Pages

Friday, November 20, 2009

கூத்துக்கலை குறைந்து கொண்டே போகிறது


மூத்த அண்ணாவியார் செ.டானியல்(பெலிக்கான்)


கலைவடிவங்கள் ஒரு இனத்தினுடைய அடிநாதமாக விளங்குகின்றன. நாடுகளிற்கு அப்பால் மனிதர்களை ஒன்றிக்கச்செய்யும் அற்புதத் தொடர்பு சாதனங்களாகக் கலை உருக்களைக் கருதமுடியும்.
சமூகத்தினுடைய அடையாளமாக அவர்களால் ஆடப்படுவதும் பேணப்படுவதுமான தனித்தனிக் கலைகளும் உள்ளன. தமிழர் தம் பாரம்பரியங்களை வெளிக்கொணரும் அதேவேளை நாட்டுக்கூத்து பாரம்பரிய கலைவடிவமாகவும் எம்மவர்களால் தொண்டுதொட்டு ஆளப்பட்டு வருகின்றது.
கலைஞர் உள்ளத்தில் தோன்றும் கருத்தை வெளியிட வேண்டுமென்றால் அதனை கவிதையாக, கட்டுரையாக, நாடகமாக வெளிக்காட்டுவதுபோல கூத்தாகவும் வெளிக்கொணரலாம். கலைஞரின் மாறுபட்ட சிந்தனை வெளிப்பாடுகளினால் கலைவடிவங்கள் பல்வேறு கோணங்களில் முன்வைக்கப்படுகின்றன. இதன் ஒரு அங்கமாகவே தென்மோடி நாட்டுக்கூத்தை ஆடிவருகிறோம் எனக் குறிப்பிடுகின்றார் தென்மோடி நாட்டுக்கூத்துக் கலைஞரும் மூத்த அண்ணாவியாருமான செபஸ்தியாம் பிள்ளை டானியல் பெலிக்கான்.
நாட்டுக்கூத்து கலையை மிக நுணுக்கமாக கற்று வலுநேர்த்தியாக ஆடிவருகின்றார். கலைஞர் நாட்டுக் கூத்துக்கலை தொடர்பாக பகிர்ந்து கொண்ட கருத்துக்களை வாசகர் முன் வைக்கிறோம்.

நாம்: கூத்துக்கலைக்குள் உள் நுழைந்தமை...
பெலிக்கான்: இயல்பாக எமது பகுதியில் பல கூத்துக்கலைஞர்கள் தோற்றம் பெற்றனர். அவர்களில் என் தந்தையான செபஸ்தியாம்பிள்ளையும் ஒருவர். இவர்களால் ஆடப்படும் சுத்துக்களை சிறுவயதில் இருந்தே பார்த்து மகிழ்ந்தது போக நானும் பாட வேண்டும், ஆட வேண்டும் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டேன். இதன் பயனாக ஒன்பதாவது வயதில் “ஏழுபிள்ளை நல்லதங்காள்’‘ நாடகத்தில் ஏழு பிள்ளை நல்லதங்காளாகக் கூத்துகலையில் கால்வைத்தேன்.
தொடர்ந்து பல்வேறு பாத்திரங்களில் நடித்து எமது கிராமத்திற்கு அப்பாலும் பலரது பாராட்டைப் பெற்றேன். வில்லன், ராஜபாட், இஸ்திரி, புனிதர் என என்பங்களிப்பை இத்துறைக்கு வழங்கிவருகிறேன் என பதிலளித்தவரிடம்.
நாம்: கலைஞராக இருந்த நீங்கள் நெறியாளராக.....
பெலிக்கான்: இன்றுவரை 40இற்கு மேற்பட்ட கூத்துக்களில் நடித்த போதிலும் இயல்பாகவே என்னிடமிருந்த குரல்வளமும் எந்தப் பாத்திரத்தையும் உடனே செய்யக்கூடிய திறமையை வளர்த்துக் கொண்டமையும் என்னுடன் இணைந்து நடித்தவர்களின் விருப்புடனும் நாட்டுக் கூத்துக்கலை பழக்கத் தொடங்கினேன். பல இளம் கலைஞர்களை உருவாக்கிய போதிலும் ஒரு சிலரே தொடர்ந்தியங்கி வருகின்றனர். முழுவதும் இளம் பெண்களைக் கொண்டு “புனிதவதி’‘ என்ற கூத்தையும் மேமையேற்றியுள்ளேன்.
செபஸ்தியார், சஞ்சுவான், வீரத்தளபதி, கருங்குயில், கொன்றத்தின் கொலை, சங்கிலியன், விஜயமனோகரன், ஞானசௌந்தரி, ஏழுபிள்ளை நல்லதங்காள், கெனோவா, அலங்காரரூபன் இவை நான் நெறியாள்கை செய்த நாட்டுக்கூத்துக்களில் குறிப்பிடும் படியானவை என சிறுபுன்னகையுடன் இருந்தவரை....
நாம்: நாட்டுக்கூத்தில் பெண்களை ஈடுபடுத்துகின்றமை....
பெலிக்கான்: விஜயமனோகரி, புனிதவதி போன்ற கூத்துக்களில் பெண் பாத்திரங்கள் கூடுதலாகவுள்ளன. இதற்கு அக்கால இளைஞர்களை ஒன்றுசேர்த்து (எல்லோருமல்ல) கூத்தைப் பழக்குவது ஆகாதகாரியம்.... குறித்த நேரத்திற்கு ஒழுங்காக ஒத்திகைகளில் பங்குபற்றினாலே நிறைவான படைப்பை வெளிக்கொணரலாம். எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி முழுவதும் பெண் பிள்ளைகள் நடிக்கின்ற விஜயமனோகரி கூத்தைப் போடவுள்ளேன்.
நாங்கள் நடித்த ஆரம்பகாலங்களில் பெண் பாத்திரங்களில் பெண்களைப் போடுவதில்லை. சமூகம் ஏற்றுக் கொள்ளாமையும் அவர்கள் முன்வராமையுமே காரணங்களாகும். இப்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. இந்நிலை இனிவரும் காலங்களிலும் தொடரவேண்டுமென ஆதங்கப்பட்டவரிடம்....
நாம்: நாட்டுக்கூத்தின் இன்றைய நிலை தொடர்பாக.....
பெலிக்கான்: கடந்த பத்து வருடங்களிற்கு முன்பிருந்த நிலை இன்றில்லை. கூத்துக்கலை குறைந்து கொண்டே போகின்றது. நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களும், நிம்மதியற்ற வாழ்க்கையுமே காரணமாகின்றன. நல்ல திறமையான கூத்துக்கலைஞர்களை இழந்ததுடன் பலர் சிதறி பல்வேற இடங்களிலுள்ளனர். கூத்துக்கலை அருகி வருவதற்குக் காரணமாக இருந்தாலும் தொலைக்காட்சிகளின் அதிகரித்த பாவனையும், இளைஞர்கள் இலத்திரனியல் ஊடகங்களில் பெருமளவான நேரத்தை செலவிடுவதுமே எமது கலை வடிவத்தில் சிறுதொய்வு ஏற்பட்டுள்ளதெனலாம் எனக் கூறியவரிடம்.....
நாம்டு கூத்துக் கலைக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகள் எதனையும்.....
பெலிக்கான்: கடந்த ஐம்பது வருடங்களிற்கு மேலாக கூத்துக் கலைஞராக இயங்கிவருகின்றேன். கூத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்றால் கிராமரீதியாக நாடகமன்றங்களை அமைக்க வேண்டும். இதனுள் கலைஞர்களை உள்வாங்கி, கலை ரீதியான பயிற்சிகளைக் கொடுப்பதுடன் கலைஞர்கள், கலைவடிவங்கள் தொடர்பான நூல்கள் வெளியீடுகளையும் இளைஞர்கள் பார்க்கும் வகையில் மன்றங்களில் வைக்க வேண்டும்.
ஒரு வருடத்தில் நான்கு கூத்தையாவது போடவேண்டும். இதன் ஊடாக பார்வையாளர்களை உள் இழுப்பதுடன் புதிய கலைஞர்களையும் உருவாக்க முடியும். நவீன பாணியில் அமையக்கூடிய கூத்துக்களைப் போடுவதினால் இளையோரைக் கவரலாம் என பதிலளித்தவரிடம்.....
நாம்: தந்தையாரின் வழிவந்ததாகக் கூறும் நீங்கள் உங்களிற்குப் பின்னால்.....
பெலிக்கான்: என் புதல்வகள் கூத்துக் கலைக்குள் உள்வரவில்லை. இருந்தாலும் எழுத்துத்துறையிலும், நாடகத்துறையிலும் இயங்கிவருகின்றனர். அமரர் டானியல் அன்ரனி, டானியல் சௌந்தரம், டானியல் ஜீவா மூவருமே எழுத்தாளர்களாக நாடக ஆசிரியர்களாகவுள்ளனர். எனது பேரப்பிள்ளைகள் (சௌந்தரத்தின் மகள்) என் உறவினர்கள் எனப் பலர் பாடுகின்றனர். இருந்தாலும் என் வழியில் நின்று எனது பெயரைச் சொல்லக் கூடியவகையில், கூத்துக் கலையில் புதல்வர்கள் நாட்டம் கொள்ளவில்லையென தன் நிலையை விபரித்தவரிடம்.....
நாம்: மூத்த கூத்துக் கலைஞர்களுடன் இன்றைய கலைஞர்களை ஒப்பிடுவீர்களா.......
பெலிக்கான்: ஒப்பிட முடியாது.... ஒலி, ஒளி வசதி இல்லாத போதும் தம் திறமையால் இரண்டு இரவுகள் தொடர்ந்துபாடி ஆடியவர்களும் உள்ளனர். புகுந்தான் ம. ஜோசப், சில்லாலையூர் செல்வராஜா, பக்கீரி, அண்ணாவியார் வின்சன்டிபோல், புலவர் நல்லையா, ஏஸ்தாக்கி எனப் பல திறமையான அற்புதக் கலைஞர்கள் இருந்தனர். சிலர் இருக்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை கூத்துக் கலைக்காகவே தோற்றம் பெற்றதாகக் கருதுகிறேன். போதிய வசதி வாய்ப்புக்கள் இல்லாத போதும் தாம் ஏற்கும் பாத்திரங்களை மிகத்திறமையாக வெளிப்படுத்தி கதைக்குரிய நாயகர்களை ஞாபகப்படுத்துவர். இன்றுள்ளவர்களை நீங்களே பார்க்கின்றீர்கள் தானே.... நான் எண்ணத்தை..... என நசூக்காக பதிலளித்ததுடன் தன் கருத்துக்களையும் நிறைவு செய்தார்.
அண்ணாவியார் டானியல் பெலிக்கான் சிறந்த கலைஞர் என்பதற் அப்பால் சிறந்த விளையாட்டு வீரன், சமூக சேவையாளன், நாட்டுக் கூத்தையே தன் மூச்சாகக் கொண்டு இயங்கிவரும் அண்ணாவியார் பெண்பாத்திர மேற்றமைக்காக (எஸ்தாக்கியர் - மனைவி) “நாட்டக்கூத்து மாமேதை’‘ என்ற விருதையும் கிராம மக்களால் “பொற்கிளி’‘ வழங்கியும் கௌரவிக்கப்பட்டார். பல இடங்களில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார். 72 வயதில் தொடங்கிவரும் அண்ணாவியாரின் நெறியாள்கையில் உருவான “சஞ்சுவான்|ஷ, “அலங்காரரூபன்’‘ ஆகிய 4த்துக்கள் வீடீயோப்படமாக்கப்பட்டுள்ளன. இதனூடாக அண்ணாவியாரின் திறமையான பதிவை நாம் காண முடியும்.
பாரம்பரிய கலைவடிவமான கூத்துக் கலையானது கரையோரக் கிராம மக்களாலேயே பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதற்குப் பல உதாரணங்களைக் கூறமுடியும். தான் பயின்ற கலையை தன்னைச் சார்ந்தவர்களிற்கு பயிற்றுவித்து அதனூடாகத் தானும் தன் சார்ந்தவர்களும் நிறைவு பெறும் அரிய பணியை செய்து வருகிறார் பெலிக்கான். ஈழத்துக்கூத்துத்துறைக்கு பெரும் பங்காற்றியவர்களில் அண்ணாவியாரும் ஒருவர் என்பது குறிப்பிடப்பட வேண்டியதொன்று.

No comments: