Pages

Wednesday, October 28, 2009

நெய்தல்’‘

நூல் விமர்சனம் “நெய்தல்’‘
க. ரவீந்திரன்
ஈழத்தின் கடலோர மலரொன்று நோர்வேயில் பூத்திருக்கிறது. மலரின் பெயர் “நெய்தல்”யாழ்ப்பாணத்து நகர எல்லையில் அமைந்திருக்கும் ஒரு கரையோர நகரப் பகுதிதான் நாவாந்துறை.
இந்த நூலை வெளியிடும் நோக்கம் உண்மையில் உயர்வானது. தங்கள் ஊரைப்பற்றி, அதன் வரலாறு பற்றி, அதன் முன்னோர்களைப் பற்றி, அதன் தேவைகளைப் பற்றி, தங்களைச் சார்ந்தவர்களின் திறமைகளைப் பற்றி பதிவுகளாக்க எடுக்கப்படும் முயற்சிதான் இந்த நூல் வடிவம் என்பது உன்னதமான முயற்சி. பிற்காலச் சந்ததிக்கு இந்த நூல் ஒரு அவணமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் இதில் தெரிகிறது.
கடல்கடந்து நாங்கள் அகதிகளாய் வாழந்தாலும் எங்களில் பலர் உயர்வான வாழ்க்கைதான் வாழ்கிறோம். அதில் ஒரு சிறிய தொகையையாவது நலிந்து கிடக்கும் எங்கள் ஊர்களுக்கு உதவிட வேண்டியது எங்கள் கடமை. அந்தந்த ஊர் சாந்தவர்கள் ஒருங்கிணைந்து இயங்கினால்தான் அது செயல் வடிவம் பெறும். அந்த வகையில் பல நாடுகளிலும் பரவியிருக்கும் நாவாந்துறை மக்கள், தங்கள் ஊருக்குப் பல சேவைகளையும் உதவிகளையும் செய்து வருகிறார்கள் என்பது இந்த நூலின் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது. தங்கள் அமைப்புக்களின் சேவைபற்றிய விபரம் நூல் வடிவில் வெளியாகும் போது அதில் சம்பந்தப்பட்டவர்கள் மேலும் மேலும் ஊக்கம் பெறுகிறார்கள்.
வருடா வருடம் வெளிவர இருக்கும் இந்த மலருக்கு ஆசியுரைகள் பலராலும் வளங்கப்பட்டுள்ளன. நாவாந்துறை ஊரானது கிறீஸ்வதர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளதால் நூலினுள்ளே ஊர்சார்ந்த அந்த மதத்தினுடைய தோற்றம், ஏற்றம், சிறப்பு, ஆசீர்வாதங்கள் என்பன வெளிக் கொணரப்பட்டுள்ளன.
கடல் தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ள ஊரென்பதால் ஆபத்துக்களை நிறையவே சந்திக்கும் வாய்ப்புக்கள் இந்த ஊர் மக்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் இறை நம்பிக்கையின் அவசியம் இந்த நூலின் மூலம் உணரப்படுகிறது.
கடலம் கடல் சார்ந்த இடமும் “நெய்தல்”என்று சொல்லப்படும். கடல் அன்னையின் அரவணைப்பில் நாவாந்துறை ஊர் இருப்பதால் இந்த நூலுக்கு “நெய்தல்”என்று தலைப்பிட்டது சாலப் பொருந்தும். போரினால் ஏற்பட்ட கொடுமைகளும் ஷசூரியக்கதிரி| போன்ற இராணுவ நடவடிக்கைகளால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளின் பாதிப்புக்களும் சிலரது வாக்குமூலங்களாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊர் சென்று திரும்பியவர்களின் நேர்காணல்களைப் புகுத்தியிருப்பதன் மூலம் ஊரின் நிலமைகளையும் அதன் தேவைகளையும் ஊர் சார்ந்தவர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.
இந்த நூலில் இரண்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. “உதவும் கரங்கள்”என்ற சிறுகதையை எடுத்துக் கொண்டால் எழுத்தோட்டம் நன்றாக அமைந்திருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட துன்பச் சுமைகளை நன்க சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஷசமுர்த்தி| திட்டத்துக்கு விளம்பரம்போல் முடிவு அமைந்திருப்பதால் கதையில் புதுமை இல்லாமல் போய்விட்டது.
மற்றைய கதை ஷபருந்துகள் பறந்து கொண்டிருக்கின்றன|. ஒரு தரமான சிறுகதை. இனவாதம், அடக்குமுறை என்ற எமது இனத்தின் உரிமைக்காகப் போராடும் நாங்கள் ஒரு காலகட்டத்தில் ஏன் இப்போதும் கூட தொழிலாள வர்க்கத்தையும் தாழ்த்தப்பட்டதாகச் சொல்லப்படும் மக்களையும் அடிமைகள் போல் நடாத்தும் நிலை இருக்கத்தான் செய்கிறது. முதலாளித்துவத்தின் ஆதிக்கப்போக்கையும் அதன் குள்ளநரித் தனத்தையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் கதாசிரியர். வெள்ளையரினால் வசியப்படுத்தப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட தென்னிந்தியத் தமிழர்கள் சிலர் அன்னியனிடம் அடிமைப்பட விரும்பாமல் தமிழீழ மண்ணுக்குத் தொழில் தேடிவந்தபோது அவர்களை அடிமை கொள்ள நினைத்த நம் இனத்தவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்தார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்தச் சிறுகதை என நான் நினைக்கிறேன். கதாசிரியரின் கருத்துருவம் ஒரு நிஜத்தின் வடிவமாக வெளிவந்திருக்கிறது. வாழ்த்துக்கள், கவிதைகள் சிலவும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஊரின் பெருமையை வெளிப்படுத்தும் கவிதைகளை வாழ்த்தும் அதேநேரம் வித்தியாசமாக அமைந்த கவிதை ஒன்றை விமர்சிக்கின்றேன். டானியல் ஜீவா அவர்கள் எழுதிய “நானும் என் கவிதையும்”என்ற கவிதை பற்றி என்மனதில் பதிந்த ஒரு சிறுகுறிப்பு:
“பொய்யான முகங்களுடன் வாழ்வதும் - வாழ்வதற்காய் சிலுமை சுமப்பதும் - விரக்தியை கவிதைக்குள் பதைப்பதும் - கொண்ட கொள்கையை உரமாக்குவதும் - மடியும்வரை வாழ்க்கையை நேசிப்பதும் “வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணத்தை தூண்டுகிறது. இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் சிலவற்றின் பின்னணியில் கவிதைத்துணுக்குகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் என் மனதுக்குப் பிடித்த ஒன்று.
“திறந்த கதவினூNடு ஒளி வரும் என்றிருந்தோம். ஆனாலும் எட்டியது இருட்டு மட்டும்தான். இருப்பினும் காத்துக் கிடக்கிறோம் ஒளியின் கீறல் ஒருநாள் வருமென்று!’‘
இவ்வாறாகப் பலசுவைகளோடு வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு அற்புதமான முயற்சி. ஆரம்ப இதழென்பதால் ஊரோடு ஒன்றி வெளிவந்திருப்பது தெரிகிறது. இனி வரவிருக்கும் இதழ்களின் இலக்கியப் பக்கங்கள் ஊர் எல்லையைக் கடந்து வெளிவர வேண்டும் என்பது என் அபிப்பிராயம். ஒரு இதழில் வெளிவரும் ஆக்கங்கள் சிறுவட்டத்துள் அடங்கி விட்டால் அது சென்றடையும் தூரம் குறுகியதாகிவிடும். ஒருவகையில் பார்த்தால் அது ஒரு கல்லூரியின் ஆண்டு மலர்போல் ஆகிவிடும். ஆகவே ஒரு நூல் வெளியீட்டின் பக்கங்களில் பாதி ஊர் சார்ந்ததென்றால் மீதி நல்ல தமிழ்ப்படைப்புகளாக இருக்க வேண்டும். அப்படியென்றால்தான் அந்த நூல் பலதரப்பட்டவர்களின் வரவேற்பைப் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இறுதியாக ஒன்று. இந்த நூல் நோர்வேயிலிருந்து வெளிவருகிறது என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அப்பிடியிருந்தும் அந்த நாடு எங்கள் இனப்பிரச்சினையில் காட்டும் அக்கறையைப் பற்றியோ அனுசரணையைப்பற்றியோ உன்னதமான பங்களிப்பைப் பற்றியோ குறிப்பிடாமல் விட்டிருப்பது மனதை நெருடுவதாக உள்ளது.
நன்றி:உதயன்-கனடா