

தென்மோடி நாட்டுக்கூத்து ஆரம்பத்திலிருந்து இன்றுவரை கரையோரப்பகுதியான நாவாந்துறைப் பகுதியில் பெருமளவு வரவேற்பினைப் பெற்று வருகின்றது. அதே ஊரில் 60 நாடகங்களுக்கு மேல் நடித்து நெறியாள்கை செய்த அண்ணாவியார் செ. டானியல் பெலிக்கான் என்பவரை தாய்மனை நாவாந்துறை வடக்கு எனும் அவரது இல்லத்தில் நேர்காணல் ஒன்றிற்காகச் சந்தித்துப் பேசியபோது எங்களுடன் உரையாடிய விடயங்களை வாசகர்களுக்காகத் தருகின்றோம். ஷஷநாவந்துறைப் பாடசாலையில் 8ஆம் வகுப்புவரை படித்தேன். படிக்கும் காலங்களில் இருந்து படிப்பு முடிந்த பின்னரும் கூட என் மனதில் வெற்றிடமேயில்லாத வகையில் ஆக்கிரமித்து இருந்தது நானும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான். நடிப்பேன் என்று என் மனதில் நம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது யக்கரசு மாமா ராசரெட்டிணம் இன்னாசி போன்ற எனக்கு முன்னோரான நாட்டுக்கூத்து நடிகர்கள் நினைவு கூரத்தக்கவர்கள். அவர்கள் முன்னர் நடித்த நாடகங்களில் இருந்து பார்த்துப் பெற்ற அனுபவங்களேயாகும். எனது தந்தை செபஸ்தியாம் பிள்ளை ஒரு நாட்டுக்கூத்து கலைஞராகவும் இசைப் பிரியராகவும் விளங்கியவர். இவர்தான் எனக்கு நாடக ஆர்வத்தினை ஊட்டி வழிகாட்டி நெறிப்படுத்தியவர். அப்போது எனக்கு 21 வயது இருக்கும். ஊரில் உள்ள மக்கள் என்னுடைய குரல் வளத்தினைப் பார்த்து பாராட்டினார்கள். ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றதனால் மேலும் என்னை நானே வளர்த்துக் கொண்டேன். இதே ஆண்டில் ஷஅலசு என்ற பெயருடைய நாட்டுக்கூத்தில் அலசுவாக பாத்திரமேற்று நடித்தேன். அலசு நாடகமானது கத்தோலிக்க வேத நாடகமாகும். இந்த நாடகம் நடித்ததில் முதல் பாராட்டினைப் பெற்றேன். 1977ஆம் ஆண்டு கொழும்பில் சரஸ்வதி மண்டபத்தில் ஷஷசங்கிலியன் நாடகத்தில் நடித்தேன். எனக்குப் பிடித்த நாடகமும் பாராட்டினைப் பெற்ற நாடகமும் இதுவாகும். இலங்கை வானொலியில் எனது நாட்டுக்கூத்துப் பாடல்கள் நாடக மேடைப்பாடல்கள் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனது சிறந்த நாட்டுக்கூத்துக்களில் ஒன்றாக விளங்குகின்றது. நான் செபஸ்தியானாக நடித்துள்ளேன். தற்போது பல நாடகங்களையும் தயாரித்து நெறிப்படுத்தி வருகின்றேன். வருடத்தின் ஒவ்வொரு ஆவணி மாதத்திலும் பரலோக மாதா கோயிலில் வருடாந்த திருவிழா வழக்கமாக நடைபெறும். இக்காலங்களில் கோவிலுக்கு பக்கமாக அமைந்திருக்கும் மேடையில் பல்வேறு நாட்டுக்கூத்துக்கள் இடம்பெறும். இரவு தொடங்கினால் விடியும்வரை நடைபெறுவது வழக்கம். அப்போது நாங்கள் எங்கள் கூத்துக்களையும் ஆண்டு விழாவில் அரங்கேற்றுவோம். முன்னைய காலங்களில் ஆண்களே பெண் வேடம் போட்டு நடிக்க வேண்டும். நான் பெண் பாத்திரம் தாங்கி நடித்த நாடகங்கள்தான் பெருமை சேர்த்தது. இதன் காரணமாக நாட்டுக்கூத்து மேதை என்ற பட்டமும் எனக்குக் கிடைத்தது. முன்னர் கூத்துக்களின் பின்னிசையாக மிருதங்கமும் தாளமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது நவீன கருவியின் மூலம் பல்வேறு வாத்தியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. கூத்துக்கள் கரையோரப் பிரதேசங்களில் அன்றிலிருந்து இன்றுவரையும் வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. ஆனால் வெளியிடங்களில் இதற்கு வரவேற்பு அதிகமாக இல்லை. வரவேற்பு இல்லாமல் போனதற்கு சினிமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்றைய இளைஞர்களுக்கு இதில் நாட்டம் வருகின்ற அளவுக்கு ஏதோ ஒரு வகையில் மாற்றம் செய்து கூத்துக்களை அளிக்கை செய்ய வேண்டும். நாங்கள் ஆடுகின்ற நாட்டுக் கூத்து முறையான தென்மோடி ஆட்டங்கள் குறைவு. ஆனால் எமது ஆடைகள் பாத்திர வெளிப்பாடுகள் கச்சிதமாக அமைந்து விளங்கும். வசனங்களைப் பேசுவதும் பாடல்களைப் பாடுவதும் என எமது குரல் வளத்தினூடாக எமது திறமைகளை வெளிப்படுத்தி விடுவோம். ஆட்டம் இல்லை என்ற குறை எமது கூத்துக்களில் ஏற்படுவதில்லை. தற்போது நடிகர் ஒருவர் மேடையில் நிற்க பின்னால் அவருக்குப் பதிலாக பாடுகின்ற பேசுகின்ற முறையே அதிகளவில் காணப்படுகின்றது. முன்னர் இவை இல்லையென்று கூறிவிடமுடியாது. சில சந்தர்ப்பங்களிலேயே நாம் இவற்றைப் பயன்படுத்தி வந்தோம். தற்போது குரல்வளம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்று கூறிவிடமுடியாது. முன்னரெல்லாம் அவ்வாறில்லை. ஒரு நடிகன் ஒரு கட்டை முதல் எட்டுக் கட்டை வரை குரல் வளமுடையவனாக இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. காத்தவராயன் கூத்திலிருந்து வித்தியாசப்பட்டது எங்கள் தென்மோடி நாட்டுக்கூத்து முறையாகும். இதில் காட்சி அமைப்புக்கள் வித்தியாசமாகவும் பாடல்கள் வித்தியாசமாகவும் அமைகின்றன. கிறிஸ்தவ மதம் தழுவிய கதைகளையேமையமாகக் கொண்டு நமது கூத்துக்கள் அமைகின்றன. நான் தயாரித்து நெறிப்படுத்திய நாட்டுக்கூத்து 2003ஆம் ஆண்டு ஆவணிமாதம் யாழ்ப்பாணத்திலுள்ள திருமறைக் கலாமன்றத்தில் ஷஷபுனிதவதி என்ற பெயருடன் அரங்கேறியது. யாழ். மாவட்டத்தில் முற்று முழுதாக பெண்களே நடித்திருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் ஆண்கள்தான் பெண்கள் வேடம் போட்டு நடித்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பெண்களே பெண்கள் பாத்திரமேற்று நடிக்கும் அளவுக்கு மாற்றம் பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலுள்ள சென் சேவியர் கல்லூரி மாணவர்களால் ஷசெபஸ்தியார் என்ற பெயருடைய நாடகம் மன்னார் மாவட்டத்தில் முதலாவது இடத்தினைப் பெற்றது. வடக்கு - கிழக்கில் சிறந்த நாடகமாக தெரிவு செய்து மூன்றாவது இடத்தினைப் பெற்ற பெருமை இந்த நாடகத்துக்கு உரியது. இந்தக் கூத்து முறை வளர்ந்து வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் எனது தம்பியும் ஒருவராக இருந்துள்ளார். எனது தம்பியின் பெயர் ம.செ.மைக்கல்ராஜா. அவர் இன்று இந்த மண்ணில் இல்லை. இறந்துவிட்டார். தம்பி இருந்தால் பல கருத்துள்ள நாடகங்கள் வெளி வந்திருக்கும் என்று கவலையுடன் கூறியவர் சில நிமிடம் அவரின் நினைவில் மௌனம் காத்து விட்டு தொடர்ந்தார். ஆரம்ப காலங்களில் வாழ்ந்த வாழ்வு வாழ்வில் ஏற்பட்டுள்ள அனுபவங்கள் தான் இன்றும் நாடகங்களாக அரங்கேறுகின்றன. இன்றைய காலத்தில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை உள்ளடக்கியதான நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய தேவையுள்ளது. அதற்கேற்ப முயற்சி செய்து வருகின்றோம். ஆனால் தென்மோடி நாட்டுக்கூத்து முறையில் அமைந்த கிறிஸ்தவ நாடகங்களைப் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்டதனால் இந்த வழியிலிருந்து மக்களை திசைதிருப்புவது சிரமம்தான். ஆனால் வெளியிடங்களுக்கு இந்த நாடகங்களை கொண்டு செல்ல முடியாத நிலை சினிமாவினால் ஏற்பட்டுள்ளது. எனினும் சினிமா எவ்வளவுக்கு எவ்வளவு மக்களை தன் பக்கம் இழுத்திருக்கின்றதோ அதே போல் இந்த நாடகங்களையும் எல்லோரின் பக்கமும் திருப்பமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்களின் ரசனையை அறிந்து அதற்கேற்ப நாடக வடிவங்களை பாடல் இசை அமைப்புக்களை மாற்றி அமைத்து இதனூடாக மென்மேலும் வளரச் செய்ய முடியும். இதற்கமையத்தான் நாடகங்களின் நேரத்தையும் சுருக்கி வருகின்றோம். ஆரம்ப நாடகங்களின் வடிவங்களிலிருந்துதான் இன்றைய சினிமா வளர்ந்து வந்திருக்கின்றது. ஆனால் இன்று நாடகங்களை அது மேவி நிற்கின்றது. இதற்குக் காரணம் இலகுவான முறையில் மக்களிடம் சென்றடையும் வழியை நாம் மேற்கொள்வதேயாகும் என்று கூறியவர். அந்தக்கால போர்த்துக்கீச தளபதி தனது படைகளுடன் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியனைச் சிறைப்பிடிக்க படகேறுகின்றனர். இந்தக் காட்சியில் இடம்பெறும் பாடல் என்று கூறியபடி ஷஷஇடிநேரு கொடி துவக்கதுவே நீட.... என்ற பாடலை முழுவதுமாக பாடி முடித்தார். அவர் பாடும் போது - படைகள் வரிசைப்படுத்தி நடக்கும் காலடி ஓசை போல் வீரனின் உணர்வு வெளிப்பட நடுங்கும் எதிரிப்படை என்ன பாடுபடும் என்று உணர்ந்தோம். நம்மில் வீரத்தையும் உணர்ந்தோம். அன்றைய நாளில் சங்கிலியனைச் சிறைப்பிடித்த கதையினை நடித்துப் பாடினோம். ஆனால் இன்று தமிழன் நிமிர்ந்த இந்த சமூகத்தில் உள்ள கதையினைக் கொண்டு நாடகங்களை அமைக்காது கவலைக்குரியதாகவே இருக்கின்றது என்று அவர் சொல்லி முடித்தபோது பழைய தலைமுறைக் கலைஞர் ஒருவரின் புதிய தலைமுறைக்குரிய ஆதங்கம் தென்படவே செய்தது.
No comments:
Post a Comment