Centr,
(Mid Scarbough Civic Center),
2467, EglintonAve.E.,Scarborough, ON M1K 2R1
(Close to Kennedy subway)


கனடாதமிழ் கலை,இலக்கியத்தைவலிதாய் முன்னெடுக்கும் முயற்சியில் மூன்றாவதுதோற்றம். விழாவுக்கானஅழைப்புஅனைவருக்கும்.

தொடர்புக்கு:
டானியல் ஜீவா (416 500 9016)
தேவகாந்தன்: (416 458 9426)
koorcircle@gmail.com

Monday, January 10, 2011

முருகபூபதியின் மூன்றாவது கரம்

அஷ்ரஃப் சிஹாப்தீன்

சரியாக எண்ணிப் பார்க்கவில்லை. பதினொருபேர் என்று நினைக்கிறேன். ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் கதிரையை எடுத்துக் கொண்டு அவர்கள் காரியாலயத்துக்குள் அமைதியாக வந்தார்கள். பின்னால் அவர்களது பொறுப்பாசிரியை புன்னகை பூத்த முகத்துடன் வந்தார். அமர்ந்து கொள்ளச் சொன்னதும் அவர்கள் அந்நாள் மாணாக்கரின் பவ்வியத்தோடு அமர்ந்தார்கள். அவர்களில் நால்வர் ஆண்கள். ஏனையோர் பெண்கள்.

நண்பர் ஒவ்வொருவராகச் சுகநலம் விசாரித்தார். பெயர்களைக் கேட்டறிந்தார். ஏராளமானோருடன் தான் சம்பந்தப்பட்டிருப்பதால் பெயர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை என்று மன்னிப்புக் கோரும் தொனியில் தெரிவித்தார். யார் யார் சாதாரண தரப் பரீட்சை எடுக்கிறீர்கள்? அடுத்த வருடம் தோற்றவுள்ளவர்கள் யார்? ஏனையோர் கற்கும் வகுப்புக்கள் யாவை? நன்றாகப் படிக்கிறீர்களா? உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சினைகள் உள்ளனவா?

இவை ஒரு தந்தையின் பரிவோடும் ஒரு தாயின் பாசத்தோடும் கலந்து வெளிவந்த வினாக்கள். அவர்கள் மிகவும் மரியாதையுடன் ஒற்றை வார்த்தையில் புன்முறுவல்களினூடே பதிலளித்தார்கள். இருவர் அடுத்த ஆண்டில் க.பொ.த.ப. சாதாரண பரீட்சையும் மற்றுமிருவர் அதற்கடுத்த ஆண்டில் உயர்தரப் பரீட்சையும் எழுதுகிறார்கள்.

தந்தையற்ற இந்த மாணவ, மாணவிகளின் கல்விக்கு அவுஸ்திரேலியாவில் வாழும் நல்லிதயங்களிடமிருந்து பண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நபரோடுதான் நானும் பூ.ஸ்ரீதரசிங்கும் ‘செங்கதிர்’ கோபாலகிருஷ்ணனும் அந்த மாணாக்கரின் முன்னால் அமர்ந்திருந்தோம். அந்த நபர் வேறு யாருமல்ல. எழுத்தாளராக மட்டுமே நாம் அறிந்திருக்கும் லெ.முருகபூபதி.

1988ம் ஆண்டிலிருந்து முருகபூபதி இந்தப் பணியை முன்னெடுத்து வருகிறார். இந்தச் சேவையை முன்னிறுத்திப் பத்திரிகைகளில் செய்திகள் வருவதில்லை. தொலைக்காட்சிகளில் படம் வருவதில்லை. தனது சமூக சேவைக்காக எந்தவொரு இயக்கத்திடமிருந்தும் அவர் பொன்னாடை போர்த்திக் கொண்டதில்லை. ஏன், சக எழுத்தாளர்கள் கூட இதுபற்றி அறிய மாட்டார்கள்.

இந்தச் செயற்திட்டத்தை முருகபூபதி மிக அழகாக நிறுவனமயமாக்கியிருந்தார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் உதவிபுரியும் மனங்கொண்டோரிடமிருந்து மாதம் 20 டாலர்களை உதவித் தொகையாகப் பெற்றுக் கொள்கிறார். அதை தந்தையற்ற ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ கல்வி நிதியாக அனுப்பி விடுகிறார். தான் வழங்கும் பணத்தில் படித்துக் கொண்டிருப்பவர் யார் என்ற விபரம் உதவி வழங்குனருக்கும் தனது கல்விக்கு உதவும் நபர் யார் என்ற விடயம் கற்பவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கிடையே ஓர் உறவை உருவாக்கிக் கொடுத்து விடுகிறார் முருகபூபதி. எனவே இங்கு சந்தேகத்துக்கு இடமே கிடையாது.

முதற்கட்டத்தில் ஆயிரம் மாணவ மாணவிகள் இந்த உதவியைப் பெற்றுள்ளனர். பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக் கொண்டதும் அவர்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு மற்றும் இடம் பெயர்ந்து வெளி மாவட்டங்களில் கற்கும் தந்தையற்ற மாணாக்கர் இந்த உதவிகளை இன்றும் பெற்று வருகின்றனர். பல்கலைக் கழகங்களிலும் இவ்வுதவி பெறுவோர் கற்று வருகிறார்கள். இவ்வாறு உதவி பெறும் ஒரு மாணாக்கர் குழாத்துக்கு முன்னால்தான் ஒரு பாடசாலையின் அறையொன்றுக்குள் நாங்கள் அமர்ந்திருந்தோம்.

இதுகூடத் தற்செயல் நிகழ்வுதான். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்காகப் பிரதேசம் பிரதேசமாகச் சென்று படைப்பாளிகளைச் சந்திக்கும் பயணத்தில் நாங்கள் இருந்தோம். வழியில் பாடசாலையொன்றின் பெயர் குறிப்பிட்டு அங்கு தனக்கு ஒரு சிறிய வேலையிருக்கிறது என்று மட்டுமே எங்களிடம் சொல்லியிருந்தார் முருகபூபதி. இந்த மாணாக்கரை நேருக்கு நேராகச் சந்திக்கும் வரை இந்த முயற்சியின் பின்னால் உள்ள பாரமும் தாத்பரியமும் எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களது முகங்களைப் பார்த்த பிறகு நானும் ஸ்ரீதரும் செங்கதிரோனும் இறுகிப் போயிருந்தோம்.

கால் நூற்றாண்டுகால உள்நாட்டு யுத்தம் பலரது வாழ்வைச் சின்னாபின்னமாக்கியிருக்கிறது. குடும்பங்களைச் சீரழித்து ஒவ்வொரு திசையில் ஒவ்வொருவர் வாழும் துர்ப்பாக்கியத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. ஏதிலிகளாக அலைந்து திரியும் இம்மக்களின் நலனுக்காக தனது ஒரு ரூபாய்க் காசையேனும் செலவளிக்க முன்வராத பல அட்டைக் கத்தி வீரர்கள் யுத்தத்தின் அரசியல் பற்றி இணையங்களில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பத்திரிகை, சஞ்சிகைகளில் போராட்டம் நடத்துகிறார்கள். அவ்வப்போது நடக்கும் கூட்டங்களில் கொடியேந்திக் கும்மியடிக்கிறார்கள். கொடும்பாவியெரித்துக் கோபங்காட்டுகிறார்கள். உயிருக்கு அஞ்சியோடி வேறு நாடுகளில் குடியுரிமையும் பெற்றுக் கொண்ட இவர்கள் யுத்தத்தால் அழிந்து போன மக்களை வைத்து அவர்களின் வாழ்வியலை வைத்து அரசியல் செய்து பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவில் வாழும் முருகபூபதியின் சிந்தனை வித்தியாசமானது. அவர் பட்டிமன்றம் நடத்தவோ போராட்டம் நடத்தவோ தெருவில் இறங்கவில்லi. யுத்தத்தில் நசுங்குண்ட மக்களுக்குத் தான் எதைச் செய்ய முடியும் என்று மட்டுமே அவர் சிந்தித்தார். பாடசாலையைப் பார்க்க முடியாமல் கற்றுவந்த கல்வியைத் தொடர வசதியற்று ஏக்கத்தோடு வாழும் இளைய தலைமுறையினர் கல்வியைப் பெற்றுக் கொள்ள உதவுவது எல்லாவற்றிலும் சிறந்தது என்று முடிவுக்கு வந்தார். தந்தை இழந்தோருக்கு உதவி செய்து அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஊட்டுவதில் இன்று குறிப்பிடத்தக்க எல்லையை அடைந்திருக்கிறார் முருகபூபதி.

உலகத்தில் பலர் தமக்காக மட்டுமே வாழ்ந்து விட்டுப் போகிறார்கள். ஆயிரத்தில் ஒருத்தர் மற்றவர் பற்றிச் சிந்திக்கிறார். லட்சத்தில் ஒருத்தர் தமக்காக வாழும் அதே வேளை மற்றவர்களுக்காகவும் வாழ்கிறார், முருகபூபதியைப்போல. மற்றவர்களுக்காகச் சிந்திக்க ஒரு மனமும் உதவுவதற்காகக் கிடைக்கும் வாழ்க்கையும் பெறும் ஒருவன் பாக்கியசாலியாகிறான். இந்தப் பாக்கியத்தைப் பெற்ற ஒருவனுக்கே கண்ணீர் துடைக்கும் கரங்களின் உன்னதம் புரியும். மற்றவர்களுக்காக வாழ்தலில் உள்ள திருப்தி தெரியும்.

குளிர்பானம் வந்தது. வரும் வழியில் சீனி இல்லாமலும் சீனி குறைத்துப் போட்டுத் தரக் கோரியும் தேநீர் அருந்தி வந்திருந்தோம். அந்தக் கணம் வரை எந்த இடத்திலாவது தேனீர் அருந்த வேண்டி வந்தால் முதலில் ஆளுக்காள் முகத்தைப் பார்த்துக் கொள்வோம். குளிர்பானத்தை கையில் எடுத்த போது நாங்கள் முகங்களைப் பார்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. எதுவும் பேசாமல் எடுத்து அருந்தினோம். வந்தாரை வரவேற்கும் கலாசாரத்துக்கு அப்பால் அந்தக் குளிர்பானத்தின் பின்னணியில் இருந்த அன்பும் அந்தச் சூழலும் சீனி வியாதியையும் இருதய வியாதியையும்; தாண்டிச் செல்லக் கூடியவை என்பதை எமது உடலும் மூளையும் தானாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நம்பினேன்.

அங்கிருந்தவர்களில் ஒருத்தி ஆறாம் ஆண்டு படிக்கும் அழகிய சிறுமி. புன்னகை அவள் முகத்தில் நிரந்தரமாக இருந்தது. அவளைப் பார்த்து, “கொழும்புக்குச் சென்றாயா” என்று புன்முறுவலுடன் கேட்டார் முருகபூபதி. அச்சிறுமி நாணத்துடன் ‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள். ‘இவவுடைய ஸ்பொன்ஸர் இவவை கொழும்புக்கு வரச் சொல்லிப் பார்த்து விட்டுப் போயிருக்கிறா!’ என்று எங்களுக்கு விளக்கம் தந்தார் அவர்.

“உங்களுக்குத் தெரியுமா... ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுமி தனது செலவுகளுக்காகப் பெற்றோர் வழங்கும் பணத்தைச் சேர்த்து ஒரு இளம் பெண்ணின் பல்கலைக் கழகப் படிப்புக்கு உதவிக் கொண்டிருக்கிறாள். கூடிய விரைவில் அவள் தன் பெற்றோருடன் வந்து அந்தப் பெண்ணைச் சந்திக்கவிருக்கிறாள்” என்று எம்மிடம் சொல்லியபடி முருகபூபதி வாகனத்தில் ஏறினார். வாகனத்தின் மூவர் அமரும் ஆசனத்தில் முறையே நான், ஸ்ரீதர், முருகபூபதி என்ற வரிசையில் அமர்ந்தோம். முன் ஆசனத்தில் செங்கதிரோன். வாகனம் நகர ஆரம்பித்தது. பின்னால் அமர்ந்திருந்த என்னுடயதும் ஸ்ரீதருடையதும் உடல்கள் வாகனத்தில் இருக்க ஆன்மாக்களும் சிந்தனைகளும் இன்னும் அதே காரியாலயத்தில் இருந்தன என்பதை அடுத்து நடந்த சம்பவம் உணர்த்தியது.

“பெற்றோர் இல்லாத அந்தச் சின்னப் பிள்ளைய நினைக்கேக்க கவலையா இருக்கு.....” என்று சொல்லத் தொடங்கிய ஸ்ரீதர் சட்டென உடைந்து அழுதார். கண்ணீர் அவரது கண்ணாடியைத் தாண்டித் தெறிக்க எனக்குத் தொண்டைக்குள் ஏதோ வந்து அடைத்தது. “இட் இஸ் ஓகே ஸ்ரீ...... இட் இஸ் ஓகே.... ஈஸி... ஈஸி....” என்று சொன்னபடி ஸ்ரீதரின் தோளில் கைவைத்துச் சாந்தப்படுத்தினார் முருகபூபதி. ஒரு புத்தக நிறுவனத் தலைவராக மட்டுமே நான் அறிந்திருந்த நண்பர் ஸ்ரீதரின் இதயத்துள் பொங்கிப் பிரவகித்த மனிதாபிமானம் என்னை ஒரு கணம் திக்குமுக்காட வைத்தது. திகைப்பிலிருந்து விடுபட்டு, ‘ஸ்ரீ யூ ஆர் க்ரேட்... உனது நண்பனாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

சாதனை மனிதர்களுக்கு நன்றிக் கடனாக உலகம் எத்தனையோ விதமான கௌரவங்களை வழங்கி வருகின்றது. அவை சரியான அளவு கோல்களால் அளக்கப்படாத போது அவை பற்றிய சர்ச்சைகள் உருவாகி உலகம் முழுக்க நாற்றம் எடுக்கிறது. மனிதர்களால் வழங்கப்படும் விருதுகளில் தேசங்களின், பிராந்தியங்களின் அரசியல் லாபங்களும் தேவைகளும் இரண்டறக் கலந்திருக்கின்றன.

ஒரு மனிதன் தனது தன்னலமற்ற சேவையின் பலனைப் பணமாகவோ பதவியாகவோ பெறுவதை விட ஒரு கண்ணீர்த்துளியாகப் பெறுவது எத்தகைய அற்புதமான கொடுப்பினை. அது முருகபூபதிக்குக் கிடைத்து விட்டது. கண்ணுக்கு முன்னால் உணர்வுபூர்வமாகக் கிடைக்கும் ஆத்மார்த்தமான, இயல்பான அங்கீகாரமானது முழு உலகும் பார்த்திருக்க ஒளிவெள்ளத்தில் மிதந்து பெறப்படும் எல்லாவித விருதுகளின் அங்கீகாரத்தையும் விட உயர்ந்தது, உன்னதமானது.

குறிப்பு: இந்தப் பத்தி உண்மையில் முருகபூபதி பற்றியதல்ல. முருகபூபதி சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை ஏற்பாடு செய்த போது அவரை அரசின் கைக்கூலியாகவும், தமிழ் மக்கள் துன்பத்தை மறக்கடிக்க முயன்ற துரோகியாகவும் வர்ணித்தவர்கள் பற்றியது.

தொ.பரமசிவன்

2010 – மார்ச் மூன்றாவது வாரம்…..
”ஈழத்தில் இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற வேளையில் என்னைப் போன்றவர்கள் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டுதான் தூங்கினோம். எத்தனை நாளைக்குத்தான் சாவை கேட்டுக் கொண்டே இருப்பது. நாளைக்கு சாகப் போகிறார்கள் மனிதர்கள் என்று தெரிந்தால் எப்படித் தூக்கம் வரும்?
இந்தப் படுகொலையை நேரடியாக ஆதரித்தவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள் மீதான ஆத்திரம் எனது உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும்.
தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனாலே செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை. கலைஞர் கூப்பிட்டதினால் சிவத்தம்பி போகலாம். நான் போக மாட்டேன்.”
- பேராசிரியர் ”தொ.ப” என்றழைக்கப்படும் தொ.பரமசிவன் “சண்டே இந்தியன்” இதழுக்கு அளித்த பேட்டி.
நன்றி:பாமரன்

Wednesday, December 08, 2010

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாகநாடு குறித்து தேவகாந்தன்

அடுத்த ஆண்டு தை மாதத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கிறது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு. ஒரு அலையாக எழுந்த அதுபற்றிய வாதப்பிரதிவாதங்கள் ஓரளவு இப்பொழுது அடங்கியிருப்பதாகச் சொல்லலாம். இதுபற்றிய எனது கருத்தினை வேறுநாடுகளில் இருக்கும் தமிழ் எழுத்தாள நண்பர் சிலர் என்னிடம் கேட்டிருந்தனர். நானும் மறைக்காமல் எனது கருத்தைக் கூறியிருந்தேன். அதை அவர்கள் விரும்பவில்லையெனத் தெரிகிறது. அதற்கு நானென்ன செய்யட்டும்?

ஓரளவு அடங்கியுள்ள இப் பிரச்சினை மார்கழி அல்லது தை மாதமளவில், அதாவது மாநாடு தொடங்குகிற காலமளவில், இன்னும் கூடுதலான உக்கிரம் பெறவே வாய்ப்பிருக்கிறது. லும்பினி இணைய தளத்தில் ஷோபா சக்தியினால் செய்யப்பட்ட லெ.முருகபூபதியின் நேர்காணல், மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதை எதிர்ப்போரின் மனநிலையை ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்க வேண்டும். அவ்வளவு தெளிவுபூர்வமான நேர்காணல் அது. ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்களின் குணவியல்புகளை வைத்துப் பார்க்கையில், அவ்வாறு நம்ப ஏது எதுவுமில்லை.

ராஜபக்ஷ அரசாங்கத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியுமா, போரினால் பாதிக்கப்பட்ட ஜனங்களின் பகுதிக்குச் சென்று பார்வையிட முடியுமா என்று உப்புச் சப்பற்ற கேள்விகள் மாநாட்டை எதிர்ப்போரினால் கேட்கப்பட்டிருந்தன. இனவெறி பிடித்த ராஜபக்ஷ அரசாங்கம், அதைத் தன் கடந்த கால போர்க் குற்றச் செயல்களினை மறக்கடித்து, விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்றைய தமிழ் வெகுஜனங்களின்மீது தனக்கு எந்தவிதமான மாறுபாடுமில்லையென்பதை சர்வதேச சமூகத்தின் முன்னால் காட்டிக்கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாகப் பாவித்துக்கொள்ளும் என்பது உண்மைதான்.

முள்ளிவாய்க்காலில் அத்தனை கொடுமைகள் தமிழ் மக்கள்மீது புரியப்பட்ட பின்னரும் அதைத் தடுக்க ஒரு புல்லைக்கூடக் கிள்ளிப்போடாத தமிழக முதல்வர் கருணாநிதியை உலகத் தலைவர், செம்மொழியாம் தமிழை வளர்க்க அவதாரமெடுத்தவர் என்றெல்லாம் புகழாரங்கள் சூட்டியதுபோன்று துதிபாட யாரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. செம்மொழி மாநாட்டில் புகழ்பாட முந்தி நின்றவர்களே உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஒதுங்கிக்கொண்டது துர்ப்பாக்கியமானது.

உலகத் தமிழர் மாநாடு முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளுக்கான கண்டன மாநாடாகக் கூட்டப்படவில்லை என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் பல விஷயங்கள் தாமாகப் புரிந்து போய்விடக் கூடியவை.
செல்பவர்கள் எழுத்தாளர்கள். தமது படைப்பையோ, கருத்துச் சார்ந்த படைப்பையோ, அது குறித்த வளர்ச்சி மாற்றம் பற்றிய கருத்துக்களையோ மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டியவர்கள். அவர்கள் ராஜபக்ஷ அரசுக்கெதிராக இதுவரை முன்மொழியாத எந்தக் கருத்தை மாநாட்டில் முன்வைத்துவிடப் போகிறார்கள்?

முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் என் சரீரமும், மனமும் சேர்ந்து பதறிய கொடுமையானது. எனினும் சரியாக முன்னெடுக்கப்பட்டு தவறாக நடத்தப்பட்ட போர் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. நாம் ஒரு யுத்தத்தை இழந்திருக்கிறோம். அவ்வளவுதான். ஆனாலும் இலங்கைத் தேசம் இன்னமும் எனது மண் என்ற மனோவுணர்வே இன்றும் என்னுள்ளிருந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்ற ஆரம்ப வகுப்புகளின் பாடம் என் மனத்தில் இன்னுமிருந்து அசைவு கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

கடந்த ஆண்டு நிகழ்ந்த யுத்த முடிவுக்குப் பின் இன்றுவரை இரண்டு லட்சம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கை சென்று வந்திருக்கிறார்கள் என ஒரு கணிப்பீடு தெரிவிக்கிறது. அந்த இரண்டு லட்சம் பேரும், யுத்தம் நடந்த பூமி எவ்வாறு இருக்கிறது என்று விடுப்புப் பார்க்கப் போனார்களென யாராவது சொல்ல முடியுமா?

சொந்த மண்ணின் ஈர்ப்பு அது. மண்ணோடு மனிதர்களுக்கு உண்டாகும் பந்தத்தின் விசை. இதை விளங்கிக் கொண்டால் கொழும்பில் மாநாடு நடைபெறுவதையும் இந்தத் தளத்தில் வைத்தே புரிந்துகொள்ள முடியும். ஒரு சர்வ தேச மாநாட்டினை கொழும்பில் நடத்துவதென்பது அந்த மண்ணில் எதை நடாத்துவதுக்கும் எமக்குள்ள உரிமையின் வெளிப்பாடு. இந்த உரிமையை எந்தச் சிங்கள பேரினவாத அரசுக்காகவும் எம்மால் விட்டுக்கொடுத்துவிட முடியாது.

எவ்வளவு கொடுமையான, சர்வாதிகாரமான ஆட்சி அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், அது எனது மண். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண். நான் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடித் திரிந்த பூமி. எண்ணும் எழுத்தும் கற்றுணர்ந்த நிலம்.

‘எங்கும் ஒலிக்கிறது காற்று ….எனது நிலம்….எனது நிலம்!’ இவை கவிஞர் சேரனின் கவிதை வரிகள். இந்த ஒலிப்பின் ஆவேசத்திலிருந்து பெரும்பாலும் எவரும்தான் தப்பிவிட முடியாது. என்னால் தப்ப முடியவில்லை. அப்படிப் பார்க்கையில், எனது கருத்துக்களும் அதற்கு இயையவே இருக்கமுடியும். மாநாடு குறித்தாயினும் சரி, எமது இருத்தல் சார்ந்த வேறு எந்த விஷயமானாலும் சரி.
நன்றி

(Thai Veedu-November,2010)

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம்

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை

வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு’ எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியரான ஹரோல்ட் பின்ரர்.
படைப்பாளிகள், கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். ‘வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது’ என்று நிரூபித்தவர்கள்.
சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள சிங்கள, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தமது உயிராபத்துக் கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.
தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலைசெய்தும், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும், சரணடைந்தவர்களைச் சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்களப் பயங்கரவாத அரசு. யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது.
சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பெற்ற போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை அமைப்புக்கள், டப்ளின் தீர்ப்பாயம் போன்ற நீதியமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகின்றன.
தமிழர்களின் குருதியில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறிச் சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தரச் செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியல் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாகக் கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களைக் கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மாநாட்டை, அதுவும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால், சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.
2011 ஜனவரியில் கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கான அதனது ஏற்பாட்டாளர்களின் ஜனநாயக உரிமையை, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் எனும் வகையில் நாங்கள் மதிக்கிறோம் என்றாலும், இன்றைய நிலையில் சிறிலங்கா பயங்கரவாத அரசினால், தன் நலன் சார்ந்து உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கும் அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களை மாநாட்டில் பங்குகொள்ள அனுமதிப்பதன் மூலம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் தனது பக்கமே எனும் தோற்றப்பாட்டினை சிறிலங்கா அரசு தனக்கான அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்க முனையலாம். இதற்கு நாம் எவரும் பலியாகிவிடக்கூடாது.
இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் குருதிச் சுவடுகளின் மீதும், எமது பெண்களதும் எமது பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீதும் நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகக் கூடிய வகையில், நடைபெற்ற மனிதப் பேரழிவுக்குக் காரணமான சிறிலங்கா கொடுங்கோல் அரசு குறித்த எந்த நிலைப்பாட்டையும் முன்வைக்காத, இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகளாக, கலைஞர்களாக உள்ளவர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.
நீதியின்மேல் பசி தாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.
கோவை ஞானி கோட்பாட்டாளர், இந்தியா எஸ். வி. ராஜதுரை கோட்பாட்டாளர், இந்தியா ஏ. ரகுநாதன், திரைப்படக் கலைஞர், பிரான்ஸ் தமிழவன் கோட்பாட்டாளர், இந்தியா நா. முத்துமோகன் கோட்பாட்டாளர், இந்தியா நாஞ்சில்நாடன் நாவலாசிரியர், இந்தியா பொன்னீலன் நாவலாசிரியர், இந்தியா இன்குலாப் கவிஞர், இந்தியா சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர், இந்தியா புவியரசு கவிஞர், இந்தியா பா. செயப்பிரகாசம் சிறுகதையாசிரியர், இந்தியா கலாப்ரியா கவிஞர், இந்தியா பழமலய் கவிஞர், இந்தியா சேரன் கவிஞர், கனடா மாலதி மைத்ரி கவிஞர், இந்தியா மகேந்திரன் கோட்பாட்டாளர், இந்தியா கவிதாசரண் பதிப்பாளர், இந்தியா தேவிபாரதி எழுத்தாளர், இந்தியா புனித பாண்டியன் இதழாளர், இந்தியா காமராசன் பொதுச்செயலாளர்,கலை இலக்கியப் பெருமன்றம், இந்தியா கௌதம சித்தார்த்தன் பதிப்பாளர், இந்தியா அசோக் யோகன் பதிப்பாளர், அசை, பிரான்ஸ் காலம் செல்வம் கவிஞர், பதிப்பாளர், கனடா க. முகுந்தன் இதழாசிரியர், மௌனம், பிரான்ஸ் சுகிர்தராணி கவிஞர், இந்தியா அரசெழிலன் இதழாளர், நாளை விடியும், இந்தியா க. விஜயகுமார் பதிப்பாளர், இந்தியா நிழல் திருநாவுக்கரசு பதிப்பாளர், இந்தியா அ. விஸ்வநாதன் பதிப்பாளர், பதிவுகள், இந்தியா கே. வி. ஷைலஜா பதிப்பாளர், இந்தியா வேனில் கிருஷ்ணமூர்த்தி பதிப்பாளர், இந்தியா அய்யநாதன் ஊடகவியலாளர், இந்தியா புகழேந்தி ஓவியர், இந்தியா பொள்ளாச்சி நசன் ஆவணக்காப்பாளர், இந்தியா கி. பி. அரவிந்தன் கவிஞர், பிரான்ஸ் தமிழ்நாடன் கவிஞர், இந்தியா கண. குறிஞ்சி பதிப்பாளர், இந்தியா பொதியவெற்பன் பதிப்பாளர், இந்தியா எ. நாராயணன் இதழாளர், இந்தியா ம. செந்தமிழன் ஊடகவியலாளர், இந்தியா அமரந்தா மொழிபெயர்ப்பாளர், இந்தியா க. வாசுதேவன் கவிஞர், பிரான்ஸ் மே. து. ராசுகுமார் ஆய்வாளர், இந்தியா செழியன் திரைப்பட ஒளிப்பதிவாளர், இந்தியா தளவாய் சுந்தரம் ஊடகவியலாளர், இந்தியா பாலா கார்டூனிஸ்ட், இந்தியா பாஸ்கர் சக்தி எழுத்தாளர், இந்தியா ஜனநாதன் திரைப்பட இயக்குநர்,இந்தியா அழகிய பெரியவன் சிறுகதையாசிரியர், இந்தியா எஸ். சிறிதரன் சிறுகதையாசிரியர், ஐக்கிய அமெரிக்கா ராஜுமுருகன் திரைப்பட இயக்குநர், இந்தியா யுகபாரதி திரைப்பட பாடலாசிரியர், இந்தியா ஏக்நாத் ஊடகவியலாளர், இந்தியா பிரேமா ரேவதி ஊடகவியாலாளர், இந்தியா லெனின் ஊடகவியலாளர், இந்தியா மு.சந்திரகுமார் விமர்சகர், இந்தியா முனைவர் பஞ்சாங்கம் விமர்சகர், இந்தியா தமிழியம் சுபாஷ் திரைப்பட இயக்குநர், நோர்வே ஆ. சிவசுப்ரமணியன் ஆய்வாளர், இந்தியா டானியல் ஜீவா சிறுகதையாசிரியர், கனடா ச. பாலமுருகன் நாவலாசிரியர், இந்தியா நிழல்வண்ணன் மொழிபெயர்ப்பாளர், இந்தியா பேராசிரியர் கோச்சடை மொழிபெயர்ப்பாளர், இந்தியா எஸ். வேலு விமர்சகர், இங்கிலாந்து சன். தவராசா விமர்சகர், ஸ்விட்சர்லாந்து டி. எஸ். எஸ். மணி பத்திரிக்கையாளர், இந்தியா இரா. முருகவேள் மொழிபெயர்ப்பாளர், இந்தியா குட்டி ரேவதி கவிஞர், இந்தியா லெனின் சிவம் திரைப்பட இயக்குநர், கனடா அருள் எழிலன் பத்திரிக்கையாளர், இந்தியா ஆர். ஆர். சீனிவாசன் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வளர்மதி நாடகாசிரியர், இந்தியா அறிவன் விமர்சகர்,இந்தியா நடராஜா முரளிதரன் பதிப்பாளர், கனடா ஜமாலன் கோட்பாட்டாளர், சவூதி அரேபியா ஹெச். பீர் முகமது கோட்பாட்டாளர், இந்தியா சுப்ரபாரதி மணியன் நாவலாசிரியர், இந்தியா மெலிஞ்சிமுத்தன் கவிஞர், கனடா பெருமாள் முருகன் நாவலாசிரியர், இந்தியா ரோஸா வசந்த் விமர்சகர், இந்தியா ரூபன் சிவராஜா வில்லிசைக் கலைஞர், நோர்வே வி. உதயகுமார் மொழிபெயர்ப்பாளர், இந்தியா ஆர். பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பரளர், இந்தியா லிங்கராஜா வெங்கடேஷ் விமர்சகர், இந்தியா பாமரன் விமர்சகர், இந்தியா அருள்மொழிவர்மன் விமர்சகர், கனடா ரஃபேல் கோட்பாட்டாளர், கனடா சிவதாசன் இதழாளர், கனடா இரவி அருணாசலம் சிறுகதையாசிரியர், இங்கிலாந்து எம். சி. லோகநாதன் கவிஞர், டென்மார்க் பா. சிறிஸ்கந்தன் விமர்சகர், கனடா டி. தயாநிதி நாடகக் கலைஞர், பிரான்ஸ் அ. முருகையன் கல்வெட்டாய்வாளர், பிரான்ஸ் நாச்சிமார்கோவிலடி ராஜன் வில்லிசைக் கலைஞர், எழுத்தாளர், யேர்மனி சாந்தினி வரதராஜன் எழுத்தாளர், யேர்மனி முல்லை அமுதன் கவிஞர், இங்கிலாந்து அய்யனார் விஸ்வநாத் சிறுகதையாசிரியர், இந்தியா கவிமதி கவிஞர், துபாய் பொன்.சந்திரன் விமர்சகர், துபாய் பாரதி தம்பி ஊடகவியலாளர், இந்தியா ஜென்ராம் ஊடகவியலாளர்,இந்தியா அன்பாதவன் கவிஞர், இந்திய அடூர் ஷா நவாஸ் ஆவணப்பட இயக்குநர், இந்தியா சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆய்வாளர், எழுத்தாளர், இங்கிலாந்து கௌதமன் திரைப்பட இயக்குர், இந்தியா ஜெயபாஸ்கரன் விமர்சகர், இந்தியா குணா திரைப்பட இயக்குநர், பிரான்ஸ், கஜேந்திரன் ஊடகவியலாளர், இந்தியா கழனியூரான் நாட்டுப்புறவியலாளர், இந்தியா ஈரோடு தமிழன்பன் கவிஞர், இந்தியா அ. முத்துக்கிருஷ்ணன் விமர்சகர், இந்தியா தொ. பரமசிவம் ஆய்வாளர், இந்தியா சேரன் திரைப்பட இயக்குநர், இந்தியா தங்கர்பச்சான் திரைப்பட இயக்குநர், இந்தியா ஓவியா விமர்சகர், இந்தியா தமிழ்நதி கவிஞர், கனடா ராம் திரைப்பட இயக்குநர், இந்தியா இராஜேந்திர சோழன் சிறுகதையாசிரியர், இந்தியா மா. மதிவண்ணன் கவிஞர், இந்தியா என். டி. ராஜ்குமார் கவிஞர், இந்தியா பாரதி கிருஷ்ணகுமார் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வீ. அரசு ஆய்வாளர், இந்தியா அ. மங்கை நாடகாசிரியர், இந்தியா சிபிச்செல்வன் கவிஞர், இந்தியா தா. பாலகணேசன் கவிஞர், பிரான்ஸ் அஜயன் பாலா சிறுகதையாசிரியர், நடிகர், இந்தியா தேடகம் தோழர்கள், தேடகம், கனடா கீற்று நந்தன் பதிப்பாளர், இந்தியா நேமிநாதன் எழுத்தாளர், இங்கிலாந்து மு. புஷ்பராஜன் கவிஞர், இங்கிலாந்து யமுனா ராஜேந்திரன் கோட்பாட்டாளர், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர் பதிப்பாளர், தமிழியல், இங்கிலாந்து.
கூட்டறிக்கை ஒருங்கிணைப்பாளர்கள் மு. புஷ்பராஜன், இங்கிலாந்து காலம் செல்வம், கனடா கி. பி. அரவிந்தன், பிரான்ஸ் யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து கண. குறிஞ்சி, இந்தியா அருள் எழிலன், இந்தியா கீற்று நந்தன், இந்தியா.
இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைவாழ் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்களை இவ்வறிக்கையில் இணைத்துக்கொள்ள நாங்கள் முனையவில்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!

2010 சனவரி மத்தியில் கொழும்பு சென்றிருந்த வேளையில், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் செம்மொழி மாநாடு பற்றி கருத்துக்கள் கேட்டார்கள். செம்மொழி மாநாட்டின் உயிர் நிலையானது அரசியல் ஆதாயம் பெறுவதில் தங்கியுள்ளது பற்றி- அதற்கான எதிர்வினைகள் எங்களிடமிருந்து தொடங்கியுள்ளது பற்றி எடுத்து வைத்தேன்.
அவர்களுடன் உரையாடிய வேளையில் 2011 – சனவரியில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை ஒழுங்கு செய்யவிருப்பதாகவும், அதன் பொருட்டான ஆலோசனைக் கூட்டம் சனவரி 3ம் நாள் நடத்தப் பெற்றதெனவும் தெரிவித்தார்கள். பேரா.கா.சிவத்தம்பி முன்னிலை வகித்துள்ளார். ஆஸ்திரேலியாவிலுள்ள முருகபூபதி, நடேசன், லண்டனிலுள்ள ராசேஸ்வரி பாலசுப்பிரமணியம் முன்கை எடுத்துச் செய்கிறார்களெனக் குறிப்பிட்டார்கள்.
தமிழினப் படுகொலை முழு வீச்சில் நடந்துள்ள நிலையில், இன்னும் அந்த வங்கொடுமை வெப்பத்தினை இராஜபக்ஷே சகோதரர்கள் இறக்கிக் கொள்ளாத சூழலில் மாநாடு சாத்தியமா என்ற ஐயம் எழுந்தது. அரசு அனுமதியுடன் தான் நடக்கும் என்றார்கள். பன்னிரண்டு பணிகளை முன்னெடுக்கும் ஒரு அறிக்கையினை என் கையில் அளித்து தமிழகம் திரும்பியதும், எழுத்தாள நண்பர்களிடம் விநியோகிக்குமாறு தெரிவித்தார்கள். சில ஐயங்கள் தெளிவுpபடுத்தப்படாததால் அதை நான் ஒருவருக்கும் விநியோகிக்கவில்லை. அறிக்கையில் அவர்கள் எழுதியுள்ள 12 அம்சங்கள் பற்றி ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. எழுப்பியுள்ள கேள்விகள் தருக்க ரீதியில் அர்த்தமுள்ளவை.
“இந்த மாநாட்டிற்கான நோக்கம் உலகத் தமிழர்களிடம் நன்மதிப்பைப் பெற்று இலங்கையில் ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை மறைப்பது தான்” (புதிய பார்வை-16 .5.2010) என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலர் சி.மகேந்திரன் குறிப்பிட்டது, மாநாட்டின் பிரதான அரசியல் நோக்கம் பற்றியதாக இருந்தது.
செம்மொழி மாநாட்டின் ஆரவாரம் காதுகளிலிருந்து அகலும் முன்பே, கொழும்பில் மாநாட்டு முயற்சியினை தீவிரப்படுத்தியுள்ளார்கள் சிலர். இந்தச் சிலர் அங்கும் இங்கும் உள்ள சிலராகும். முன்னது தமிழர் செவிப்பறை கிழித்து – அவர் தம் புத்திமங்கச் செய்ய நடந்த ஆரவாரம் பின்னது இரைச்சல் ஏற்படுத்தாது அதே பாதையில் நடக்கும் அடக்கமான முயற்சி.
கொழும்பு என்றவுடன் இலங்கையும், இலங்கை என்றதும் இராஜபக்ஷேக்களும், இராஜபக்ஷேக்களைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலையும் நினைவில் மேலெழுதல் ஒவ்வொரு தமிழனுக்கு மட்டுமல்ல, மனிதனான எவரொருவருக்கும் வருதல் தவிர்க்க இயலாதது. மனிதன் சிந்திப்பு சக்தி கொண்டவன்.
2010 சனவரி இந்தியக் குடியரசு நாள் விழாவில் தென்கொரிய அதிபர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது இவ்வாண்டின் இந்தியத் திரைப்பட விழா தென்கொரியாவில் நடைபெறுமென இந்தியப் பிரதமர் உறுதிமொழி அளித்தார். முள்ளிவாய்க்காலினுள்ளிருந்து உலக முழுதும் வீசுகின்ற பிணநாற்றத்தை திரைப்பட விழா என்னும் மாயாஜாலத்தால் மறைத்திடலாமென அதைக் கபளீகரம் செய்து கொழும்பில் நடத்திட வந்தார் ராஜபக்ஷே. குடியரசு நாளின் உறுதிமொழி பற்றி பிரதமர் கவலைப்படவில்லை. உலகமயமாதலின் இந்திய நாயகனான பிரதமர், இலங்கையைக் கபளீகரம் செய்யும் முயற்சியாக கண்டதால் ஜஃபா நிகழ்ச்சியினை நடத்த தடையேதும் இல்லாமல் போனது.
இந்தியத் திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்வது ஃபிக்கி - இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். சாதாரண மக்களை வீழ்த்த திரைப்பட விழா; சர்வதேச மூலதனத்தை இறக்க இந்திய தொழில் வர்த்தக விழா - என்ற இரு பிரிவாக இலங்கையை வளைப்பதில் இந்தியப் பிரதமருக்கும் இலங்கை அதிபருக்கும் உடன்பாடுதான். இருவரும் ஒருவழிப் பயணிகளே. இலங்கையின் ராசபக்ஷேக்கு கூடுதலான ஒரு குறிக்கோள் உண்டு. அது கெட்டுப்போய்க் கிடக்கும் உலகை வளைப்பது. இந்த ஃபிக்கி அமைப்பின் ஊடக பொழுதுப்போக்குத்துறையின் தலைவராக இருப்பவர் நடிகர் கமலஹாசன். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றபோது, முதல் பாராட்டைத் தெரிவித்தது இந்த அமைப்பு.
தமிழகத்தில் இதற்கான முதல் எதிர்ப்பைக் கையிலெடுத்தனர் மே-17 இயக்கத்தினர் ஃபிக்கியின் ஊடகத் துறைத் தலைவரான கமலஹாசன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள்.
இலங்கையில் நடைபெறும் விழாவில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கமலஹாசன் வாக்குறுதி கொடுத்தார். ஃபிக்கி அமைப்பின் ஊடகத் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகவில்லை. அதிலிருந்து விலகுவதால் தமிழருக்கு என்ன பயன் என்கிற ரீதியில் தர்க்கம் செய்தார். தமிழர்களுக்கு நன்மை விளைகிறதோ இல்லையோ, ஃபிக்கி அமைப்பின் நிரந்தரச் சுரண்டலுக்கு துணை செய்வதால் அவருக்கு கோடி கோடியாய்ப் பயன் விளைகிறது. தமிழ்த் திரையுலகம்- ஐஃபா விழாவினைப் புறக்கணிப்பது என்ற திடமான முடிவை எடுத்தத பின் கமலஹாசனுக்கு வேறு வழியில்லை என்பதாலும், இந்தி திரைப்பட நடிகர்களின் வீடுகளுக்கு முன், மும்பைத் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களினாலும், இலங்கை ராசபக்ஷேக்கள் நடத்த நினைத்த நாடகம் வெற்றியடையவில்லை.
எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகளது, மூளையில் இலங்கையின் பயங்கரவாதம் பற்றி ஆழமாக நடப்பட்டுள்ள வேர்களைக் களைவது இலங்கையின் அடுத்த உடனடித் தேவை. அங்கும் இங்குமுள்ள சாதாரண சனக்கூட்டத்தைக் கவர எடுத்த முயற்சி தோல்வியுற்ற நிலையில் சிந்தனையாளர்களை இழுக்க சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடலுக்கு இலங்கை தன் ஆதரவாளர்களை இறக்கி விட்டுள்ளது.
“சர்வதேச ரீதியாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் முயற்சி’’
மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் விடுத்துள்ள அறிக்கை இவ்வாறு தொடங்குகிறது. ஈழத் தமிழராயினும், புலம்பெயர் தமிழராயினும் தமக்கென ஒரு தாயகம் கண்டு, சுயநிர்ணய உரிமையைக்கொண்டாடுதல் அவர்களின் விருப்பமாகும்’ அதைத் தடுத்து தமிழின அடையாளமே இல்லாமல் செய்கிற சிங்களப் பேரினவாதத்தின் மீதானது அவர்களது வெறுப்பு. இந்த இரு எல்லைகள் மட்டுமே தமிழினத்தின் விருப்பாகவும்,வெறுப்பாகவும் இருக்க முடியும். இந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து, புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றிணைதல் என்பது, புலம்பெயர்ந்த தமிழர்களில் தமிழீழ விடுதலைக்கு எதிராகவும், குறிப்பாய் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் நிற்கும் சிலரை ஒன்று கூட்டும் காரியமாகக் காணமுடியும். அவ்வாறான புலம்பெயர் அறிவு ஜீவிகளை இணைத்து ஒற்றைச் சிங்கள நோக்கத்துக்கு உள்ளடக்கமாய் ஆக்குவது என்பதாகவே முடியப் போகிறது.
விடுதலைப்புலிகள் காலத்தில் சாத்தியப்படாததை - இந்தச் சுதந்திர ஆட்சியில் சாத்தியமாக்குகிறோம் என்று சில ஓட்டை உடைசல்கள் முனங்குவதை அறிய முடிகிறது.
எழுத்துச்சுதந்திரம், கருத்துரிமை மறுக்கப்பட்ட இராணுவ பூமியில் எதைப்பேச, எழுத வேண்டுமென அவனே வரையறுக்கிறான். மாநாட்டில் இலங்கை அரசினையோ, இராஜபக்ஷேக்களையோ விமரிசித்துப் பேச இயலுமா? அவ்வாறு விமரிசிக்காமல் தமிழினத்தை அழித்தவனை விமரிசிக்காமல் தமிழை செழுமைப்படுத்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்.?
“அவன் ஒரு ஆங்கிலேயன் என்ற கவிதை உண்டு.”
“அவர் ஓர் ஆங்கிலேயர்
அவரே அதைக் கூறினார்
அந்தப்பெருமை அவரையே சாரும்
அதாவது அவர் ஓர் ஆங்கிலேயர்
அவர் ஒரு ருசியனாக இருக்கலாம்
ஒரு பிரெஞ்சுக்காரரார், ஒரு துருக்கியர்
இத்தாலியனாக இருக்கலாம்;
பிற தேசங்களினவராக மாற
அனைத்து ஆசைகளிருந்தாலும்
அவர் ஓர் ஆங்கிலேயராகவே இருக்கிறார்
-கில்பர்ட் 1878
அதுபோல், எந்த தேசத்தில் வாழ்ந்தாலும், அத் தேசத்தவராக மாறும் ஆசைகளிருந்தாலும் புலம்பெயர் ஈழர்-தானொரு ஈழத்தமிழராக இருக்கவே விரும்புகிறார். ஈழத் தமிழர் என்றொரு பெருமித அடையாளத்துடன் நடவடடிக்கைகளை ஒழுங்கு செய்யவே எண்ணுவார். அவர்களுடைய இந்தப் பெருமிதம் கடந்த காலம் சார்ந்ததல்ல; சமகாலத்தின் உரிமைப் போராளி என்ற பெருமிதத்தினை அடியாகக் கொண்டது. அது இன விடுதலைப் போராட்டப் பெருமிதம். இனவிடுதலைப் போராளி என்ற உணர்வுடன், உரிமைப் போராட்டச் செயல்பாட்டுனுள்ள புலம்பெயர்தமிழர்களால் ஈழத்தாரின் வாழ்வு, பண்பாடு, மொழிக்காப்பு என அனைத்தும் அவர்களின் வழிகாட்டலில் அமையும்; அவர்களை உரிமைப் போராட்டத் தடத்திலிருந்து இறக்கி, சிங்கள இனக் கரைப்புக்குள் செலுத்தும் தடம்மாறு வேலையை - கொழும்பில் நடக்கும் மாநாடு செய்ய இருக்கிறதா? கொழும்பில் நடக்கும் என்றால் சிங்கள அதிகாரத்தின் இசைவுடன் தானே நடக்க முடியும்?
ஈழத்தில் நசுங்கி, நைந்துபோன மக்களது உணர்வு நிலையிலிருந்து- மேலோங்கிய இன்னொரு மட்டத்தில் புலம்பெயர் ஈழர்கள் இருந்தாலும், அதுவே மற்றொரு சாதகமாக மாறியுள்ளது. உலக அளவில் பரந்து வாழுவதால், வாழுகிற நாடுகளில் உரிமைக்குரல் எழுப்புவதும், ஒன்றிணைப்பதும் சாத்தியமாகியுள்ளது. லண்டனில் ஓரிரு மாதங்கள் முன்னர் உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநாட்டில் வெளி விவகாரத்துறை அமைச்சர் மிலிபாண்ட், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழின உரிமை மீட்டெடுக்கப்படட வேண்டுமெனப் பேசினார்கள். இலங்கைப் பிரதமர் ரத்னசிறிவிக்கிரம நாயக உடனே “வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கிளைகளை வலுப்படுத்த சில வல்லரசுகள் முயற்சிகளை மேற்கொள்கின்றன. இலங்கை ஆசிய நாடுகளில் வலுவான நாடாக வளருவது சில சக்திகளுக்குப் பிடிக்கவில்லை’’ என சீற்றத்தைக் கொட்டினார்.
ஈழத்தமிழர் பிரச்சனையைக் கையாண்டதில் உலக நாடுகளுக்கு அவரவர் நலனே முதன்மையாக வந்தது. அதைக் கையாண்டது குறித்து அவர்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் கிடையாது. ஓரினத்தின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதில் அவை பெரும் பங்கு வகித்ததை ஓரங்கட்டி விட முடியாது. அந்த நாடுகளின் காதுகளில் மறுபடி நுழைக்கவும், அழுத்தம் தரவுமான கடமையினை புலம்பெயர் ஈழர்கள் செய்து வருகிறார்கள். அவர்களைக் குறிவைத்து சலனப்படுத்தும் காரியத்தை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் செய்கிறார்கள் எனத் தோன்றுகிறது.
இந்த நேரத்தில் 1974-ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ்ஆராய்ச்சி மாநாடு நிகழ்வு ஒரு படிப்பினையாக அமைகிறது. கொழும்பில் நடத்த முயலுதலை ஏன் தமிழ்மக்கள் மட்டுமே செறிவாய் வாழும் யாழ்நகரில் நடத்தக்கூடாது, ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.
1972ல் புதிய யாப்பைக் கொண்டு வந்தது சிங்கள மொழி, மத, பண்பாட்டு, அரசியல் ஆதிக்கத்தை நிலைப்படுத்தியதன் காரணமாய் சிறீமாவோ பண்டார நாயகாவின் முகம் சர்வதேச அளவில் சர்வாதிகாரத்தின் கோரமுகமாக ஆகியிருந்தது. தானொது இனச்சமத்துவம் பேணுபவர், சனநாயகவாதி என்ற புதிய முகத்தை மாட்டிக் கொள்ளும் தேவையில் கொழும்பில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தி, பெயர்வாங்கிக் கொள்ள நினைத்தார். தமிழ் வளர்த்த யாழ் மண்ணில் தமிழர்கள் தங்களின் தலைநகரில் அம்மாநாட்டை நடத்தியே தீருவோம் எனப் போராடி வெற்றி பெற்றார்கள். அந்த வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாத சிரிமாவோ பண்டாரநாயகா ஒன்பது தமிழ் உயிர்களை மாநாட்டு அரங்கிலேயே கொன்று களிப்படைந்தார்.
“அன்று பண்டார நாயகா இருந்த நிலையைப் போல இராசபக்ஷே இன்று பன்னாட்டுஅளவில் முகமிழந்து போயிருக்கிறார். அங்கு நடக்கும் கொடுமைகளை விசாரிக்க பன்னாட்டு அவை(ஐ,நா) முயலும்போது அதைக் கூட மோசமான முறையில் தாக்கி மூடச் செய்த அரசாக அவருடைய அரசு அமைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள், பன்னாட்டு எழுத்தாளர்கள் ஆகியோரைக் கொழும்பிற்கு அழைத்து அவர் மாநாடு நடத்துவதற்குக் காரணமே தான் மனித உரிமைகளை மதிப்பவன் என்று ஒப்பனை செய்து பன்னாட்டு அரங்கில் காட்டிக் கொள்ளத்தான்’’ என்று மூத்த ஈழ எழுத்தாளர் எஸ்.பொ கூறுவது உண்மை.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை கொழும்பிலே நடத்த வேண்டுமென சிரிமாவோ முனைப்புச் செலுத்தியபோது, மறுப்புக் காட்டாமல் அதற்கு முட்டுக்கொடுத்தவர் கா.சிவத்தம்பி. அதனால் யாழ் நகரில் 1974ல் நடைபெற்ற மாநாட்டில் சிவத்தம்பி பங்கேற்கவில்லை என்று உண்மையையும் இங்கு கருதிப் பார்க்க வேண்டும். அந்த சிவத்தம்பிதான் இப்போதும் கொழும்பு மாநாட்டுக்கு முன்னிலைப் படுத்தப்படுகிறார்.
சிங்கள அரசை நம்பி ஒருபோதும் காரியம் ஆற்றக்கூடாது என்பதை உலக நாடுகள் பல உணர்ந்துள்ளன. உலக நாடுகள் உணர்ந்த அளவு கூட ஈழத் தமிழர்கள் குறிப்பாய் கொழும்புத் தமிழர்கள் உணரவில்லையோ என்கிறபோது, ரணமாகக் காந்துகிறது. சிங்கள அரசை நம்பி இது போன்ற காரியங்களை முன்னெடுக்கிறார்கள் என்றால் உள்ளறுப்பு வேலைகள் செய்கிறவர்கள் யார் என்ற கேள்வி சரியே.
இன்றைய தகிக்கும் நிலையில், தமிழர் கோருவது தமிழை வளர்ப்பது அல்ல; தமிழை வளர்ப்பதற்கான அரசியல் அதிகாரத்தையே. சிங்களத்துக்கு சமமாகத் தமிழ் என்று நிறுவுவதற்கான அரசியல் அதிகாரத்தைக் கேட்பதே முதன்மைப் பணியேயன்றி உலகத்துக்கும் மேலாகத் தமிழைக் கொண்டு செல்லும் பணி அல்ல. அதைச் செய்வதாகக் கூறித்தான் 350 கோடி செலவில் செம்மொழி மாநாடு எல்லா ஒப்பாரிகளையும் பாடி முடித்துவிட்டதே! மொழி வளர்ச்சிக்கு அரசியல் உரிமையே முதற்தேவையாகும் என்பதை எவரும் உணர்வர். ஆட்சியில், நிர்வாகத்தில், கல்வியில், வேலை வாய்ப்பில் எல்லா இனங்களின் வாழ்வையும் நிர்ணயிப்பதில் சிங்களம் எதனால் சாத்தியமாயிற்று? அரசியல் மேலாண்மையில்தான். சிங்களத்திற்கு சமமாக தமிழ்மொழியை வளர்ச்சி செய்ய வேண்டுமெனில் மொழி வளர்ச்சிக்கு முன்னிபந்தனையாய் ஈழத்து மண்ணில் அரசியல் அதிகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அரசியல் பற்றி எண்ணிப் பார்க்காமல் மொழி வளர்ச்சிக்கு தலைகொடுக்கப் போகும் வித்தையை எவ்வாறு செய்யப் போகிறார்கள்?
தமிழர் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் என்ற போர்வையில் ராஜபக்ஷேக்கள் வேறொரு காரியத்துக்கு வழிவகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடிமைச் சமூகமாக ஆக்கப்பட்ட தமிழினத்தை - சிங்கள இனக் கரைப்பில் செலுத்துவதுதான் அது. தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது அதிகாரமல்ல; அபிவிருத்திதான் என்று மொழி வளர்ச்சிக்கு வழி அமைப்பதுபோல் காட்டுவதும் ஒரு உத்தியாகும்.
“வளர்ச்சியை விரும்புகிற ஒரு தேசிய இனம் முதலில் தனது சுதந்திரத்தைப் பெற வேண்டும். அவர்களுடைய தேசிய சுதந்திரம் இரண்டாம் பட்சம் என மற்றவர்கள் அவர்களுக்குக் கூறுவது தேவையற்ற வேலை’’ என்று ஒரு சமயத்தில் போலந்து பற்றி காவுட்ஸ்கிக்கு மார்க்ஸும் ஏங்கல்ஸும் எழுதினார்கள்.
அயர்லாந்திலுள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு அளித்த டப்ளின் அறிக்கை “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இலங்கை அரசு, சூலை 2006-ல் போர் தொடங்கிய நாள் முதல் ஏப்ரல் 2009 வரை அய்க்கிய நாடுகள் அவையின் ஆவணங்கள்படி, வான்வழித் தாக்குதல், கனரக ஆயுதத் தாக்குதல், காரணமாய் நாளொன்றுக்கு 116 பேர் கொல்லப்பட்டனர். இறுதிச் சில நாட்களில் மட்டும் 20000 பேர் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு, பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டன’’ என முன்வைக்கிறது. அதன்படி சூலை 2006 முதல் ஏப்ரல் 2009 வரை கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரம். அதன் பின் 20000 என்றால் ஒரு லட்சத்து 42 ஆயிரம். ஆனால் கடைசி நாட்களில் கொல்லப்பட்ட மக்கள், போராளிகளின் எண்ணிக்கையையும் கணக்கிட்டால் இரண்டு லட்சம் பேர் என்று வருகிறது.
இதன் காரணமாக மட்டுமல்ல எல்லாக் காரணங்களின் படியும் “இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்டதிட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனிநாடு ஒன்றை உருவாக்கிக்கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்’’ என மனித உரிமையாளரும், பேராசிரியருமான பிரான்சிஸ் பாய்ல் கூறியுள்ளார்.
இவ்வாறான சிந்தனைகளால் வார்க்கப்பட்டு, வழி நடக்கும் புலம்பெயர் ஈழர்களை தடம் மாறச் செய்ய – மொழி வளர்ச்சி, கலை, இலக்கிய வளர்ச்சி என்ற பெயரில் கொழும்புத் தமிழர்கள் முயலுகிறார்கள். இதனை இராஜபக்ஷேயிசத்தின் இன்னொரு பக்கம் என்கிறோம். தடம் மாறுதல் ஆபத்தானது. ஆசிய தடகளப்போட்டி நடைபெற்றபோது, ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவதாய் வருவார் என எதிர்பாக்கப்பட்ட ஒரு இந்திய வீராங்கனை முதல் சுற்றின் இறுதியில் தடம் மாறி ஓடியதால், தகுதி இழந்தவராய் ஆக்கப்பட்டார். என்ன இப்படிச் செய்துவிட்டாயே என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வருத்தப்பட்டதாகக் கூறுவார்கள். அதுபோல் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களை மொழிவளர்ச்சி, கலை, இலக்கிய மேம்பாடு என்று தடம் மாற்றி ஓட வைக்கும் பொறுப்பு கொழும்புத் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தமிழர் கோருவது மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி அல்ல என்பதை, ஈழத்து அரசியல் ஆய்வாளர் தனபாலா முன்வைக்கிறார். “தமிழர் கோருவது அபிவிருத்தி செய்வதற்கான அரசியல் அதிகாரத்தைத் தான். அதைத்தான் நாம் தீர்வு என்கிறோம். அதாவது நாம் அபிவிருத்தியை நிராகரிக்க வில்லை. எமது வாழ்நிலை, பழக்க வழக்கம், பண்பாடு என்பவற்றிற்கு இசைவான அபிவிருத்தியை நாம் செய்வதற்கு எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று கோருகிறோமே தவிர, தமிழினத்தைச் சிங்கள இனமாகக் கரைப்பதற்கு ஏதுவான பண்பாட்டுக் கொலையைச் செய்யவல்ல சிங்கள மேலாதிக்க அரசியல் ஆதிக்கத்தை அல்ல; இங்கே இலங்கை அரசு ஒடுக்கு முறையை இன்னொரு தளத்திற்கு அபிவிருத்தி என்ற அழகான வார்த்தைப் பிரயோகம் மூலம் இராசதந்திர ரீதியாக நகர்த்தியுள்ளது. எனவே அரசியலைப் பற்றிக் கதைக்க மாட்டோம்; அபிவிருத்தி பற்றி கதைப்போம் என்பது ஒடுக்குமுறைக்கான இன்னொரு பெயராகும்” (பொங்கு தமிழ் இணையம் - 23.7.2010)
அரசியல் பற்றி உதடு பிரிக்காமல், மொழிவளர்ச்சி, கலை இலக்கிய மேம்பாடு என்ற உச்சாடனம் செய்து, ஒடுக்கு முறைக்கு துணை போக ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்பது தெளிவாய்ப் புலப்படுகிறது; அதுவும் இராசபக்ஷேக்கள் மீதான போர்க்குற்ற விசாரணை தீவிரப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில் உலக அளவில் அதனை உடைக்க எடுக்கும் முயற்சிக்கு இந்த நேரத்தில் அறிவூஜீவிகளின் ஒன்றிப்பு தேவைப்படுகிறது. இந்த வகைச் செயல்பாட்டுக்குள் கண்டு கொள்ள முடியாதவகையில் ஒளிந்து கொண்டுள்ளது சிங்கள ராசதந்திரம்; அரசியல் மேலாண்மையில் இருப்பவர்கள் அறிவுச் சூழ்ச்சியிலும் மேலாண்மை கொண்டிருப்பார்கள். அந்தச் சிங்களர் ஒருபோதும் “மோட்டுச் சிங்களர்” (முரட்டுச் சிங்களர்) அல்ல; அடிமைச் சமூகமாக்கப்பட்ட நாம் தான் முட்டாள்களாக இருக்கிறோம்.
இந்திய அரசும் இலங்கை அரசும் கை கோர்த்து நடத்திய திரைப்பட விழாவைத் தோல்விகாணச் செய்த தமிழர் ஒற்றுமை நமக்கு ஒரு முன்மாதிரியாகும். இந்த ஒற்றுமை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்கவும் அவசியப்படும் தருணமிது. குறிப்பாக தமிழக எழுத்தாளர்களை, புலம்பெயர் எழுத்தாளர்களை அழைக்கிறோம். நடைபெறப் போகும் கொழும்பு மாநாட்டில் நிச்சயமாக நாங்கள் இல்லை என்போம்.
- பா.செயப்பிரகாசம் (jpirakasam@gmail.com
10 முதல் குறுக்கு தெரு, பாரிநகர், பாக்கமுடையான் பட்டு, புதுச்சேரி 605 008
நன்றி:கிற்று

Tuesday, December 07, 2010

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு!

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு உலகமெங்கும் ஆதரவு இருப்பதாக அந்த மாநாட்டுக் குழுவினர் தெரிவித்து வரும் வேளையில், மாநாடு குறித்து தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களிடம் தொலைபேசி வாயிலாகக் கருத்து கேட்டோம். அதன் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

எழுத்தாளர் மதிவண்ணன் (தலைவர், அருந்ததியர் உள் ஒதுக்கீடுப் போராட்டக் குழு): கடந்த ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில், சர்வதேச சமூகம் எப்படி வெறும் பார்வையாளராக‌ இருந்ததோ அதே போல் தான் தமிழ்நாட்டில் இருந்த தமிழர்களும் குறிப்பிட்ட 5 சதவீத தமிழர்களைத் தவிர மற்றவர்கள் வெறும் பார்வையாளர்களாய்த் தான் இருந்தார்கள். இந்தியா இதில் ஒரு கூட்டாளியாகக் கூட இருந்தது. ஆனால் இந்தியாதான் இலங்கையின் ஒரே கூட்டாளியா என்று கேட்டால் ஒரே கூட்டாளி இல்லை என்பது வேறு விஷ‌யம். போர் முடிந்த பின் சர்வதேச சமூகம் விழித்து எழுந்ததாய் சும்மாவது காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. உயிருக்கு போராடியபோது வராம‌ல் செத்த பின் வந்து விசாரணை செய்கிறேன் என்று சொல்லுவதே மிகத் தாமதம் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் எதுவும் செய்யாததைக் காட்டிலும் கண்காணிப்புக்கு உட்படுத்துவது என்பது ஈழ தமிழருக்கு உதவாவிட்டாலும், உலக மக்களுக்கு இதுபோல் நடவாமல் இருக்க உதுவும். அந்த அளவில் இலங்கை அரசை விசாரணை செய்வது நியாயமானது. அது தொடர்பான நடவடிக்கைகள் தான் இப்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

இப்போது இந்தச் சூழலில் இலங்கை அரசாங்கம் தன்னை நியாயவான் என்பது போலவும், போருக்குப் பின் இலங்கை அமைதியாக இருக்கிறது என்று காட்டிக் கொள்ளும் வகையிலும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் அங்கு நடந்த சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பெரும்பாலான திரைத்துறை நடிகர்கள் கூட விரும்பியோ, விரும்பாமலோ அங்கு போகாமல் தவிர்த்து விட்டார்கள். இதில் அவர்கள் போகவில்லை என்பதே முக்கியமான விசயம். இப்படி திரைத்துறை நடிகர்களிடம் இருந்த தன்மையும், ஈடுபாடு உணர்வும் நம் எழுத்தாளர்களிடம் இல்லை என்றால் அது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷ‌யம். எழுத்தாளர் மாநாடு நடத்த வேண்டுமென்றால் இலங்கையை விடவும் தமிழ்நாடு மிக வசதியான இடமாக இருக்கக்கூடும். ஏன் மலேசியாவில் கூட நடத்தலாம். அதில் ஒரு பிரச்சனையும் கிடையாது. இலங்கையை போர்க் குற்றத்திற்கு உட்படுத்துதல், தண்டனை பெற்றுத் தருதல் போன்றவைகள் குறித்து இந்த எழுத்தாளர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும். அப்போது அவர்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்று நாம் ஆராய்வதற்கோ, ஏற்றுக் கொள்வதற்கோ வசதியாக இருக்கும்.

எழுத்தாளர் அழகிய பெரியவன்: கொழும்புவில் நடக்கப் போவதாக அறிவித்து இருக்கிற தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு, மிக பகிரங்கமாக அப்பட்டமான மனித உரிமை மீறலை நடத்திய ராஜபக்சே அரசுக்குத் துணை போகும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. எங்கெல்லாம் அடக்குமுறைகள் இருக்கிறதோ, மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் அதை எதிர்க்க வேண்டிய கடமை கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது. உலக அளவில் மனித உரிமை மீறல்களை எதிர்க்கிற விஷ‌யத்தில் எழுத்தாளர்கள் முன் வரிசையில் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்தது தான். அந்த அடிப்படையில் இந்த மாநாட்டை தமிழ் எழுத்தாளர்கள் புறக்கணிப்பது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஈழத்தில் எந்த மனித உரிமை மீறலும் நடபெறவில்லை என்று சொன்னால் ஏன் ஐ.நா அமைத்த தூதர் குழுவையும், சர்வதேசிய பத்திரிக்கையாளர்களையும் ராஜபக்சே அரசு அனுமதிக்க மறுக்கிறது? முகாம்களைப் பார்வையிடுவதற்கு ஏன் அனுமதிக்க மறுக்கப்படுகிறது? தமிழில் ஒரு சொல்வடை உண்டு "மடியில் கணம் இல்லாதவன் பயப்படத்தேவையில்லை" ஆனால் இங்கு அவர்கள் மடியில் கணம் இருக்கிறது. அந்த அளவுக்கு அவர்கள் அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்ததாக தணிக்கை, தடையை மீறிய செய்திகள் உணர்த்துகின்றன. இப்படியாக ஒரு இன ஒடுக்குமுறைக்கு, இன அழிப்பிற்கு துணை போகக்கூடிய அந்த அரசின் தலைமையகத்தில் நடைபெற இருக்கிற மாநாட்டில் தமிழ் எழுத்தாளர்கள் பங்குபெறுவது என்பது ஒரு வகையில் இதையெல்லாம் அங்கீகரிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

இந்த இடத்தில் நான் இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். போராட்டக் குழுக்களை, புலிகளை ஒழித்துவிட்டதாக சொல்லுகிற ராஜபக்சே அரசு அதைக் கொண்டாடுகிற வகையில் கிளிநொச்சி வவுனியா போன்ற இடங்களில் வந்து தங்கள் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இது போல் தமிழ் மக்கள் வாழும் அனைத்து இடங்களிலும் கூட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ் பகுதிகளில் இருக்கும் தமிழ் அடையாளங்கள் சிதைக்கப்படுகிறது என்றெல்லாம் நமக்கு செய்திகள் வருகின்றன. இதை எல்லாம் கேட்காமல் நியாயமாக அங்கு என்ன நடந்தது என்று வலியுறுத்தாமல் அவர்களுடைய குரலுக்கு ஒத்துப் போவது என்பது, அவர்களுடைய செயல்களை அங்கீகரிப்பதாகத்தான் இருக்கும். இலங்கை அரசு மீது வெளிப்படையான ஒரு விசாரணை நடந்து, அதன் போர்க்குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்பு, இது மாதிரியான கூட்டங்கள் நடத்தும்போது பங்குபெறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அதை விடுத்து எதையும் நிறைவேற்றாமல் நடத்தப்படும் இந்தக் கூட்டம் ஒரு கண்துடைப்பாகத்தான் அமையக் கூடும் என நான் நினைக்கிறேன். ஆகையால் ஒரு தமிழ் எழுத்தாளனாய் இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகொள் விடுக்கிறேன்.

பேரா. ஹாஜா கனி, (பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்): எழுத்து என்பது ஆக்க சக்தி. அதனால்தான் அதை creativity என்றும், எழுத்தாளர்களை creative people என்றும் அழைக்கிறார்கள். அத்தகைய ஆக்க சக்திகளாக உலகில் புதியன படைக்க விரும்பும் எழுத்தாளர்கள் ஒருநாளும் அழிவு சக்திக்கு துணை போக முடியாது. இலங்கைப் பேரினவாத அரசு என்பது மிகப்பெரும் அழிவு சக்தி. அந்த அழிவு சக்தியின் நிழலில் ஒரு எழுத்தாளர் மாநாடு நடத்துவது என்பதே அதற்குத் துணைபோவது போலத்தான். எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு, சொந்த சகோதரர்களுக்கு எதிராக செயல்பட்ட விபீடணனை இப்போது இலக்கிய உலகிலும் பார்க்க முடிகிறது. இவர்கள் இலக்கிய ‘கருணா’க்கள். வாளின் முனையைவிட பேனாவின் முனை வலியது என்பது நாம் பள்ளியில் படித்தது. ஆனால் இலங்கை அரசு தன் மீது படிந்துவிட்ட இரத்தக் கறையை பேனாவின் மைக்கறையால் மறைத்துவிடலாம் என்று இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. அதனுடைய எதிர்பார்ப்பும் இழிவானது; அதற்கு இசைந்து போவது அதைவிடவும் இழிவானது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்: உலகம் முழுவதும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் ஒரு இடத்தில் சந்திப்பது என்பது நல்ல செய்திதான். ஆனால் அந்த சந்திப்பு என்பது ஏன் கொழும்பில் நடைபெற வேண்டும்? அங்கு நடத்தப்படுவதன் நோக்கமென்ன? அங்கு என்ன பேசப் போகிறார்கள்? இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு குறித்தோ, போர்க்குற்றங்கள் குறித்தோ பேச முடியுமா? அங்கு தடை செய்யப்பட்ட பத்திரிக்கைகள், கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்கள் குறித்து ஒரு வார்த்தையேனும் பேச முடியுமா? உலகமெங்கும் உள்ள எழுத்தாளர்கள் அதிக அக்கறை கொள்ளும் மனித உரிமைகள் பற்றி இலங்கையில் பேச முடியுமா? ஈழத்து இலக்கியத்தின் பெரும்பகுதி என்பது போர் குறித்தும், அதனால் ஏற்பட்ட துயரம் தோய்ந்த அகதி வாழ்க்கை குறித்தும் எழுதப்பட்டதுதானே! அந்த ஈழத்துப் போர் இலக்கியம் பற்றி நேர்மையாகப் பேச முடிகிற சூழல் அங்கு நிலவுகிறதா? மாநாட்டில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள் தாங்கள் விரும்புகிற இடங்களுக்குச் சுதந்திரமாக செல்லும் உரிமை அங்கு இருக்கிறதா? இதற்கெல்லாம் இல்லை என்பதுதான் பதில் என்றால், அந்த மாநாடு ஏன் இலங்கையில் நடத்தப்பட வேண்டும்? நிச்சயமாக என்னால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது.

எழுத்தாளர் மாலதி மைத்ரி (ஆசிரியர், அணங்கு இதழ்): எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலேயும் சிலர் ஆதாயம் தேட முயற்சிப்பார்கள். எடுத்துக்காட்டாக பிரஞ்சுப் போராட்டத்தில், போராட்டத்திற்குப் பின் போராட்டத்தை ஆதரித்தவர்கள் எதிர்த்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒரு அச்சு தொழிற்சாலை நிறுவனர் பிரஞ்சு போராட்டத்திற்கும் உதவி செய்திருக்கிறார்; ஜெர்மனிக்கும் உதவி செய்திருக்கிறார். ஜெர்மனி பிரஞ்சு மண்ணில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட பின் அந்த அச்சுத் தொழிற்சாலை நிறுவனரின் மகனுக்கு தன் தந்தை செய்த இந்த இழிசெயல் தெரிய வருகிறது. இதனால் அவன் அடையும் குற்றவுணர்ச்சியைத்தான் ஒரு திரைப்படமாக்கியிருந்தார்கள். திரைப்படத்தில் ஒவ்வொரு முறையும் சமூகம் அந்தப் பையனை 'நீ ஜெர்மனி படைகளுக்கு உதவிச் செய்தவனின் பிள்ளை' என்று சுட்டிக்காட்டும்போதெல்லாம் அவன் குற்றவுணர்ச்சி அடைவான். ஆனால் இத்தகைய குற்றவுணர்ச்சி நம் தமிழ் சமூகத்திற்கு இல்லாமல் போய்விட்டது.

இதேபோல் "My Father" என்ற ஒரு ஆஸ்திரேலியப் படம். அதில் நாசிப் படையில் உயர் அதிகாரியாய் இருந்த ஒருத்தர் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி வருவார். அந்த உயர் அதிகாரி தன் உண்மை முகத்தை மறைத்து வாழ்ந்து கொண்டு இருக்கும்போது, அவரது உண்மை முகம் அறிந்த மகள் அவரை வெறுக்க ஆரம்பிப்பாள். இப்படி இரண்டாம் தலைமுறையிடம் இருக்கவேண்டிய Ethics, தன் மொழிக்கோ தன் இனத்திற்கோ தன் நாட்டிற்கோ எதிராக நிற்பவர்கள் இரத்த உறவுகள் என்றால் அதற்காக அவமானப்படுகிற ஒரு மனோநிலை ஐரோப்பிய சமூகத்திடம் இருக்கிறது. ஆனால் நம் தமிழ் சமூகத்துக்கு எப்போதுமே அரசு சார்பான மனோநிலைதான் இருக்கிறது.

விடுதலைக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அறிவாளிகளும் சரி, படைப்பாளிகளும் சரி, சாமானியர்களும் சரி எதையும் இழக்கத் தயாராக இல்லை. ஒரு படைப்பாளி என்பவன் எப்போதும் ஒரு தார்மீகப் பொறுப்போடும், அறத்தோடும் எந்த ஒரு மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் அவனுடைய குரலைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற வழக்கு ஒளிந்துபோய் தன்னுடைய சார்பு என்பது அரசு சார்ந்தாக மாறின மனோநிலை இன்றைக்கு தமிழர்களிடம் இருக்கிறது. இந்த மனோநிலை அடிமைத்தனத்தை விரும்புகிறதாக இருக்கிறது. எதையும் எதிர்க்கத் தேவைப்படும் வீரம் நம்மிடம் இல்லை என்று நினைக்கிறேன்.

தமிழ் எழுத்தாளர்கள் தங்களுடைய வசதி வாய்ப்புகள் எதையும் இழக்கத் தயாராகயில்லை. ஏனென்றால் நம்முடைய சமுகம் என்பது அறிவாளிகளையோ, படைப்பாளிகளையோ கலைஞர்களையோ மதிக்கக்கூடிய ஒரு சமுகம் கிடையாது. அரசு எதை நமக்குத் தருகிறதோ அதை அங்கீகாரமாக நாம் ஏற்றுக்கொள்கிறோம், கொண்டாடுகிறோம். ஒன்றும் இல்லாமல் இந்த சமுகத்தில் இருப்பதைக் காட்டிலும் அங்கீகாரத்துடன் அரசோடு போய் ஒட்டிக் கொள்ளலாம் என்பது பெரும்பாலான எழுத்தாளர்களிடம் இருக்கிறது. அந்த மனோநிலைதான் எவ்வளவு பெரிய மனித உரிமை மீறலோ, ஒடுக்குமுறையோ இனப்படுகொலையோ நடந்தாலும் அறிவுஜீவிகள் தங்களை அரசு சார்பாக வைத்துக் கொள்வதற்குக் காரணமாகும். அதுனுடைய தொடர்ச்சியாகத்தான் நான் இந்த சர்வதேச எழுத்தாளர்கள் மாநாட்டைப் பார்க்கின்றேன்.

சி.மகேந்திரன் (ஆசிரியர், தாமரை இதழ்): முருக‌பூப‌தி முன்பு ஒரு முறை இதுகுறித்து என்னிட‌ம் பேசியிருந்தார். அப்போது அதில் எனக்குப் பெரிய மாறுபாடு ஏதுமில்லை. ஆனால் இல‌ங்கையில் இப்போது மிகப்பெரிய ஒரு இனவழிப்பு நடந்துள்ள நிலையில் அங்கு நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள விருப்பமில்லை. நிச்சயமாக இந்த மாநாட்டில் நான் கலந்துகொள்ள மாட்டேன்.

சமூகவியல் ஆய்வாளர் தொ.பரமசிவன்: ஈழத்தமிழர்கள் உலகத்தில் உள்ள எல்லோராலும் கைவிடப்பட்ட மக்கள் திரளாக இருக்கிறார்கள். இப்போது அந்த ஊர் எழுத்தாளர்களும் கைவிடுகிறார்கள் என்பது மிகவும் கேவலமான ஒரு நிலை. அதற்கு நல்ல உதாரணம் சிவத்தம்பி ஐயா. பா.செயப்பிரகாசம் எழுதினாரே சிவதம்பி சின்னதம்பி ஆகிவிட்டார் என்று; அது இப்போது பலருக்கும் பொருந்துகிறது. சிவத்தம்பியின் வாரிசுகளாக சிலர் கிளம்பியிருக்கிறார்கள். கொழும்பு எழுத்தாளர்கள் மாநாட்டில் ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ் போன்றவர்கள் கலந்து கொண்டாலும் கலந்து கொள்வார்கள். பாரதி, பாரதிதாசன் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியில்லாதவர்கள் இவர்கள். ஈழத் தமிழ் எழுத்தாளர்களே இப்படியான ஒரு நிகழ்வை முன்னெடுக்கிறார்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம். இவர்கள் எல்லாம் இலக்கிய உருவம் கொண்ட கருணாக்கள்; டக்ளஸ் தேவானாந்தாக்கள். இந்த மாநாட்டை நடத்துபவர்களையும், அதில் கலந்து கொள்பவர்களையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. இவர்களை சமுக விலக்கும் இலக்கிய விலக்கும் செய்வது தான் சரி. இவர்களது புத்தகங்களை வாங்கக் கூடாது.

எழுத்தாளர் கோவை ஞானி: கொழும்பில் மாநாடு நடத்துவது என்றால் அரசு நிபந்தனை உண்டு என்று கேள்விப்பட்டேன். அதாவது ராஜபக்சேவை விமர்சனம் பண்ணக்கூடாது, முள்ளி வாய்க்கால் போன்ற பிரச்சனைகளை பேசக்கூடாது. அப்படியென்றால் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த உணர்வே இருக்கக் கூடாது. இலங்கை சிங்கள அரசு தமிழர்களுக்கு மிகப் பெரிய அழிவையை உண்டாக்கி இருக்கிற‌து என்று மனதில் எண்ணம் இருந்தாலும் கூட பேசக்கூடாது அல்லது பேச வேண்டுமானால் அரசுக்கு அனுசரணையான செய்திகளை மட்டும் பேச வேண்டும். அந்த மாதிரி பேசக்கூடியவர்களும் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக, ஈழ மக்கள் விடுதலைக்கு எதிராக பேசக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக இந்த மாநாட்டில் பங்கு கொள்வார்கள்.

அந்த மாநாட்டில் எதை முதன்மையாக எடுத்துக் கொண்டு பேசப்போகிறார்கள்? பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு, நிலம் முதலியவற்றை கொடுக்க வேண்டும், வாழ்வுரிமையைத் தர வேண்டும், மரியாதையைக் கொடுக்க வேண்டும். இன்னும் சிறையில் இருக்கிற மக்களை விடுதலை செய்ய வேண்டும். முடியுமானால் அவர்கள் மேல் இருக்கிற அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டு மானமுள்ள இனமாக அவர்களை வாழ விட வேண்டும். அவர்களுக்கு பூர்வீகம் என்பது வடக்கு கிழக்கு தான் அதனால் அங்கு ராணுவ முகாம்கள் அமைப்பதோ, சிங்கள குடியேற்றம் செய்வதோ அவர்களை மீண்டும் ஒடுக்கவதற்கோ அழிப்பதற்கோ எடுக்கப்படும் ஒரு முயற்சி தான். இதைப் பற்றி உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசக்கூடாது என்றால் அவர்கள் எந்த நோக்கத்தில் மாநாடு நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இது மறைமுகமாக ராஜபக்சேக்கு அனுசரணையான ஒரு மாநாடு தான். இது நடந்தால், 'தமிழ் எழுத்தாளர்களை ஒன்று திரட்டி நாங்கள் மாநாடு நடத்தியதாகவும், சிங்கள மொழி போல் தமிழ் மொழிக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்' என்று ராஜபக்சே செய்தி பரப்ப வாய்ப்பு இருக்கிறது.

எழுத்தாளர் பொன்னீலன் (கலை இலக்கியப் பெருமன்றம்): ஈழத்தமிழர்கள் கடுமையாக நசுக்கப்பட்டு இருக்கிறார்கள். இறந்தவர்களைவிட‌ எஞ்சி இருக்கக்கூடியவர்களுடைய வாழ்க்கை இன்னும் பரிதாபமாக இருக்கிறது. இப்படியான ஒரு சூழலில் எந்த உரிமைகளும் இல்லாத இடத்தில் எப்படி ஒரு மாநாடு நடத்த முடியும்? தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடந்தபோதே வருத்தப்பட்டோம். அப்படியிருக்க இலங்கையில் மாநாட்டை நடத்துவது என்பது கேலிக்கூத்து மாதிரி தெரிகிறது. இந்த மாநாடு ஈழப் பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டுவருமா? என்னால் இந்த மாநாட்டில் கண்டிப்பாக கலந்து கொள்ள முடியாது. என்னுடைய சகோதரர்கள் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். அவர்களின் விடுதலைக்கோ, வாழ்வுக்கோ எதுவும் செய்யாமல் மாநாட்டிற்கோ, கூத்தாட்டதிற்கோ, கொண்டாட்டத்திற்கோ ஏற்பாடு செய்வது அவர்களை அவமானப்படுத்துவது மட்டுமல்ல என்னையும் அவமானப்படுத்துவதாகவே நான் நினைக்கிறேன்
எழுத்தாளர் ஓவியா: ராஜபக்சே இந்த நூற்றாண்டிலே ஒரு மிகக் கொடூரமான‌ காரியத்தை செய்து முடித்துவிட்டார். தமிழின அழிப்பு என்பதில் இன்றைய காலக் கட்டத்தில் வெற்றி என்று கருதக்கூடிய நிலையை அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் இழந்திருப்பது என்ன என்றால் சர்வதேச அளவில் அவர்களின் நன்மதிப்பு. அந்த நன்மதிப்பை செயற்கையாகவாது உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கூலிக்கு தமிழர்களைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் கலந்து கொள்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் இதற்கு விலை போகிறவர்கள் தான். அப்படி விலை போகிறவர்கள் மட்டும்தான் இப்படி ஈரமும் இரத்தமும் இன்னும் காயாத அந்த பூமியில் கால்மிதிக்க முடியும். இலங்கை அரசின் அழைப்பின் பெயரிலே அங்கே கால் மிதிக்கிற யாரும் இந்த சூழ்ச்சிக்கு விலை போனவர்கள் அல்லது பலியானவர்கள். பலியானவர்கள் என்று கூட சொல்ல முடியாது காரணம் சின்ன குழந்தைக்குக் கூட அங்கு நடந்த கொடூரங்கள் தெரியும். அப்படி இருக்கும்போது இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் மரியாதை தேடித் தருகிற வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்று சொன்னால் அந்த கொடூரத்தின் பங்காளிகளாக இவர்கள் போகிறார்கள், கலந்து கொள்கிறார்கள் என்பதே என் கருத்து.

இரத்தத்தால் கோப்பையைக் கழுவி விட்டு தேநீர் கொடுத்தால் நாம் குடிப்போமா? அதை குடிப்பதற்கு மனம் வருமா? இலங்கையில் எழுத்தாளர் மாநாடு நடத்துவதற்கும் நான் சொன்ன உதாரணத்திற்கும் என்ன வித்தியாசம்? நான் இனம், மொழி இந்த விடயங்கள் இல்லாத ஒரு உதாரணத்தை சொல்லிக் கேட்கிறேன். நம் கண் முன்னாடி கொலையைச் செய்துவிட்டு இரத்தத்தை கழுவிவிட்டு தேநீர் சாப்பிடலாம் என்று கூப்பிட்டால் நம்மால் போக முடியமா? அப்படிப் போனால் நம் பெயர் மனிதர்களா? இது தான் இங்கு எழுப்பப்பட வேண்டிய கேள்வி.

தொகுப்பு: கீற்று நந்தன்
நன்றி:கீற்று

Monday, November 08, 2010

வெளியீட்டு விழா

வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட படங்களில் இன்னொரு பகுதி 3


எழுத்தாளர் தேவகாந்தன்.


கவிஞர் செழியன்.