Pages

Monday, April 24, 2006

பனிநிலா நாவாந்துறைடானியல்ஜீவா




போன வருசம் இதே நாளில் தான் கலா கனடா வந்ததாக அவளுக்கு நினைவு. கலா ஏதோ கப்பல் கவுண்டது போல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். மனமெல்லாம் புண்னாய் வேதனை கொத்திக் கிழித்தது. சோபாவில் இருந்து தொலைக்காட்சியில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த கலா நாடகம் முடிந்தது கூட தெரியாமல் முன் விறாந்தையின் பக்கமாக உள்ள கண்ணாடியினுடே வெளியே கண்வெட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
வானம் மூடு பனியால் போர்த்திக் கிடந்தது. வெண் பனித்திவலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. அங்கும் இங்குமாய் மனிதர்களின் நடமாட்டம். நிலவு போன்ற மலர் முகத்தில் எப்படி கருமேகம் குடிகொண்டது ?
அவள் எப்படி ஒரு மனநிலையில் இருக்க முடியும் ?
கணவன் வெளியில் போய் விட்டார். கலாவின் மாமன் முன்னறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாமாவைப் பற்றிய கவலைதான் கலாவுக்கு அதிகம். போன வருடம் இதே நாள் தான் இரவு பதினொருமணி அளவில் ரொரண்டோ விமான நிலையத்தில் வந்திறங்கினதிலிருந்து அவள் மனதை ஓர் ஆயிரம் நினைவுகள் அரித்துக்கொணகின்றன.
சொர்க்க பூமி என்று சுகம் தேடி வந்தவளா ? இல்லை சொந்தம் விடுபட்டுப் போகக் கூடாது என்பதற்காக வந்தவளா ?அல்லது இந்த நிலைக்கு அப்படி அவள் மாற்றப்பட்டாளா ?
விழி நீரைத் துடைத்தாள். எல்லாமே இழந்ததாக அவள் நினைக்கவில்லை. வாய்விட்டு அழுவதற்குக் கூட நாதி அற்ற நாடாய்ப் போய்விட்டதே என்பதை நினைக்கும் போதே அவள் மனதை கவலை நிறைக்கின்றது.
ஒரு வருடத்திற்கு முன் ஒரு நாள். . . .
“கலோ நான் கனடாவில் இருந்து கலாவின்ர மாமி கதைக்கிறன். ஒருக்காள் என்ர மருமோள் கலாவோட கதைக்கலாமா ?”
மறுமுனையில் இருந்து....
“ஐயோ அக்கா! அவ இவ்வளவு நேரம் நீங்க எடுப்பீங்க எண்டு இருந்திட்டு இப்ப தான் போறாங்க.
வேணுமெண்டா இன்னொரு அரை மணித்தியாலத்தால எடுப்பீங்கெண்டால் நான் அவவ கூப்பிட்டு விடுறன்.”
“ஓம் பிள்ள பிரச்சினை இல்ல நான் அரை மணித்தியாலம் கழிச்சு எடுக்கிறன். என்று சொல்லிக் கொண்டு ரிசீவரை வைத்தாள்.”
“அம்மா என்னவாமென ?” சுரேன் கேட்டான்.
“அவ இருந்துட்டு போய்ட்டாவாம். அவ்வளவு பொறுமையில்லாதவள் என்ணெண்டு தான் இங்க வந்து சமாளிக்கப் போறாளோ தெரியேல்ல ? உம். . . உம் என்ன செய்யிறது என்ர அண்ணையின்ர மகளாப் போய்ற்று எண்டு தான் சின்ன வயசிலேயே அவருக்கு சொல்லி வைச்சனான். இப்ப என்ன கேட்டுக்கொண்டிருக்கிறார். சரி போனா போகுதெண்டு அண்ணன்ர மகள் தானே எண்டு நினைச்சு உனக்கு கட்டிக் கொடுத்து விடலாமென்டால் கொஞ்ச கூட பொறுமை யில்லாதவளாய் இருக்கிறாளே இனி அரை மணித்தியாலயம் கழிச்சு எடுக்க வேண்டும். என்ன செய்யிறது என்ர தலை விதி.”
சுரேன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு நின்றான். மாணிக்கத்தின் கண்கள் அகள விரிந்தன.
“அம்மா பிள்ளையாச்சே கேட்கத் தானே வேணும்”எண்டு.மாணிக்கம் முனுமுனுத்தான்.
கோபத்தை உள்வாங்கிய முகத்தோடு மாணிக்கம் மனைவியையும் சுரேனையும் ஒரு பார்வை பார்த்து விட்டு;
“எடி ராசாத்தி நீ சொன்ன நேரத்திற்கு அந்தப் பிள்ளை வந்துதானே நிண்டது. நீ வீட்ட நேரத்தோட வராதது உன்ர பிழைதானே ? அதை விட்டுட்டுஅந்தப்பிள்ளையபேசிக்கொண்டிருக்கிறாய”
என்றுமாணிக்கம் சொன்னார்.
அடர்த்தியான மெளனம்.... உள்ளுக்குள் மனப்புழுக்கம் பிசுபிசுத்தது. உப்புச் சப்பில்லாத வாழ்வில் உண்டு உறங்கியதை விட மிஞ்சி இருப்பது மூன்று பிள்ளைகள் தான் மாணிக்கத்திற்கு. மூத்தவன் சுரேன். இளையவன் ரமேஷ். கடைக்குட்டி கவிதா. எந்த வகையிலும் மாணிக்கத்தை மதிக்காத மனைவி இராசாத்தியுடன் இணைந்து வாழ்ந்ததில் கிடைத்த சுகம் இந்த மூன்று பிள்ளைகளோடும் சிரித்து வாழ்வதில் தான்.
கோபம் கலந்த பார்வையோடு இராசாத்தி....
“நீ சும்மா இரும். உனக்கு என்ன தெரியும் தமிழ்க் கடையில மீன் வெட்டப் போறதும் வந்து தூங்கிறதும் தானே உன்ர வேலை. வீட்டில என்ன நடக்குது ஏது நடக்குது என்டு உனக்குத் தெரியப் போகுதா... ?
“ஏன்டி நீ தானே எல்லாத்தையும் தலையில தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாய். என்னெட்ட காசு வைத்திருக்க விடுறியா ? எல்லாப் பொறுப்பையும் நீ தான் என்று எடுத்துக் கொண்டிட்டாய். பிறகென்ன கதைக்கிற. மீன் கடைக்கு வேலைக்குப் போற சம்பளம் மாதம் முடிய உன்ர கையிலேயே கொடுக்க வேண்டும். வெல்வெயார் காசு உன்ர கையில் தான் இருக்க வேண்டும். அதுவும் போதாமல் அவன் சுரேனின் சம்பளக் காசையும் வாங்கி வைக்கிறாய் எப்ப பார்த்தாலும் பஞ்சம் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறாய். திரும்ப என்னண்டு வீட்டு விசயத்தில் நான் தலை போடுறது நீ விட்டாத் தானே.
“இந்தாளோடு கதைச்சாள் நம்ம வாய்தான் உழையும். பேசாமல் இருந்திட்டால் பிரச்சினை இல்லை” எண்டு முனுமுனுத்தபடி இராசாத்தி சோபாவில் உட்கார்ந்தாள்.
“சுரேன்! ஒரு கோப்பி ஒண்டு போடு மோன” என்று சுரேனைப் பார்த்து இராசாத்தி சொன்னாள். சுரேன் குசினிப் பக்கமாகப் போனாள்.
“ஏன்டி இராசாத்தி நீ போட்டா என்ன குறைஞ்சா போய்யிடுவ..”. கொஞ்சம் அதட்டல் கலந்த தொனியில் மாணிக்கம் கேட்டார்.
“நான் வெளியில போற்று வந்த களையில இருக்கிறன்....”
“அப்ப சுரேனும் தானே உன்னோட வெளியில போய்ட்டு வந்தவன். அவன் தானே காரும் ஓடி வந்தவன். இதில இருக்கிற வெல்வெயார் ஒப்பீசுக்கு போய்ட்டு வந்தது உனக்கு களைப்பாய்ப் போய்ற்றுதோ.”
“பேசாமல் இரு.விசர்க் கதை கதைககாமல்”. என்று இராசாத்தி வெட்டொண்டு துண்டாய் வார்த்தைகளை போட்டாள்.
“அம்மா இந்தான கோப்பி” என்று சொல்லிக் கொண்டு இராசாத்திக்கு முன்னாள் நின்றான் சுரேன்.
“அம்மாவுக் ஏற்ற பிள்ளை” என்று ஒரு நளினம் கலந்த நக்கலாக மாணிக்கம் சொன்னார்.
மாணிக்கம் தலைக்கு மேலாக இருக்கின்ற சுவர்க் கடிகாரத்தை பார்த்துக் கொண்டு;
“எடிய இராசாத்தி அரை மணித்தியாலம் ஆகுதே எடென்ரி” என்றார்.
கதிரையில் இருந்த இராசாத்தி தொலைபேசிக்குப் பக்கமாய் போய் அதைக் கையில் எடுத்து நம்பரை அழுத்திளாள்.
“கலோ. . . நான் கனடாவில் இருந்து இராசாத்தி கதைக்கிறன். கலா வந்திட்டாங்களா ?”
மறுமுனையில் இருந்து....
“ஓம் வந்திட்டாங்க அவங்கிட்ட குடுக்குறன்க கதையுங்க.”
இராசாத்திக்குள் சூடு ஏறியது. எதையாவது மனசில் வைத்திருப்பது இராசாத்திக்குப் பழக்கம் இல்லை. சட்டென்று வரும் கோபத்தில் தன் நிதானத்தை இழந்து விடுவாள். பின் எப்போதும் தான் கோபப்பட்டதற்கான காரணத்தை உணர்ந்தாலும் அவள் அது பற்றி அக்கறைப் படுவதில்லை.
“யாரு கலாவா கதைக்கிறது.... ?”
வார்த்தை தீயாய்ப் பாய்ந்தது.
“நான் உன்ர மாமி இராசாத்தி கதைக்கிறன். எப்படி புள்ள சுகமாய் இருக்கிறியா ?” வார்த்தையை தேனாகக் கொடுத்தாள். எப்போதுமே அப்படித்தான் அவள் வார்த்தையை போடுவாள். இது இராசாத்தியின் கதையின் தந்திரம்.
“ஓமுங்கோ நீங்க எப்படி இருக்கிறியள் மாமி.. ? மாமா மச்சான் மச்சாள் எப்படி இருக்கினம் ?”
“ஓம் சுகமாய் இருக்கினம...புள்ள நான் முதல்ல எடுத்தனான். நீ வந்துட்டுப் போனதாக சொன்னவைய. கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா ?” சூடேறியது வார்த்தையில்.
“மாமி நான் கனநேரம் காத்திருந்தனான். வீட்டுல சமைக்கிற நேரமாய்ச்சுதெண்டுதான்போனனான்.அம்மாவுக்குமுன்னமதிாி
ஓடியாடி வேலை செய்ய முடியாது தானே.கண்காணத தேசத்தில் போய் இருக்கப் போறாயே என்று நினைக்கத்தான் கவலையாய் இருக்கு எண்டு சொல்லிச் சொல்லி அழுவா.அவள் தங்கச்சியும் படிப்புப் படிப்பு எண்டு ஒரேயடியாத் திாியிறாள். நான் தானே வீட்டுல சமைக்க வேணும். அப்பாவுக்கு வேற அல்சர் இருக்கிறதாலா நேரத்திற்கு சமைத்துக் கொடுக்க வேண்டும். அப்பா தொழிலுக்குப் போய்ட்டு வரும்போது கிடைக்கின்ற மீன்சாதியில் சொஞ்சத்தை கொண்டு வருவார். இறால், ஏதேனும் மீன் பெரிதாகக் கிடைச்சுதெண்டால் குடாவிற்கு கொண்டு போய் விற்றுவிடுவார். சில வேளையில் குடாவிற்கு போகாமல் கிடைக்கிற மீன் சாதியை வீட்ட கொண்டு வருவார். நேரத்திற்கு சமைக்காவிட்டால் மீன் சிலநேரம் பழுதாய்ப் போய் விடும். அரிசிக்கு காசு இல்லையெண்டால் கிடக்கிற அரிசியைப் போட்டு புளிக் கஞ்சி குடிப்பம். இண்டைக்கு மீன் அப்பா கொண்டு வந்தவர். மீன் பழுதாய்ப் போய்விடும் எண்டதற்காகத் தான் காத்திருந்து விட்டு போய்டேன். மன்னிச்சுக் கொள்ளுங்க மாமி”
அவள் பேச்சில் இனிமை இருந்தாலும் வீட்டு வறுமை அப்படியே கொப்பளித்துக் கொண்டு வந்தது.
“சாப்புட்டாச்சா ? என்ன புள்ள இண்டைக்குச் சமையல் ?”
“புளிக் கஞ்சி தான் இண்டைக்கு காய்ச்சினது. அடுப்பில் இருந்து இறக்கிக் கொண்டிருக்கேக்க தான் இந்த வீட்டுக்கார புள்ள வந்து ரெலிபோன் வந்திருக்குது எண்டு சொன்னது. அதால குடிக்காமல் ஓடி வந்திட்டன்.”
“சரி புள்ள நான் சொன்னதெல்லாம் நினைவிருக்குதா ?”
“என்ன மாமி ?”
“இங்கிலிஷ் கிளாசுக்கும், கொம்பூட்டர் கிளாசுக்கும் போகச் சொன்னேனே மறந்திட்டாயா ?”
“நினைவிருக்குது மாமி....ஆனா படிக்கப் போறத்துக்கு காசு வேணுமே ? அன்றாடம் சாப்பாட்டுக்கே அப்பா நாயாய் அலைகிறார். அதுக்குள்ள படிப்புத் தேவை தானா ? ஓ எல் வரை அப்பா எப்படியோ படிப்பிச்சு விட்டார். அதுவே அவருக்கு சாகும் வரை நன்றியோடு நான் இருக்க வேண்டும்....”
அவ்வளவும் போதும் இராசாத்திக்கு மூக்குமுட்ட கோபம் வந்தது.
“சோத்துக்கு வழியில்லை எண்டாலும் கதையில உசத்தியாய் இருப்பீங்க உங்கட அப்பாவைப் போல...
சுரேணெட்டக் கொடுக்கிறன் கதை” எண்டு சுரேனிடம் ரிசிவரை இராசாத்தி கொடுத்தாள்.
வார்த்தைகள் தேளாய் குத்தியது கலாவுக்கு. சொல்லம்புகளால் சுக்குனுறாய்ப் போனாள். மனதில் சொற்கள் கீறிய வலி சொல்லெனாத் துயரமாய் ஆழ் மனதில் தேங்கியது.
“கலாவா எப்படி இருக்கிறாய் ?”
“அத்தான் நல்லா இருக்கிறன். நீங்க எப்படி இருக்கிறியள் ?”சந்தோஷத்தில் தவழ்ந்து வந்தது கலாவின் குரல்.
“நான் சுகமாய் இருக்கிறன்.”
“ஏன் அம்மா சூடா இருக்கிறா ?”
“அவங்க அப்படித்தான். அதைப் பெரிது படுத்தாதே.”
“உங்கட அப்பா எப்படி இருக்கிறார் ?”
“அப்பா பக்கத்தில் தான் இருக்கிறார். அவருக்கென்ன குறை.”
“கதைச்சு முடிவில அப்பாக் கிட்டையும் குடுங்க. மாமாவோடு கதைச்சு கனகாலம்.”
“சரியுங்க.”
“அத்தான் கடிதம் போட்டேன் கிடைச்சுதாங்க ?”
“ஓமுங்க கிடைச்சது. சின்ன வயதில் ஓடி விளையாடியது போலவே இப்பவும் மனம் மாறாமல் இருக்கிறாய். கடிதத்தை வாசிக்கும் போது சின்ன வயதில் சிரித்து உன் கூட பேசித்திரிந்தது தான் நினைவு வருகிகுது. எப்படியும் விசா இந்த மாதத்திற்குள் உனக்கு கிடைத்து விடும். அப்புறம் நேரில கதைப்பம் தானே.
“எத்தனை காலம் கடந்தும் உங்கள் அன்பில் மாற்றம் இல்லாமல் இருக்குது.அத்தான் என் அன்பு எப்போதும் மாறாது. காதல் என்றும் உயிரோடு வாழும். நான் உங்களில் இருந்து விலகி இருந்தாலும் உங்கள் வார்த்தைகள் சிறு வயதில் குறும்புச் செய்கைகள் எல்லாம் என் அடிமனதில் பதிவாகி பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். எப்போதும் உங்க கூடவே வாழ்வதாக என் நினைவெல்லாம் இருக்கும்;” கலா கதைத்துக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு....
“பதில் கடிதம் போடுறேன்.வேறு என்ன ரெலிபோனுக்கு காசு போகுது என்று அம்மா பேசப்போகுது. ரெலிபோனை வைக்கப்போகிறன் கலா.
“அத்தான் மாமா கிட்ட ஒருக்கா கொடுங்களன்”.
“அப்பா உங்களோடு கலா கதைக்கப்போகுதாம் கலாம்”
இராசாத்தியின் விசம் கலந்த பார்வை வீச்சுக்கள் சுரேன் மேல் விழுந்தது.
“பெல் கனடாவிற்கு ரெலிபோன் பில் ஏறப்போகுது என்று சொல்லிப்போட்டு வையடா சுரேன்.” சுரேனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதிங்கியபடி நின்றான்.
“என்ன அத்தான் சத்தத்த காணேல ?” கலா கேட்டாள்.
“கலா....ரெலிபோன் பில் கூடிப்போச்சு ரெலிபோனை வைக்கிறேன்”என்றுசொல்லிக்கொண்டு தொலைபேசியை வைத்தான்.
ஒரு வருடத்தின் முன் ஒரு நாள் நடந்த சம்பவத்தை வைத்தே மாமியின் குணத்தை இடைபோட்டு விட்டாள் கலா.மாமி எந்தளவிற்கு மாமாவை வைத்திருக்கிறார் என்பதையும் சுரேன் எப்படி தலையாட்டிப் பொம்மையாக இருப்பதையும் உணர்ந்து கொண்டாள். ஆயினும் சுரேனின் மேல் சிறு வயது முதல் கொண்டு வளர்ந்த புனிதமான உறவு மாறாத நிலையிலேயே கலா. அதேபோல் எந்த நிலையிலும் சுரேனும் அதே நிலையிலேயே கவனிப்பு, எண்ணம், சிந்தனை, செய்ற்பாடுகள் எல்லாம் அமைந்திருந்தது. மாமியின் அழுத்தமான தாய் பிள்ளை உறவுக்குள் சிக்கித் தினறுவதை அவள் மனதளவில் உணர்ந்து கொண்டாலும் சுரேனோடு எப்போது எந்த நிலையில் கதைப்பது என்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடியாத நிலையிலும் அதற்கான சூழலை எதிர்பார்த்த படி காத்திருந்தாள்.
வெளியில் வெண்பனித் தூவல் சற்றுக் குறைந்து விட்டது. பிற்பகல் ஐந்து மணியைத் தாண்டுவதற்கு முன் இருண்டு விட்டது. கலா கண்ணாடியின் ஊடே பார்த்துக்கொண்டிருந்த பார்வை சற்று விலகி சுய நினைவுக்கு வந்தாள். கொஞ்சம் வயிறு பசிப்பது போல் உணர்ந்து கொண்டாள். ஆயினும் அவள் சாப்பிடுவதற்குரிய மனம் அவளிடம் இல்லை. தேத்தண்ணி போட்டுக் குடிக்கலாம் என்ற எண்ணத்தோடு குசினிக்குள் போனாள். சற்று நேரத்துக்குள்ளேயே அவள் தேத்தண்ணியை போட்டுவிட்டாள். அப்ப தான் அவள் மனதுக்குள் ஒரு நினைவு தோன்றியது. மாமா முன்னறையில் தூங்குவது நினைவுக்கு வந்தது. மாமாவிற்கும் ஒரு தேத்தண்ணியை போட்டுக் கொண்டு கதவைத் தட்டினாள்.
மாணிக்கம் எழுந்து வந்து கதவைத் திறந்தார்.
“என்ன பிள்ள ?”
“தேத்தண்ணி மாமா..”
கையை நீட்டி தேத்தண்ணியை வாங்கிக் கொண்டு மாணிக்கம் வெளியே வந்தார்.கதிரையில் உட்காந்து கொண்டு முகத்தை லேசாக துடைத்தார்.
“என்னபுள்ள ஒருதரையும்காணல... ?”
“மாமியும் இவரும் சொப்பிங் செய்யப்போய்ற்றினம்.... மச்சானும்,மச்சாளும் கடையில படக்கொப்பி கொடுக்கப்போய்ற்றினம்....”
“அப்ப நீ! ஏன் புள்ள அவனோட போய்யிருகக்கலாம்தானே.... ?”
“எனக்கும் விருப்பம்தான்....ஆனால்....!”
“என்ன புள்ள ஆனா எண்டு சொல்ற....பூாியக்கூடியதாக சொல்லன்புள்ள.... ?”
“உங்களுக்குத் தொியும்தானே மாமா.... மாமியடகுணத்தை....மாமி இவரோட அவ்வளவு கதைக்க என்ன விடமாட்டாங்க இவரை நான் கெடுத்துப்போட்டிருவன் எண்டுதான்.... இவர்கூட என்னோடு சாியாய் கதைப்பதில்லை.”
“எனக்குத்தொியும் புள்ள நான் சொல்றன் என்று குறை நினைக்காதே.அவன்கிட்ட உங்கட மனத்திலுள்ள
பிரச்சினையைமனம்திறந்துகதையுங்கஅவன்ஏற்றுக்கொள்ளுவான்.ஏனென்றல் அவனைப்பற்றி எனக்கு நல்லாய்த்தொியும்.அவன்ஒரு நல்ல பொடியன் இந்த நாட்டிலே இந்தப் பழக்க வழக்கங்களோடு பொடியலை காண்பது அாிது. ஆனால் அவனை என்ர மனிசிதானே ஆட்டிப்படைக்கிறாள்.நீ சாியென்றாள் அவனை உன் வழிக்கு கொண்டுவரமுடியும்.”
கலா கேட்டுக்கொண்டே மெளனித்திருந்தாள்.

No comments: