Pages

Tuesday, August 14, 2007

மண் குடிசைகளும் சில மயக்கங்களும்

(சிறுகதை)
-டானியல்அன்ரனி-
அவன் தனது குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவைக் கடந்து விடிந்து கொண்டிருந்தது. நிலம் முற்றாக இன்னும் வெளுக்கவில்லை. அணைக்கப்படாத வீதி விளக்குள் இன்னும் எரிந்து கொண்டு தானிருந்தன. இரவு பூராவும் 'ரவுண்" முழுவதும் சுற்றித்திரிந்து அவனும் அவனுடைய நண்பர்களும் சுவர்கள், மதில்கள் ஒன்றும் பாக்கியில்லாமல் நாளை வெளிவரவிருக்கும் அவனுடைய அபிமான நடிகனின் புதிய படத்தின் போஸ்டர்களை அப்பொழுதுதான் ஒட்டி முடித்திருந்தார்கள். கழிந்து போன இரவில் இழந்துபோன நித்திரையின் அழுத்தத்தினால் கண்கள் எரிவு காண, கைகால்கள் சோர்ந்துபோய் வலி எடுத்த துடன், வியர்வையில் ஊறிக் காய்ந்துபோன மேனி பிசுபிசுத்து துர்நாற்றமும் வீசத் தொடங்கிவிட்டது. அவனுக்கு இவை ஒன்றும் புதியவையல்ல. ஏற்கனவே பழக்கப்பட்டவை தான். தன்னுடைய அபிமானத்திற்குரிய நடிகனின் புகழ் பரப்புவதற்காக இதை விட இயல்புக்கு மீறிய பல தியாகங்களையும் செய்யத் தயாராக இருந்தான். அதில் அவனுக்கு ஒரு இன்பம், ஆத்ம திருப்தி, அபரிதமான நம்பிக்கை, பக்தி என்று கூடச் சொல்லலாம். கஸ்தூரியார் வீதியைத் தாண்டி பஸ் நிலையத்திற்கு வந்துவிட்டான். பஸ் நிலையத்தைத் தாண்டி பண்ணை வீதி வழியாக கிழக்கை நோக்கி கடற்கரையை அண்டிய ஒதுக்குப் புறத்திலுள்ள அவனுடைய குடிசைக்குச் செல்ல வேண்டும். பஸ் நிலையத்தைச் சுற்றி கனமான வெளிச்சம் வாரி இறைத்துக் கொண்டிருந்தது. பஸ் வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாகப் புறப்படும் உறுமல்கள். விடியல் வியாபாரத்துக்காக பல தேநீர்க்கடைகள் வெளிச்சம் போட்டுத் திறந்து கிடந்தன. திறக்கப்படாத கடைகளின் வெளிச்சத்தின் விழுதுகள் படியாத இருள் கனத்துக் கிடந்த விறாந்தை மூலைகளிலும், கானோரத்துக் கழிவுகள் கொட்டும் சந்துகளிலும், மூடியும் மூடாத உடல்களைப் கிடத்திப் போட்டுக் கவலையற்றுக் கிடந்த 'எளிய" சனங்களில் சில விழித்துக் கொண்ட நிலையில் தங்களுக் குள் கச....முச என்று பேசிக் கொள்வதும், வசவுகளை ஒருவருக்கு ஒருவர் உரத்துப் பரிமாறிக் கொள்வதும் அவனுக்குத் துல்லிய மாகக் கேட்டதாகிலும், அவர்கள் பேச்சில் சிதறி விழுந்த பல 'அழுகல்" வார்த்தைகளின் அருவருப்பான அர்த்தங்கள் மனதில் பதிந்ததைத் தவிர வேறு எந்தப் பிரக்ஞையும் அவன் மனதை உறுத்தவில்லை. சினிமாவில் அவன் அபிமான நடிகன் இதே ஏழைகள் உயர்வுக்காக கனல் தெறிக்க வசனம் பேசும் போதும்.... பாட்டுப்பாடும் போதும் உணர்ச்சி வசப்பட்டு உடல் சிலிர்த்து....உற்சாக மிகுதியினால்.... கைவிரல்களில் இரண்டை நாக்கின் அடியில் திணித்து ஒலி எழுப்ப ஆரவாரம் செய்யும் அவன் மனம் இப்பொழுது எனோ சுரணையற்றுக் கிடந்தது. பகல் முழுவதும் பரபரப்புடன் யுகம் யுகமாகக் காணமுடியாத எதையோ தேடிச் செல்லும் அவசரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெரிய பட்டினத்தின் மத்திய பகுதியிலிருந்து செல்லும் பிரதான பாதைகளில் குனிந்;து, நிமிர்ந்து வேகமாக பழைய கடுதாசிகளைப் பொறுக்கி சாக்குப் பைகளில் திணித்துக் கொண்டிருக்கும் சில சிறுவர்களைத் தவிர வேறு எதுவித அசுமாத்த மும் இன்றி வெறிச்சோடியே கிடந்தன. தூரத்தே - புகையிரதத்தின் கூவல்.... கடகட.... ஒசைகள்.... இப்பொழுது அவன் தனியாகத்தான் நடந்து கொண்டிருந்தான். கூட வந்த நண்பர்கள் ஒவ்வொருத்தராகப் பிரிந்து சென்றுவிட்டனர். மீண்டும் பிற்பகலில் சினிமாத் தியேட்டரில் அவர்களுடைய சங்கமம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. பல வேலைகள் அங்கு அவர்களுக்காகக் காத்துக் கிடந்தன. அவன் 'தேவி விலாஸ்" தேநீhக்கடை அருகே வந்ததும் பழக்க தோ~த்தில் தொண்டை அரிப்பு எடுத்தது. வறண்டு கிடந்த உதடுகளைச் சற்று உமிழ் நீரினால் நனைத்துக் கொண்டு சட்டைப் பைக்குள் கையைவிட்டுத் துளாவுகிறான். பத்துச் சதம்.....ஐந்து சதம்....ஒரு சதக்குத்திகள் கைகளில் தட்டுப்படுகின்றன. ஏமாற்றத்தின் எதிரொலியாக முகம் சுண்டிக்கொள்ள, ஒரு சக்கரைப் 'பிளேன் ரீ" குடிக்கலாம் என்ற மனத்தவிப்பும் தானே நழுவிக் கொண்டது. தொண்டை மீண்டும் எரிவெடுத்தது. கண்களிலும் நித்திரையின் கனப்பு. அங்கும் இங்கும் பார்வையை அலைய விட்டான். வீதி ஓரத்தில் அருகே.... தண்ணீர்க் குழாய். விரைந்து சென்று குழாயைத் திறந்து, சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்த நீர்த்துளிகளை கைகளால் ஏந்தி உறிஞ்சித் தொண்டைக்குள் இறக்கினான். நெஞ்சுக்குள்ளும் ஈரக்கசிவு இறங்கியது. முகத்தையும் அழுத்திக் கழுவிக் கொண்டான். மீண்டும் சற்று உற்சாகத்துடன் நடக்கத் தொடங்கினான். எதிரே கந்தசாமிதான் வந்து கொண்டிருந்தான். அவனைப் போலவே கந்தசாமியும் தீவிர அபிமானி. பல தடவைகளில் ஒரே படத்தைப் பார்ப்பதில் பல சாதனைகள் செய்தவன் என்பதால் நண்பர்களிடத்தே அவனுக்கு அதிக மதிப்புண்டு. 'என்ன கந்தசாமி, போஸ்டர் ஒட்ட உம்மைத் தேடினம். இங்காலப் பக்கமே காணயில்ல... எங்க போட்டு வாற". 'ஓம் மச்சான், அவசர அலுவலாகச் சாவகச்சேரிக்குப் போட்டு இப்ப படம் பாக்க வேணுமெண்டுதான் வாறன். நீ இப்ப போகயில்லையோ". 'என்னட்ட இப்ப காசில்ல. அடுத்த சோவுக்கு கண்டிப்பா நிப்பன்....ஒருக்கா வீட்ட போட்டு வாறன்:. 'ஆ....ஆ....அப்ப அங்க சந்திக்கிறன்". கந்தசாமி அவனைக் கடந்து போனான். 'எப்படியாவது வீட்டுக்குப் போய் ஒரு இரண்டு ரூபாக் காசு பிரட்டிப் போடவேணும்". அவன் உறுதியான தீர்;மானத்துடன் எட்டிக் கால்களை வைத்துச் சத்திரச் சந்தியடிக்கு வந்து விட்டான். அங்கேயே - கால்கள் நிதானித்து நின்றுவிட்டன. அவன் கண்ட காட்சி.... சில மணி நேரத்துக்கு முன் அவனும் அவனுடைய நண்பர்களும் அரும்பாடுபட்டு ஒட்டிப்போட்டுப் போன படப் போஸ்டர்களை வாளிக் கிணற்றுச் சுவரிலிருந்து கிழித்தெடுத்து.... சில சிறுவர்கள் சாக்குப் பைக்குள் அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டிருந்தார்கள். அவன் கண்கள் கோபத்தினால் சிவந்து வெளுத்தன. உதடுகள் துடித்தன. 'நாய் மூதேசிகள்".... அச்சிறுவர்கள் மேல் பாய்ந்து முதுகுப்புறம் வேகமாக அறைந்தான். சிறுவர்கள் சாக்குகளை விட்டு விட்டுச் சிதறி நாலாபக்கமும் ஓடினர். மனதிற்குள் கறுவிக் கொண்டே விடுவிடென நடந்தான். சாராயத் தவறணை, பெரிய தபாற்கந்தோர், சேமக்காலை, பொலிஸ் குவார்ட்டர்ஸ், அப்பால் அவனுடைய குடிசை தென்படும் ஒதுக்குப்புறம். தூரத்தில் வரும்போதே ஒருவித முடை நாற்றம். புதிய உலகத்திற்குள் புகுந்து கொள்வது போன்ற மனச்சுளிப்பு. எல்லாம் ஒரு கணம்தான். பழையபடி பழகிப்போன சுரணைக் கேடு. பரந்த குப்பை மேட்டைக் கிளறி எறிந்து இரைதேடும் முனைப்பில் கோழிகள் ஒன்றை ஒன்று கொத்தி விரட்ட, அழுகல் ஒன்றைக் கடித்துக் குதறும் சொறி நாய்களின் உர்....உர்....என்ற உறுமல்கள். ஏற்கனவே காய்ந்து கறுத்துப்போன புழுதி மேனிகள் விளையாட்டுத் திடலாக்கி விட்டிருந்தன. எங்கு நோக்கினும் சின்னஞ் சிறு குடிசைகள், மழையில் பாதி கரைந்து போய்விட்ட மண் சுவர்களை மூடிக்கிடந்த பொத்தல் கண்ட கூரைகள். அவற்றைச் சுற்றி கங்குமட்டை அடைப்புக்கள். அவ்வூர் மக்கள் அரும்பாடுபட்டுக் கட்டிய மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் மாத்திரம் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நின்றது. பண்ணை நெஞ்சு நோய் ஆஸ்பத்திரி இருக்கும் மேற்குப் புறத்தில் சரிந்து கிடக்கும் கிடுகு அடைப்புக்குள் தெரிவதுதான் அவனும் அவனுடைய அப்பு சின்னரும், ஆச்சி செல்லாச்சியும் வாழும் சின்னஞ் சிறு உலகம். அவன் குடிசையை அண்மித்துவிட்டான். ஒன்றை ஒன்று பார்த்து உறுமிய நாய்கள் அவனைப் பின் தொடர்ந்து குரைத்துக் கொண்டு ஓடி அருகே வந்ததும், சட்டென இனம் கண்டவைபோல வாலையாட்டிக் கொண்டு பின் தங்கிவிட்டன.படலை என்ற பெயரில் வேலிக்கட்டுடன் தொங்கிக் கொண்டிருக்கும் பழைய 'கார்" கதவுத் துண்டை ஓசைபடாமல் மெதுவாகத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். குடிசை முழுவதும் இருள் மண்டிக் கிடந்தது. செல்லாச்சி வேளைக்கே எழுந்து சாணம் பொறுக்க வயல் பக்கம் போயிருந்தாள். சின்னர்க் கிழவரின் கைவண்டியையும் அங்கே காணவில்லை. திண்ணை மூலையில் கிடந்த அவனுடைய ஓலைத் தடுக்க அங்கே இல்லை. நித்திரை கண்ணை விழுத்தியது. தட்டியில் சொருகிக் கிடந்த பேப்பரை எடுத்து திண்ணை யில் விரித்துப் போட்டுவிட்டு கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டே அப் படியே சுருண்டு படுத்துக் கொண்டான்.
இப்பொழுது நன்றாக விடிந்து பொழுது உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தது. சூரியனின் சுள்ளென்ற வெளிச்சம் முதுகுப்புறம் தெறித்தும் அவன் எழும்பவில்லை. புரண்டு புரண்டு படுக்கிறான். அவனால் சரியாகத் தூங்கமுடிய வில்லை. மனம் புதிதாகத் திரையிடப்பட்டிருந்த படத்தைப் பற்றியும் அதற்குத் தேவையான இரண்டு ரூபாய் பணத்தைப் பற்றியுமே அலை மோதிக் கொண்டிருந்தது. படலை திறந்து கொள்ளும் கிறீச் சத்தம். மெதுவாகத் தலையை உயர்த்தி வாசலைப் பார்க்கிறான். அவனுடைய தந்தை சின்னர் அலுப்பாந்தியில் இருந்து வேலை முடிந்ததும் தனது கைவண்டியைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்து முற்றத்து வேப்ப மரத்தின் கீழ் விட்டுவிட்டு, வியர்வை சிந்தி கறுத்து மினுமினுத்துக் கொண்டிருந்த நைந்து போன உடலை, தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து துடைத்துக் கொண்டே.... ஆயாசத்துடன் உள்ளே வருகிறார். அவன் இபபொழுது எதுவும் அறியாத வன்போல் கண்களை மூடிக்கொண்டு தூங்கும் பாவனையில் நடப்பவற்றைக் கிரகித்துக் கொண்டு கிடந்தான். 'செல்லாச்சி....செல்லாச்சி...." சின்னர்க் கிழவன் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தார். விறாந்தையில், விடிந்து பொழுது ஏறியும் நித்திரையில் புரண்டு கொண்டு கிடந்த ராசனைக் கண்டு கொண்டார். கோபத்தினாலும் வேதனையினாலும் உடல் கொதித்தது. அவனுடைய பொறுப்பற்ற போக்கினால் வீட்டில் நடந்துவரும் தொல்லை களை நினைக்கையில் அவனை வெட்டிப் போட்டால் கூடப் பரவாயில்லை என்பதுபோல் சிலவேளை யோசிப்பார். 'செல்லாச்சி....செல்லாச்சி...." மீண்டும் குரல் கொடுத்தபடியே முற்றத்திலிருந்த கிணற்று வாளியை எடுத்துக் கொண்டார் சின்னர்க் கிழவன். 'எப்பன் பொறுங்க....வாறன்...." குசினிக்குள் தேநீர் வைத்துக் கொண்டிருந்த செல்லாச்சிக்கிழவி குரல் கொடுத்துக்கொண்டே தேத்தண்ணியும் கோப்பையுமாக வெளியே வந்தாள். 'உவன் ராசன் எப்ப வந்து படுத்தவன்?" 'உப்பதான் வந்து மல்லாந்து கிடக்கிறான். செல்லாச்சிக் கிழவியும் கோபத்துடன் சீறினாள். 'இரா முழுவதும் ஊர்லாத்திப்போட்டு காவாலிப் பொடியளோட சேர்ந்து படம் பார்க்கிறது. விடிய வந்து படுக்கிறது. வேலையா வெட்டியா.... உவனுக்கு படத்திற்கு மாத்திரம் எங்க இருந்து காசு வருதோ.... முருகா...." 'இதுதான் இண்டைக்கு உழைப்பு. மத்தியானத்துக்குப் பாணை எண்டாலும் வேண்டுவம்". சின்னர்க்கிழவன் மடியில் சுற்றியிருந்த சில்லறைக்காசுகளை பக்குவமாக எடுத்துச் சின்னூச்சிக் கிழவியிடம் கொடுத்து விட்டு மெதுவாகக் கிணற்றடிப் பக்கம் நகர்ந்தார். 'இதுகள் என்னத்தைக் காணும். நேத்து கனகத்திட்ட வேண்டின கடன்காசு குடுக்கக்கூடக்காணாது". சின்னாச்சிக் கிழவி தனக்குள் முணுமுணுத்தபடியே திரும்பிப் பார்க்கிறாள். அவன் இன்னும் புரண்டுகொண்டுதான் கிடக்கிறான். 'டேய் ராசன் எழும்படா. இந்தா தேத்தண்ணியைக் குடி. விடிஞ்சு இவ்வளவு நேரமாப் போட்டுது. வெக்கம் கெட்ட இளந்தாரி". அவன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு விழித்தபடிதான் கிடந்தான். ஆயினும் அப்பொழுதுதான் தூக்கத்திலிருந்து விடுபட்டவனைப்போல் அலுப்புடன் எழுந்து பார்த்தான். சின்னாச்சிக்கிழவி புருசன் கொண்டுவந்து கொடுத்த பணத்தை உள் அறையில் கொடியில் கிடந்த சேலைத் தலைப்பில் முடிந்து கொண்டிருந்தாள். அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தேநீரை உறிஞ்சியபடியே பார்த்துக்கொண்டிருந்தான். சில கணங்கள் சென்று மறைந்தன. வெளியே தெருவில் சிறுவர்களின் ஆரவாரக்குரல். அதைத் தொடர்ந்து கூட்டுறவு கடைகளுக்கு பாண் ஏற்றிச் செல்லும் லொறியின் உறுமல் சத்தம் பெரிதாகக்கேட்டது. குசினிக்குள் இருந்த சின்னாச்சி பரபரப்புடன் வெளியே வந்து அறைக்குள் நுழைந்தாள். சின்னார்க்கிழவன் பசி மயக்கத்தில் சோர்ந்து போய்ச்சுருண்டு கிடக்கிறார்....முனகல் சத்தமும் பெரிதாகக் கேட்டது. சின்னாச்சிக் கிழவி. கொடியில் கிடந்த சேலையைப் பார்க்கிறாள். அது அவிழ்ந்து கிடந்தது....அவள் அதிர்ச்சியினாலும், ஆத்திரத்தினாலும் உடல் வெட வெடக்க குடிசைக்கு வெளியே வந்தாள்.
'கோதாரியில....கொள்ளையில போவான். உழைக்காம இருந்து தின்னிறதும் பத்தாம.... அந்த மனுசன் பாடுபட்டுக்கொண்டு வாறதையும் கொண்டுபோய்ப் படத்துக்குக்கொட்டுகிறானே...." அவள் குரல் எடுத்து அழுதாள்.
அவன் எதுவும் கேட்காதவனாய் மறுபடியும் தனது அபிமானத்துக்குரிய நடிகனைத் திரையில் பார்த்துவிடும் தீவிரத்தில் தியேட்டரைத்தேடி நடந்து கொண்டிருந்தான்.

கூர்

கூர்
கனடா நவீன தமிழ் கலை, இலக்கியத் தொகுப்பு

2008 பனி கால ஆரம்பத்தில் வெளிவரவிருக்கும் இத் தொகுப்பிற்கான சிறுகதை, கவிதை, விமர்சனக் கட்டுரை, நூல் மதிப்புரை, மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.

படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : koorcircle@gmail.com

தொடர்புகள்: Koor Art & Literary Circle,
24> Brimstone cres.,
ON. M1V 3L2

தொலைபேசி: 416-458 9426 416-551 0087-905-294 8607