எனக்குப் பிடித்தகதைகள் 3
சதுரக் கள்ளி –
தேவகாந்தன்
அன்று சனிக்கிழமை. தூக்கம் கலைந்தும் உடம்பு சுறுசுறுப்புக்குத் திரும்பாத காலை வேளை. யோசிக்க எவ்வளவோ இருந்தன. இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தம் இருந்தது. கனடாவில் கொடுக்க வேண்டிய வங்கிக் கடன் பிரச்சினைகள் இருந்தன. இருந்தும் மீண்டும் மீண்டுமாய் அவனுக்கு அந்த முட்செடியின் நினைவுதான் ஏனோ எழுந்துகொண்டிருந்தது. போன கிழமையில் ஒருநாள் உயர்ந்து வளரும் அந்த முட்செடியின் மேல்பாகம் வேலிக்கு மேலால் வளர்ந்து நின்றுகொண்டிருப்பதான கனவு தோற்றமாகியிருந்தது. பற்கள்போன்ற முட்கள் தெரியும்படியான ஒரு அசுரச் சிரிப்போடு அவனை நோக்கி அது தலையசைப்பதுபோன்ற காட்சி. எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து அவனைத் திடுக்கிட்டு எழும்பவைக்கிற காட்சியாகவிருந்தது அது. அவன் அலறிக்கொண்டும் எழுந்திருக்கலாம். ஏன் ஏதாவது கெட்ட கனவு கண்டீர்களா? என்று காலையில் அவனது மனைவிகூடக் கேட்டாளே. அதுவும் ஒரேநாள்தான். கனவா, நினைவின் தடம் புரள்வா என்றுகூட அதுபற்றி இன்னும் தெளிவிருக்கவில்லை அவனுக்கு. அந்தக் கனவின் பின்தான் அந்த நிலைமை ஏற்பட்டதோ? இருக்கலாம். அது அவனது நினைவுகளின் முக்கியமான கூறினைக் கொண்டிருந்த இடமாயே இருந்ததை அவன் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் யாழ்ப்பாணத்தில் தன் வீடு சென்றிருந்தபோதே உணர்ந்திருந்தான். வாழ்வை வழி நடத்தும் மூலாதார உணர்வுகளுக்குக் காரணமான சில சம்பவங்கள், பெரும்பாலும் மேலெழுந்தவாரியான நினைவுகளில் படாமலே இருந்துவிடுவதை அனுபவம் அவனுக்கு காட்டிக்கொடுத்திருக்கிறது. அந்தப் பயணம் அவனுக்கு அதிமுக்கியமான ஒன்று. வழி தெரியாதிருந்தது. திசைமூலம் மட்டுமே அன்று தன் வீட்டை அவன் அடையாளம் கண்டு சென்றடைய முடிந்திருந்தான்.
அவனது ஊரிலே ஒரு வயல் இருந்தது. அதன் மத்தியில் ஒரு தாமரைக் குளம். குளத்தோரத்தில் மருதமரம் ஒன்று. சூழலில் பசுமை கொஞ்சம் குறைந்த மாதிரித் தென்பட்டதே தவிர, அந்த அடையாளத்தில் மாற்றமெதுவும் பெரிதாக நிகழ்ந்திருக்கவில்லை. அதன் முன்னால் பிரதான சாலையிலிருந்து குத்திட்டாய்ப் பிரிந்து ஒரு தார் றோட்டு சென்றிருக்கும். நண்பனிடம் சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு அந்த இடத்தை ஒரு மாலையில் வந்தடைந்த விவேகானந்தன், திகைத்துப் போனான். அந்த வயற் குளத்திற்கு முன்னால் இருந்திருக்கக் கூடிய தார் றோட்டுக்கு என்னானது? அது இருந்த இடத்தில் ஒரு வெண்கோடு மட்டுமே ஓடியிருந்தது. இரண்டு பக்கங்களிலும் ஆளுயரத்திற்கு வானஞ்சம்பும், ஒட்டொட்டியும். கண்டதோ கேட்டதோ இல்லை, புல் பூண்டுகள் எந்த ஊரிலும் அந்தளவு உயரத்துக்கும், அந்தளவு செழிப்போடும் முளைக்கக்கூடுமென்பதை. அந்த வழிதான் முன்பு இருந்த தார் றோட்டின் எச்சமென்பதை, ஓரத்தில் மின்சாரமும், அதைத் தாங்கி வந்திருந்த எஃகு கம்பிகளும் அற்று நின்றிருந்த பழைய மின்சாரத் தூண் உறுதிப்படுத்த அவன் மேலே சென்றான்.
பிரதான சாலையிலிருந்து சற்றொப்ப இரு நூறு யார் தூரத்தில் அவனது வீடு முன்பு இருந்தது. அப்போது இருநூறு யாருக்கு மேலே வந்திருந்தும் அவனுக்கு தனது வீடு தென்படவில்லை. எங்கே அவனது வீடு என்று யாரையாவது விசாரிக்கலாமெனில் யார் கண்ணில் தட்டுப்பட்டார்கள்? எங்கோ தொலைவில் யாரோ கதைத்துக் கேட்டது. எங்கோ தொலைவில் ஒரு வயற் குருவி கத்திக்கொண்டு ஓடியது. அவ்வளவுதான் அந்த ஊர் கொண்டிருந்த வாழ்வியக்கத்தின் சத்தங்கள்.
விவேகானந்தன் மேலும் மனத்தில் அதிர்வுகொள்ள, சற்றுப் பின்னால் அறிகையானான் தான் அப்0போது நின்றுகொண்டிருந்த இடத்துக்கு முன்னாலேதான் இருக்கிறது தன் நிலமும், வீடும் என்பதை.
விவேகானந்தன் இன்னும் எச்சமாய் நின்றிருந்த வேலி மரத்தில் சைக்கிளைச் சரித்துவிட்டு உள்ளே சென்றான். படி, விறாந்தை, விறாந்தையோடிருந்த காம்பறா, பெரிய அறை, சின்ன அறை, சமையலறையெல்லாம் அந்நந்த இடத்தில் அந்தந்தப்படியேதான் இருந்தன. ஆனால் சீமெந்து, கல் தவிர வேறு எதுவும் இல்லாததாய் ஒரு செட்டை உரித்த கோழிமாதிரி நின்றுகொண்டிருந்தது வீடு. நிலைகள், ஜன்னல்களெல்;லாம் மிக்க அழகாகப் பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தன. மிக நிதானமாகச் செய்யப்பட்ட வேலை. மிகுந்த கைத்தேர்ச்சி பாவிக்கப்பட்டிருந்தது. ஒரு நிலை அல்லது ஜன்னல பெயர்க்கப்பட்ட இடத்தில் அதே உயரம் அகலமான நிலையையோ ஜன்னலையோ வைத்து சிறிது சாந்து குழைத்து அப்பிவிட்டால் அப்படியே பொருந்திப்போகிற மாதிரியான பெயர்ப்புக்கள். அந்தளவு கைத்தேர்ச்சியடைய அந்தக் கைகள் எத்தனை பெயர்ப்புக்களை அதுபோல் செய்திருக்கவேண்டும்! விவேகானந்தன் கண்களில் நீர் தளும்ப எண்ணி வியந்தான்.
வானம் மெல்லிய வெளிச்சம் காட்டி மேலே விரிந்து கிடந்தது. முன்பெல்லாம் அவ்வாறு தெரிந்து விடாது. மாமரங்கள், பலாக்கள், வேம்புகள், மஞ்ஞவுண்ணாக்கள் என சோலைபத்திக் கிடந்த வளவு அது. இருள்வது பிரக்ஞையாகாமல் விறாந்தையிலேறி விவேகானந்தன் சின்ன அறைப் பக்கம் வந்தான்.
அதுதான் சின்ன வயதில் அவனுடைய அறையாக இருந்தது. தெற்குப் பக்கமாய்ச் சுவரோரத்தில் மேசை. அதன்மேல் பள்ளிக்கூடப் புத்தகங்கள், கொப்பிகள்.
ஆனந்து என்று அம்மா நீட்டி அழைப்பாள். அவன் படித்துக்கொண்டிருந்த ஆழ்ச்சியில் கேட்கமுடியாது போய்விடுவான். அல்லது கேட்டாலும் ‘ஓ’யென்று பதில் தர இயல்பூக்கம் அற்றிருந்திடுவான். அம்மா வாசலில் வந்துநின்றுதான் பிறகு பேசுவாள்;. கடைக்குப் போய்வர, குழையொடிக்க அல்லது அப்படி ஏதாவதொன்றுக்குக் கேட்பாள். ஆனந்து நல்லபிள்ளை. மறுப்பதில்லை.
அப்போது அந்த வளவுக்குள் நடுவேலி இருக்கவில்லை. ஆனந்தன் பார்வை திரும்பினால் பட்டுக்கொண்டிருந்தது பாக்கியம் மாமி வீடுதான். பாக்கியம் மாமிக்கு ஆனந்தன்மீது நல்ல பிரியம். அவனுக்கும் மாமிமீது நல்ல வாரப்பாடு. பின்வேலி பாக்கியம் மாமியாக்களுக்கு உரித்தானது. அறிக்கையாக அடைக்கப்பட்ட வேலிதான். ஆனாலும் அதில் ஒரு பொட்டு எப்படியோ வந்துவிடும். பொட்டு வைக்கிறது முதலில் கோழி. பிறகு ஆட்டுக் குட்டிகள். பிறகு ஆனந்தன்தான்.
பாடசாலைக்கு விடுதலையானாலோ, சனி ஞாயிறுகளிலோ பொழுதுபட்டவுடன் படிக்கச்சொல்லி வீட்டிலே பெரும்பாலும் கரைச்சல் இருப்பதில்லை. படிப்பு அந்நாட்களில் அவனது இ‘;டபூர்வமான வி‘யம். ஆனந்தன் பாக்கியம் மாமி வீட்டுக்குப் போவான். மாமி குளிக்க கிணற்றடிக்குப் போனால் லாம்புகொண்டுபோய் வைத்;;;திருப்பது அவன்தான். குளிக்கும்போது தண்ணீர் தெறித்து லாம்புச் சிமிலி உடைந்துவிடுமென்று மாமிக்குப் பயம். மாமி குளித்து முடிந்து ஈரம் துவட்டி வந்ததும் ஆனந்தனைக் கட்டிப் பிடித்து நல்லபிள்ளையென்று கொஞ்சுவாள். முலைகள் பட அவள் கொடுக்கும் அந்த அணைப்பு ஆனந்தனுக்கு வெகு சந்தோ‘மாயிருக்கும். பாக்கியம் மாமி ஐயா அளவுக்கு உயரம் பருப்பமானவள். பெரிய பெரிய முலைகள் அவளுக்கு. அந்த முலைகளில் அவனுக்குத் தனிக் கவனம் இருந்தது அந்த வயதிலேயே.
எப்படியோ அந்த இரண்டு வீட்டாருக்குமிடையில் இருந்த அன்னியோன்யம் ஒருபோதில் தெறித்துப்போனது. பொட்டும் அடைபட்டுப் போனது. ஆனந்தன் அடைந்துவந்த இனம்புரியாத இன்பமும் இல்லாது போய்விட்டது. ஆனந்தனுக்கு குடும்பப் பிளவின் காரணம் தெரியவில்லை. ஆனால் அது ஒருவரையொருவர் பார்க்க பேச பிடிக்காத அளவுக்கு வன்மமாக இருந்ததை மட்டும் அவன் அறிந்திருந்தான். அதுபோதும் அவனுக்கு. அதேயளவுக்கு அவனும் அவர்களைப் பார்க்கப் பிடிக்காமலும், பேசப் பிடிக்காமலும் இருக்கப் பழகிக்கொண்டான்.
பாக்கியம் மாமி இரவிலே அப்போதும்தான் குளிக்கிறாள். லாம்பு கிணற்றடி மறைப்பு வேலியில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆனந்தன் சின்ன அறையிலிருந்து கண்டுகொண்டிருக்கிறான் எல்லாம்.
அதற்கும் ஒருநாள் முற்றுப்புள்ளி விழுந்தது. ஐயா ஒரு சனிக்கிழமை தன்கீழ் வேலைசெய்யும் உதவிமேசன்கள், முட்டாள் வேலைசெய்வோரை அழைத்து வந்து வளவுக்குள் நடுவேலியொன்று போட்டுவிட்டார். முகமறைப்புக்கு மூன்று வரி கிடுகும் கட்டப்பட்டாயிற்று.
ஒரு மழைக்காலம் முடிந்த நாளில் தற்செயலாக நடுவேலிப் பின்புறத்தில் ஒரு பசிய முட்செடித் தாவரத்தைக் கண்டான் ஆனந்தன். கொடுவாக் கத்தி எடுத்துவந்து அதை வெட்டப்போனவனைத் தடுத்து ஐயாதான் கொண்டுவந்து முளைக்க வைத்ததாக அம்மா சொன்னாள். ஏனென்று கேட்டதற்கு, பாக்கியம் வீட்டாரின் எரிச்சல், பொறாமைகளை மட்டுமில்லை, அவர்கள் செய்துவிடக்கூடிய செய்வினைகளையும், ஏவிவிடக்கூடிய பில்லி சு+னியங்களையும்கூட அந்த சதுரக்கள்ளி மந்திர மகத்துவத்தோடு நின்று தங்களைக் காக்குமென்றாள்.
எப்படியோ மெல்லிய அச்சமொன்று ஆனந்தன் மனத்தில் விழுந்துவிட்டது. பரவசம் விளைத்த முலைகளசைய பாக்கியம் தன் பெரிய ஆகிருதியோடு தங்களைக் கெட்டுப்போக வைக்க சிவந்த கண்ணும், துடிக்கும் வாயும், விரித்த தலைமயிருமாய் வேலியில் வந்துநின்று பார்த்துக்கொண்டிருப்பதுபோல் ஒரு நினைவு ஆனந்தனுக்கு எப்போதும் இருந்து வந்தது.
மந்திர சக்தி கொண்டதான சதுரக்கள்ளிதான் அவ்வாறு அவள் தங்களது வீட்டை நெருங்குவதைத் தடுத்துக்கொண்டிருப்பதாக அப்போது அவன் மெய்யாலுமே நம்பிக்கொண்டிருந்தான்.
சதுரக் கள்ளி பசளையிட்டு வளர்த்ததுபோல் கிசுகிசுவென வளர்ந்தது. வேலி உயரத்தில் வர ஐயா வெட்டிவெட்டி விடுவார். வெட்டப்பட்டு விழுந்த துண்டங்களும் வேர் பிடித்து முளைத்து நெடிதாக வளர்ந்தன.
ஐயா ஒருநாள் திடீரென்று செத்துப்போனார். அவர் செத்தபோது வாயிலே ரத்தக் கறை இருந்ததாம்.
அம்மாவின் சோகம் பெரிதாக இருந்தது. தன் சகல பிடிமானமும் அழிந்துபோனதாய் சொல்லிச் சொல்லி அழுதாள். அம்மா முற்றத்தில் புரண்டு புழுதி உழுதபடி அழுதரற்றியதைப் பார்த்துப் பார்த்துத்தான் ஆனந்தனுக்கும் அழுகைமேல் அழுகையாக வந்தது. சதுரக்கள்ளி தன் தந்தையைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டதே என்று நினைத்தபோது அவனால் தாங்கமுடியாமல் இருந்தது.
மூன்று நாட்களுக்குப் பிறகு ஐயாவின் சிறிய தகப்பன் கதிர்காமர் செத்தவீட்டுக்கு வந்தார். கண்டிக்கு பொயிலைகட்டப் போயிருந்ததாகச் சொன்னார். என்ன நடந்தது என்று அழுத அம்மாவை தணியவைத்துக் கேட்க, அம்மா எதுவுமே தனக்குத் தெரியாதென்றாள். மாயமாய் எல்;லாம் நடந்துவிட்டதென்று சொன்னாள். கதிர்காமர் வீட்டுக்குப் பின்னால் போனார். நடுவேலியைப் பார்த்தார். பின் சதுரக்கள்ளியை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தபடி நின்றார். சிறிதுநேரத்தில் அம்மாவை அழைத்துக் காட்டினார். ‘இது அடங்கி நின்றால்தான் செய்வினைகளைத் தடுக்கும். இல்லாட்டி இதுவே ஆளைக் கொன்றுபோட்டுவிடும். எப்போதும் வீட்டு ஆளுயரத்துக்கு மேலே இதை வளரவிடக்கூடாது. சாமியைவிட இரண்டு அடி உயரத்துக்கு இது வளர்ந்திருக்கிறதைப் பார்த்தியா? இதுதான் சாமியைக் கொன்றது’ என்றார்.
எந்தவொரு சிறுதுண்டிலும் உயிர்கொள்ளும் அதன் ராட்சத வளர்ச்சியின் விசைமீதிருந்த பிரியமும், அதன் கொடுஅழகும் அன்றுதான் ஆனந்தனுக்குக் கெட்டன. பிரியம் கெட்டது மட்டுமில்லை, ஒரு வெறுப்பும் கூட வளரலாயிற்று.
அதன் பசிய நிறம் ஒருகாலத்தே அழகானதாய்த்தான் இருந்தது அவனுக்கு. அப்போது அவலட்சணமாய், வெறுப்பாய், பயங்கரமாய்…எப்படியென்று சொல்ல…இவையெல்லாம் கலந்த ஒரு கலவையுணர்வாய் வளர ஆரம்பித்துவிட்டது.
உடம்பு மிகமிக நொய்மை கொண்டது அது. தன் தசைகளை நடுவடத்திலிருந்து நான்கு திசைகளுக்கும் நீட்டிக்கொண்டிருக்கும். மஞ்சள் நிறமாயிருக்கும் அதன் முட்கள். ஒரு புள்ளியிலிருந்து இடைவெளியற்றதாய் மூன்று நான்கு முட்கள் அந்த நான்கு திசை சதைத் திரட்சிகளிலும் நீட்டிக்கொண்டிருக்கும். கற்றாழை, நாகதாளி போன்ற கள்ளி இனக் குடும்பத்தைச் சேரந்ததுதான் சதுரக் கள்ளியும். வறள் நிலத் தாவரம். எஸ்;.எஸ்.சி.க்கு தாவரவியலை ஒரு பாடமாய்ப் எடுத்தபோது இவையெல்லாம்பற்றி விரிவாகப் படித்திருக்கிறான் விவேகானந்தன். ஆனால் அதன் மந்திரத் தன்மைபற்றி எந்தப் பக்கத்திலும் ஒரு வரியேனும் இருந்திருக்கவில்லை. இருந்தும் சதுரக் கள்ளி ஒரு மாயம் நிறைந்த செடியான கற்பிதம் அவன் மனத்திலிருந்து அகலவேயில்லை.
ஜன்னல் வெளியினூடு பார்க்க பின் வளவு தெரிந்தது. நடுவேலி மரங்கள் போய்விட்டிருந்தன. மரங்களின் இடத்தில் நெருக்கமாய் அடைத்தபடி அந்த முட்செடி. இன்னும் வளவின் இரண்டு மூன்றிடங்களிலும் அந்தச் செடி ஓரலாய் நெடிய வளர்ந்திருந்தது தெரிந்தது.
விவேகானந்தன் அவசரமாய் விறாந்தையிலிருந்து இறங்கி பின்னால் சென்றான். சதுரக் கள்ளிகள் தலையுயரத்துக்கு மேல் வளர்ந்திருந்தனபோன்றே அந்த இருளினுள் நின்று பார்த்தபோது அவனுக்குத் தென்பட்டது. அதன் தலையில் வெண்ணிறப் பூபூத்திருப்பதாயும்கூட அவன் கருதினான். ‘இதை நீங்கள் தலை உயரத்துக்கு மேல் வளர விட்டிருக்கக் கூடாது’ என கதிர்காமர் அம்மாவுக்குச் சொல்வது போல ஒரு மாய ஒலி காற்றில் ஒலிக்கிறதா? விவேகானந்தன் ஒரு நிமிடம் மேற்கொண்டு அந்த இடத்தில் தாமதிக்கவில்லை. ஊர் நல்லபடி அமைதிக்குத் திரும்பட்டும், அப்ப வீடு வளவை என்ன செய்வது என்பதுபற்றி யோசிக்கலாம் என அறுதியாய் எண்ணமிட்டபடி சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். அந்தத் தடுதாளியில் பாக்கியம் மாமி வீட்டைப் பார்க்கிற நினைவு ஒரு துண்டுக்குக்கூட அவனிடத்தில் எழவில்லை.
வானொலியிலும், தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வன்னியில் மக்கள் கொத்துக்கொத்தாய் செத்துக்கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்ற காலமாய் இருந்தது அது. அந்தமாதிரியான மனிதாபிமானமற்ற இனப்படுகொலையை எந்தவொரு வல்லரசு நாடாவது தடுத்துநிறுத்தக் குரல் கொடுக்காதா என எல்லோர் மனமும் நாளெல்லாம் பிரார்த்தனை செய்தது. அன்றைய கவனயீர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொள்ள அந்தக் கொண்டோவிலிருக்கும் சில தமிழர்கள் அவசரஅவசரமாக வெளிக்கிட்டு போய்க்கொண்டிருந்தார்கள். அவன் இன்னும் படுக்கையில் எழும்பாதபடியே.
திடீரென விவேகானந்தனுக்கு மனமெல்லாம் நிறைத்து ஒரு பிரமாண்டமான காட்சி விரிகிறது. வன்னியில் காட்டெருமைகளும், காட்டுப் பன்றிகளும், மான்களும், மரைகளும் பாம்புகளும்கூட மனிதர்களைவிட அதிகமாயிருந்த காலமொன்றிருந்தது. போக்கும் வரத்தும் கால்நடையாய் இருந்த காலமும் அதுதான். அந்தக் காலம்போல அப்போது வன்னி மாறியிருக்கிறது. நிலமெல்லாம் ஆளுயரத்துக்கும் மேலாக அதீத வளர்ச்சியடைந்த சதுரக் கள்ளிகள் முளைத்து நிற்கின்றன. இருட் பச்சையாய், நான்கு திசைகளும் தன் சதைத் திரட்சி விரித்து, அதன் உள் காத்து முனையில் தவிட்டு நிறமும் மேனியில் மஞ்சளும் கொண்ட முட்கள் நெருக்கமாய் ஒவ்வொரு புள்ளியிலும் இரண்டு மூன்றாய் நீட்டியபடி.
அப்போது, வன்னியில் அம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஒரு தொலைக் காட்சியில் செய்தி போய்க்கொண்டிருந்தது.
1 comment:
ஈழத்து நாவலின் பரப்பு, எழுத்தாளர் தேவகாந்தன் அவர்களால் செழுமையும், வீச்சும் கொண்டு வளர்ந்து வருகிறது.அவருடைய சிறுகதைகளில் மிகவும் எனக்கு பிடித்த கதை இது.தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த கதைகளில் இதையும் ஒன்றாக நான் எடுத்துக் கொள்கிறேன்.தங்கள் கருத்துக்கு நன்றி
மிக்க அன்புடன்
-டானியல்ஜீவா-
Post a Comment