அடுத்த ஆண்டு தை மாதத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கிறது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு. ஒரு அலையாக எழுந்த அதுபற்றிய வாதப்பிரதிவாதங்கள் ஓரளவு இப்பொழுது அடங்கியிருப்பதாகச் சொல்லலாம். இதுபற்றிய எனது கருத்தினை வேறுநாடுகளில் இருக்கும் தமிழ் எழுத்தாள நண்பர் சிலர் என்னிடம் கேட்டிருந்தனர். நானும் மறைக்காமல் எனது கருத்தைக் கூறியிருந்தேன். அதை அவர்கள் விரும்பவில்லையெனத் தெரிகிறது. அதற்கு நானென்ன செய்யட்டும்?
ஓரளவு அடங்கியுள்ள இப் பிரச்சினை மார்கழி அல்லது தை மாதமளவில், அதாவது மாநாடு தொடங்குகிற காலமளவில், இன்னும் கூடுதலான உக்கிரம் பெறவே வாய்ப்பிருக்கிறது. லும்பினி இணைய தளத்தில் ஷோபா சக்தியினால் செய்யப்பட்ட லெ.முருகபூபதியின் நேர்காணல், மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதை எதிர்ப்போரின் மனநிலையை ஒட்டுமொத்தமாக மாற்றியிருக்க வேண்டும். அவ்வளவு தெளிவுபூர்வமான நேர்காணல் அது. ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்களின் குணவியல்புகளை வைத்துப் பார்க்கையில், அவ்வாறு நம்ப ஏது எதுவுமில்லை.
ராஜபக்ஷ அரசாங்கத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்க முடியுமா, போரினால் பாதிக்கப்பட்ட ஜனங்களின் பகுதிக்குச் சென்று பார்வையிட முடியுமா என்று உப்புச் சப்பற்ற கேள்விகள் மாநாட்டை எதிர்ப்போரினால் கேட்கப்பட்டிருந்தன. இனவெறி பிடித்த ராஜபக்ஷ அரசாங்கம், அதைத் தன் கடந்த கால போர்க் குற்றச் செயல்களினை மறக்கடித்து, விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்றைய தமிழ் வெகுஜனங்களின்மீது தனக்கு எந்தவிதமான மாறுபாடுமில்லையென்பதை சர்வதேச சமூகத்தின் முன்னால் காட்டிக்கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாகப் பாவித்துக்கொள்ளும் என்பது உண்மைதான்.
முள்ளிவாய்க்காலில் அத்தனை கொடுமைகள் தமிழ் மக்கள்மீது புரியப்பட்ட பின்னரும் அதைத் தடுக்க ஒரு புல்லைக்கூடக் கிள்ளிப்போடாத தமிழக முதல்வர் கருணாநிதியை உலகத் தலைவர், செம்மொழியாம் தமிழை வளர்க்க அவதாரமெடுத்தவர் என்றெல்லாம் புகழாரங்கள் சூட்டியதுபோன்று துதிபாட யாரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. செம்மொழி மாநாட்டில் புகழ்பாட முந்தி நின்றவர்களே உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ஒதுங்கிக்கொண்டது துர்ப்பாக்கியமானது.
உலகத் தமிழர் மாநாடு முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளுக்கான கண்டன மாநாடாகக் கூட்டப்படவில்லை என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் பல விஷயங்கள் தாமாகப் புரிந்து போய்விடக் கூடியவை.
செல்பவர்கள் எழுத்தாளர்கள். தமது படைப்பையோ, கருத்துச் சார்ந்த படைப்பையோ, அது குறித்த வளர்ச்சி மாற்றம் பற்றிய கருத்துக்களையோ மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டியவர்கள். அவர்கள் ராஜபக்ஷ அரசுக்கெதிராக இதுவரை முன்மொழியாத எந்தக் கருத்தை மாநாட்டில் முன்வைத்துவிடப் போகிறார்கள்?
முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் என் சரீரமும், மனமும் சேர்ந்து பதறிய கொடுமையானது. எனினும் சரியாக முன்னெடுக்கப்பட்டு தவறாக நடத்தப்பட்ட போர் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. நாம் ஒரு யுத்தத்தை இழந்திருக்கிறோம். அவ்வளவுதான். ஆனாலும் இலங்கைத் தேசம் இன்னமும் எனது மண் என்ற மனோவுணர்வே இன்றும் என்னுள்ளிருந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்ற ஆரம்ப வகுப்புகளின் பாடம் என் மனத்தில் இன்னுமிருந்து அசைவு கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
கடந்த ஆண்டு நிகழ்ந்த யுத்த முடிவுக்குப் பின் இன்றுவரை இரண்டு லட்சம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இலங்கை சென்று வந்திருக்கிறார்கள் என ஒரு கணிப்பீடு தெரிவிக்கிறது. அந்த இரண்டு லட்சம் பேரும், யுத்தம் நடந்த பூமி எவ்வாறு இருக்கிறது என்று விடுப்புப் பார்க்கப் போனார்களென யாராவது சொல்ல முடியுமா?
சொந்த மண்ணின் ஈர்ப்பு அது. மண்ணோடு மனிதர்களுக்கு உண்டாகும் பந்தத்தின் விசை. இதை விளங்கிக் கொண்டால் கொழும்பில் மாநாடு நடைபெறுவதையும் இந்தத் தளத்தில் வைத்தே புரிந்துகொள்ள முடியும். ஒரு சர்வ தேச மாநாட்டினை கொழும்பில் நடத்துவதென்பது அந்த மண்ணில் எதை நடாத்துவதுக்கும் எமக்குள்ள உரிமையின் வெளிப்பாடு. இந்த உரிமையை எந்தச் சிங்கள பேரினவாத அரசுக்காகவும் எம்மால் விட்டுக்கொடுத்துவிட முடியாது.
எவ்வளவு கொடுமையான, சர்வாதிகாரமான ஆட்சி அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், அது எனது மண். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண். நான் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடித் திரிந்த பூமி. எண்ணும் எழுத்தும் கற்றுணர்ந்த நிலம்.
‘எங்கும் ஒலிக்கிறது காற்று ….எனது நிலம்….எனது நிலம்!’ இவை கவிஞர் சேரனின் கவிதை வரிகள். இந்த ஒலிப்பின் ஆவேசத்திலிருந்து பெரும்பாலும் எவரும்தான் தப்பிவிட முடியாது. என்னால் தப்ப முடியவில்லை. அப்படிப் பார்க்கையில், எனது கருத்துக்களும் அதற்கு இயையவே இருக்கமுடியும். மாநாடு குறித்தாயினும் சரி, எமது இருத்தல் சார்ந்த வேறு எந்த விஷயமானாலும் சரி.
நன்றி
(Thai Veedu-November,2010)
No comments:
Post a Comment