Pages
Saturday, April 03, 2010
திருப்பாடுகளின் குறிப்புகள்
துயர் இறங்கி வரும் அகதியாய்
சுற்றும் முற்றும் இழந்து
அண்ணன் குடும்பத்தோடு
வீதியில் நடந்து கொண்டிருந்தேன்.
மேலே வானில் கெலியும் பொம்பரும்
கீழே எங்கனும் கண்ணி வெடி
விதைக்கப்பட்டிருக்கலாம் என்ற
மனப்பயத்துடன் மெல்ல மெல்ல..
தோலில் சுமையுடன்
ஏதற்க்காக என் வீட்டையிழந்து
தெருத் தெருவாய் அலைய வேண்டும்..?
எப்போதும் எனக்குள்ளிருக்கும்
இக் கேள்விக்கு
இது வரை
விடைகிடைக்கவேயில்லை
காலம் காலமாய்
அழுது அழுது
கண்களில் ஒளியிழந்த அம்மா
நேற்று வரை வீடு
திரும்பாத மகனுக்காக
காத்திருந்து களைத்துப் போய்
அழுத விழியோடு
எங்களுக்கு முன்னரே நடந்து
அகதி முகாம் சென்று விட்டாள்.
தங்கச்சி விதவை
தனியே நடக்கப் பயப்படுவாள்
ஆனாலும் குழந்தைகளோடு
முன்னோடி முகமுக்குள்
இடம் பிடித்து விட்டாள்.
அண்ணனின் முதுகில்
புத்தகப் பெட்டி
எந்த நேரத்திலும்
எங்கள் மீது குண்டுகள் வீழ்ழலாம்
இந்த நேரத்திலும்
இதைச்சுமந்து வரவேண்டுமாவென்ற
பார்வை;
அண்ணியின் விழிகளில்...
கொஞ்சமும் பொறுமையற்ற நான்;
எப்படித்தான் இவ்வளவு துயரையும்
பொறுத்துக் கொள்கிறேனோ தெரியவில்லை?
முச்சந்தி கடக்க
எனது ஊரான் சுட்டு வீழ்த்தப்பட்ட
செய்தி அறிந்தேன்.
என்ன வாழ்கை எங்களுக்கு
யாரால் விதிக்கப்பட்டது?
பெருமூச்சோடு கண்களில் நீர்த்திவலை
அகதி முகம் நெருங்க நெருங்க
தற்காலிக ஆறுதல் கிடைக்குமென்ற
அற்ப ஆசை
நேற்றிய பொழுதிலும்
வான்படை வந்து
வெளிச்சம் போட்டு
கெலியிலிருந்து சுட்டார்கள்
சுவரில் காய்ந்து கிடந்தது
போரின் முகம்
இன்றைய பொழுதும்
இப்படியே கழிகிறது
நாளைய பொழுதெனும்..
நலிந்த நம்பிக்கையோடு
நிலத்தில் தெறித்த என் பார்வை
பொம்பரின் சத்தத்துடன்
நிமிர்ந்து பார்த்தேன்.
அதிர்ந்து உயிர் ஓடுங்கி
ஒரு வீட்டின் ஒரமாய்
ஒதுங்கினோம்
குண்டுகள் வீழ்ந்தது
அகதி முகாம் மீது...
இனி..
நன்றி :காலம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
very good.
mullaiamuthan
very good.
mullaiamuthan
Post a Comment