திரு.போல் அவர்கள் தனது ஒன்பதாவது வயதில் படிக்கின்ற காலத்திலேயே கலை வாழ்வில் பிரவேசித்தவர். ‘தீத்தூஸ்’ என்னும் சமய நாடகத்தில் ‘கபரியேஸ் தூதன்’ என்னும் பாத்திரத்தில் நடித்திருந்ததுதான் இவரது முதலாவது மேடையேற்றம்!
அன்று தென் இந்திய திரைவானில் பிரபலமாக இருந்த நடிகர் எம்.கே.தியாகராஜபாகவதர் அவர்களின் குரல் வளத்தில் கவரப்பட்ட இவர், தனது பதினாறாவது வயதில் அவர் நடித்திருந்த ‘அசோக்குமார்’ படக்கதை பாடல்களை நாடகமாக அரங்கேற்றி ‘குணாளன்’ என்னும் பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இவர் நாடகங்களில் பாகவதர் பாணியிலேயே பாடி நடித்ததனால் யாழ்ப்பாணத்தில் இவரைச் சின்னப் பாகவதர் என்றே பலரும் அழைப்பார்கள்!
தனது இருபத்தி மூன்றாவது வயதில் ‘ஏழையின் கண்ணீர்’ என்னும் நாடகத்தில் பரதம் பாத்திரத்தை ஏற்று நடித்து கலை வாழ்வில் பிரகாசிக்கத் தொடங்கினார். இவரது சகோதரர் நீ.பர்னாண்டோ அவர்கள் சிறந்த அண்ணாவியாராகையால் அவர் தனது சகோதரரான இவரின் குரல் வளத்தைப் பயன்படுத்தி ‘புனித யுவானியா பார்ப்பாரம்பாள்’ நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவைத்து பத்திற்கும் மேற்பட்ட முறைகள் மேடையேற்றி போல் அவர்களுக்கு பெரும் புகளைத் தேடிக்கொடுத்தார்.
திரு.போல் அவர்கள் தனது நாட்டுக்கூத்து அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘அன்றைய காலத்தில் நாட்டுக்கூத்திற்கு பின்னணி இசை மத்தளம் கைத்தாளம் பிற்பாட்டு மட்டும்தான். ஆர்மோனியம் ஒலிபெருக்கி (ஸ்பீக்கர்) இவையெல்லாம் கிடையாது! வாயினாலேயே பெரும் குரலெடுத்துப் பாடவேண்டும். வசனமும் ராக ஓசையுடந்தான் பேசவேண்டும்! அதேநேரம் பாத்திரங்களுக்கேற்ற ஆட்டமும் உண்டு! எனது குரல் வளம் மூன்றரைச் சுருதியில் இருந்ததனால் என்னால் பாடி ஆடி நடிப்பது சிரமமில்லாமல் இருந்தது.
நான் குறிப்பிடும் காலகட்டத்தில் கரையோரப்பகுதி கிறிஸ்த்தவ மக்களே நாட்டுக்கூத்தில் புகழேணியில் இருந்தார்கள். இவர்களில் மிகத் திறமையானதொரு கலைஞர் இயக்குனர் காலம்சென்ற திரு.பூந்தான் யோசப்பு அவர்கள். நான் நடித்த நாடகங்களை இவர் பார்த்துள்ளார். ஒருமுறை என்னைச் சந்தித்து தனது நெறியாழ்கையில் இயங்கும் நவரசக் கலா மன்றத்தில் இணையும்படி அழைத்தார். நான் நவரசக் கலா மன்றத்தில் இணைந்ததும் அவரின் இயக்கத்தில் ஜெனோவா, சங்கிலியன், கருங்குயில்க் குன்றத்துக் கொலை, மனம் போல மாங்கல்யம், சவேரியார்” போன்ற நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடிக்க வைத்தார். இந்த நாட்டுக்கூத்து நாடகங்களும் இசை நாடகங்களான ஞானசௌந்தரி, புது வாழ்வு, ஆகிய நாடகங்களும் சுமார் தொண்ணூறுக்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப் பட்டிருக்கின்றன. இந்த நாடகங்களையெல்லாம் இவர் இரவு எட்டு மணிக்கு தொடங்கி மறுநாள்க் காலை ஆறு மணிவரை நடத்துவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். திரு பூந்தான் யோசேப்பு அவர்கள்தான் என்னை நாட்டுக்கூத்தில் மேன்மையடையச் செய்தவர் என நன்றி உணர்வோடு ஒரு செவ்வியல் கூறியிருந்தார் திரு.போல் அவர்கள்.
நாட்டுக்கூத்து, இசை நாடகங்களென பதினாறுக்கும் மேற்பட்ட நாடகங்களை இவரே எழுதியிருப்பதோடு பலாலி, மயிலிட்டி, தாளையடி, நாவாந்துறை, சுண்டுக்குளி, அல்லைப்பிட்டி, முதலான ஊர்களில் உள்ள கலைஞர்களுக்கு பழக்கி நெறியாழ்கை செய்து பல கலைஞர்களை உருவாக்கியும் உள்ளார்.
திரு.வின்சென் டி போல் என்ற இந்த நாட்டுக்கூத்து அண்ணாவியாருக்கு நவரசக் கலா மன்றத்தால் ‘எழிலிசைக் கலைஞன்’ என்னும் விருதும் குழந்தைக் கலைஞர் சத்தியசீலனால் ‘இசைநம்பி’ என்னும் விருதும் வழங்கப்பட்டதோடு திரு.முல்லைக்கவியும், திருமறைக் கலாமன்றமும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்திருக்கின்றனர். என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
முகவரி74-3 கடற்கரை வீதியாழ்ப்பாணம்
பிறந்த திகதி :- 19-05-1924
No comments:
Post a Comment