யாழ் நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய மைதானத்தில் ‘கல்வாரி கண்ட கடவுள்’ என்ற திருப்பாடுகளின் காட்சி, பக்தி இசை உரை நாடகச் சித்திரம் மேடையேற்றப்பட்டுள்ளது. பொதுவாகவே, பங்குனி மாதத்தில் கிறிஸ்தவ மக்களின் தவக் காலத்தை முன்னிட்டு திருப்பாடுகளின் காட்சி பிரமாண்டமான தயாரிப்பாக மேடையேற்றப்பட்டு வருகின்றது.
அண்மைக் காலங்களில் திருமறைக் கலாமன்றத்தினர் நூறுக்கும் மேற்பட்ட நடிகர்களை கொண்டு இதனை மேடையேற்றுவதும் பெரும் திரளான மக்கள் இதனைத் தரிசிப்பதும் வழமையான நிகழ்வாகிவிட்டது.
இவ்வருடம் சுமார் 20 வருட காலங்களுக்கு பின்னர் யாழ். நாவாந்துறை மக்களால் திருப்பாடுகளின் காட்சி மேடையேற்றப்பட்டமை குறிப்பிடவேண்டிய அம்சமாகவுள்ளது. என்.எம். பாலச்சந்திரன் அவர்களின் கதை வசனம், பாடல், இயக்கம் என்பவற்றோடு எம்.எக்ஸ். கருணரட்ணம் அடிகளாரின் தயாரிப்பில் உருவான இவ்வாற்றுகை 150 அடி மேடையில் சுமார் 200 நடிகர்களுடன் மேடையேற்றப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய பங்குத்தந்தை அவர்கள் – “இது ஒரு நாடகமல்ல இது இறைவனின் வாழ்க்கை வரலாறு” என்றார். உண்மையில் திருப்பாடுகளின் காட்சி ஓர் பக்தி நிறைந்த தரிசனத்திற்குரிய கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைச் செய்து காட்டும் ஆற்றுகையாகவே அமைந்து கொள்கின்றது. அரங்கின் பிரமாண்டமான காட்சிப்படுத்தல் மருட்கையுடன் தவக்காலத்தின் இறை சிந்தனையை வலுவூட்ட கிறிஸ்தவ மக்களுக்கு இவ்வாற்றுகை உதவுகின்றன. ஊரே திரண்டு வந்து அரங்க வெளியை நிறைத்து நிற்பது இதற்கு சான்று பகர்கின்றது.
No comments:
Post a Comment