Pages

Friday, November 20, 2009

கூத்துக்கலை குறைந்து கொண்டே போகிறது


மூத்த அண்ணாவியார் செ.டானியல்(பெலிக்கான்)


கலைவடிவங்கள் ஒரு இனத்தினுடைய அடிநாதமாக விளங்குகின்றன. நாடுகளிற்கு அப்பால் மனிதர்களை ஒன்றிக்கச்செய்யும் அற்புதத் தொடர்பு சாதனங்களாகக் கலை உருக்களைக் கருதமுடியும்.
சமூகத்தினுடைய அடையாளமாக அவர்களால் ஆடப்படுவதும் பேணப்படுவதுமான தனித்தனிக் கலைகளும் உள்ளன. தமிழர் தம் பாரம்பரியங்களை வெளிக்கொணரும் அதேவேளை நாட்டுக்கூத்து பாரம்பரிய கலைவடிவமாகவும் எம்மவர்களால் தொண்டுதொட்டு ஆளப்பட்டு வருகின்றது.
கலைஞர் உள்ளத்தில் தோன்றும் கருத்தை வெளியிட வேண்டுமென்றால் அதனை கவிதையாக, கட்டுரையாக, நாடகமாக வெளிக்காட்டுவதுபோல கூத்தாகவும் வெளிக்கொணரலாம். கலைஞரின் மாறுபட்ட சிந்தனை வெளிப்பாடுகளினால் கலைவடிவங்கள் பல்வேறு கோணங்களில் முன்வைக்கப்படுகின்றன. இதன் ஒரு அங்கமாகவே தென்மோடி நாட்டுக்கூத்தை ஆடிவருகிறோம் எனக் குறிப்பிடுகின்றார் தென்மோடி நாட்டுக்கூத்துக் கலைஞரும் மூத்த அண்ணாவியாருமான செபஸ்தியாம் பிள்ளை டானியல் பெலிக்கான்.
நாட்டுக்கூத்து கலையை மிக நுணுக்கமாக கற்று வலுநேர்த்தியாக ஆடிவருகின்றார். கலைஞர் நாட்டுக் கூத்துக்கலை தொடர்பாக பகிர்ந்து கொண்ட கருத்துக்களை வாசகர் முன் வைக்கிறோம்.

நாம்: கூத்துக்கலைக்குள் உள் நுழைந்தமை...
பெலிக்கான்: இயல்பாக எமது பகுதியில் பல கூத்துக்கலைஞர்கள் தோற்றம் பெற்றனர். அவர்களில் என் தந்தையான செபஸ்தியாம்பிள்ளையும் ஒருவர். இவர்களால் ஆடப்படும் சுத்துக்களை சிறுவயதில் இருந்தே பார்த்து மகிழ்ந்தது போக நானும் பாட வேண்டும், ஆட வேண்டும் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டேன். இதன் பயனாக ஒன்பதாவது வயதில் “ஏழுபிள்ளை நல்லதங்காள்’‘ நாடகத்தில் ஏழு பிள்ளை நல்லதங்காளாகக் கூத்துகலையில் கால்வைத்தேன்.
தொடர்ந்து பல்வேறு பாத்திரங்களில் நடித்து எமது கிராமத்திற்கு அப்பாலும் பலரது பாராட்டைப் பெற்றேன். வில்லன், ராஜபாட், இஸ்திரி, புனிதர் என என்பங்களிப்பை இத்துறைக்கு வழங்கிவருகிறேன் என பதிலளித்தவரிடம்.
நாம்: கலைஞராக இருந்த நீங்கள் நெறியாளராக.....
பெலிக்கான்: இன்றுவரை 40இற்கு மேற்பட்ட கூத்துக்களில் நடித்த போதிலும் இயல்பாகவே என்னிடமிருந்த குரல்வளமும் எந்தப் பாத்திரத்தையும் உடனே செய்யக்கூடிய திறமையை வளர்த்துக் கொண்டமையும் என்னுடன் இணைந்து நடித்தவர்களின் விருப்புடனும் நாட்டுக் கூத்துக்கலை பழக்கத் தொடங்கினேன். பல இளம் கலைஞர்களை உருவாக்கிய போதிலும் ஒரு சிலரே தொடர்ந்தியங்கி வருகின்றனர். முழுவதும் இளம் பெண்களைக் கொண்டு “புனிதவதி’‘ என்ற கூத்தையும் மேமையேற்றியுள்ளேன்.
செபஸ்தியார், சஞ்சுவான், வீரத்தளபதி, கருங்குயில், கொன்றத்தின் கொலை, சங்கிலியன், விஜயமனோகரன், ஞானசௌந்தரி, ஏழுபிள்ளை நல்லதங்காள், கெனோவா, அலங்காரரூபன் இவை நான் நெறியாள்கை செய்த நாட்டுக்கூத்துக்களில் குறிப்பிடும் படியானவை என சிறுபுன்னகையுடன் இருந்தவரை....
நாம்: நாட்டுக்கூத்தில் பெண்களை ஈடுபடுத்துகின்றமை....
பெலிக்கான்: விஜயமனோகரி, புனிதவதி போன்ற கூத்துக்களில் பெண் பாத்திரங்கள் கூடுதலாகவுள்ளன. இதற்கு அக்கால இளைஞர்களை ஒன்றுசேர்த்து (எல்லோருமல்ல) கூத்தைப் பழக்குவது ஆகாதகாரியம்.... குறித்த நேரத்திற்கு ஒழுங்காக ஒத்திகைகளில் பங்குபற்றினாலே நிறைவான படைப்பை வெளிக்கொணரலாம். எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி முழுவதும் பெண் பிள்ளைகள் நடிக்கின்ற விஜயமனோகரி கூத்தைப் போடவுள்ளேன்.
நாங்கள் நடித்த ஆரம்பகாலங்களில் பெண் பாத்திரங்களில் பெண்களைப் போடுவதில்லை. சமூகம் ஏற்றுக் கொள்ளாமையும் அவர்கள் முன்வராமையுமே காரணங்களாகும். இப்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. இந்நிலை இனிவரும் காலங்களிலும் தொடரவேண்டுமென ஆதங்கப்பட்டவரிடம்....
நாம்: நாட்டுக்கூத்தின் இன்றைய நிலை தொடர்பாக.....
பெலிக்கான்: கடந்த பத்து வருடங்களிற்கு முன்பிருந்த நிலை இன்றில்லை. கூத்துக்கலை குறைந்து கொண்டே போகின்றது. நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களும், நிம்மதியற்ற வாழ்க்கையுமே காரணமாகின்றன. நல்ல திறமையான கூத்துக்கலைஞர்களை இழந்ததுடன் பலர் சிதறி பல்வேற இடங்களிலுள்ளனர். கூத்துக்கலை அருகி வருவதற்குக் காரணமாக இருந்தாலும் தொலைக்காட்சிகளின் அதிகரித்த பாவனையும், இளைஞர்கள் இலத்திரனியல் ஊடகங்களில் பெருமளவான நேரத்தை செலவிடுவதுமே எமது கலை வடிவத்தில் சிறுதொய்வு ஏற்பட்டுள்ளதெனலாம் எனக் கூறியவரிடம்.....
நாம்டு கூத்துக் கலைக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகள் எதனையும்.....
பெலிக்கான்: கடந்த ஐம்பது வருடங்களிற்கு மேலாக கூத்துக் கலைஞராக இயங்கிவருகின்றேன். கூத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்றால் கிராமரீதியாக நாடகமன்றங்களை அமைக்க வேண்டும். இதனுள் கலைஞர்களை உள்வாங்கி, கலை ரீதியான பயிற்சிகளைக் கொடுப்பதுடன் கலைஞர்கள், கலைவடிவங்கள் தொடர்பான நூல்கள் வெளியீடுகளையும் இளைஞர்கள் பார்க்கும் வகையில் மன்றங்களில் வைக்க வேண்டும்.
ஒரு வருடத்தில் நான்கு கூத்தையாவது போடவேண்டும். இதன் ஊடாக பார்வையாளர்களை உள் இழுப்பதுடன் புதிய கலைஞர்களையும் உருவாக்க முடியும். நவீன பாணியில் அமையக்கூடிய கூத்துக்களைப் போடுவதினால் இளையோரைக் கவரலாம் என பதிலளித்தவரிடம்.....
நாம்: தந்தையாரின் வழிவந்ததாகக் கூறும் நீங்கள் உங்களிற்குப் பின்னால்.....
பெலிக்கான்: என் புதல்வகள் கூத்துக் கலைக்குள் உள்வரவில்லை. இருந்தாலும் எழுத்துத்துறையிலும், நாடகத்துறையிலும் இயங்கிவருகின்றனர். அமரர் டானியல் அன்ரனி, டானியல் சௌந்தரம், டானியல் ஜீவா மூவருமே எழுத்தாளர்களாக நாடக ஆசிரியர்களாகவுள்ளனர். எனது பேரப்பிள்ளைகள் (சௌந்தரத்தின் மகள்) என் உறவினர்கள் எனப் பலர் பாடுகின்றனர். இருந்தாலும் என் வழியில் நின்று எனது பெயரைச் சொல்லக் கூடியவகையில், கூத்துக் கலையில் புதல்வர்கள் நாட்டம் கொள்ளவில்லையென தன் நிலையை விபரித்தவரிடம்.....
நாம்: மூத்த கூத்துக் கலைஞர்களுடன் இன்றைய கலைஞர்களை ஒப்பிடுவீர்களா.......
பெலிக்கான்: ஒப்பிட முடியாது.... ஒலி, ஒளி வசதி இல்லாத போதும் தம் திறமையால் இரண்டு இரவுகள் தொடர்ந்துபாடி ஆடியவர்களும் உள்ளனர். புகுந்தான் ம. ஜோசப், சில்லாலையூர் செல்வராஜா, பக்கீரி, அண்ணாவியார் வின்சன்டிபோல், புலவர் நல்லையா, ஏஸ்தாக்கி எனப் பல திறமையான அற்புதக் கலைஞர்கள் இருந்தனர். சிலர் இருக்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை கூத்துக் கலைக்காகவே தோற்றம் பெற்றதாகக் கருதுகிறேன். போதிய வசதி வாய்ப்புக்கள் இல்லாத போதும் தாம் ஏற்கும் பாத்திரங்களை மிகத்திறமையாக வெளிப்படுத்தி கதைக்குரிய நாயகர்களை ஞாபகப்படுத்துவர். இன்றுள்ளவர்களை நீங்களே பார்க்கின்றீர்கள் தானே.... நான் எண்ணத்தை..... என நசூக்காக பதிலளித்ததுடன் தன் கருத்துக்களையும் நிறைவு செய்தார்.
அண்ணாவியார் டானியல் பெலிக்கான் சிறந்த கலைஞர் என்பதற் அப்பால் சிறந்த விளையாட்டு வீரன், சமூக சேவையாளன், நாட்டுக் கூத்தையே தன் மூச்சாகக் கொண்டு இயங்கிவரும் அண்ணாவியார் பெண்பாத்திர மேற்றமைக்காக (எஸ்தாக்கியர் - மனைவி) “நாட்டக்கூத்து மாமேதை’‘ என்ற விருதையும் கிராம மக்களால் “பொற்கிளி’‘ வழங்கியும் கௌரவிக்கப்பட்டார். பல இடங்களில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார். 72 வயதில் தொடங்கிவரும் அண்ணாவியாரின் நெறியாள்கையில் உருவான “சஞ்சுவான்|ஷ, “அலங்காரரூபன்’‘ ஆகிய 4த்துக்கள் வீடீயோப்படமாக்கப்பட்டுள்ளன. இதனூடாக அண்ணாவியாரின் திறமையான பதிவை நாம் காண முடியும்.
பாரம்பரிய கலைவடிவமான கூத்துக் கலையானது கரையோரக் கிராம மக்களாலேயே பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதற்குப் பல உதாரணங்களைக் கூறமுடியும். தான் பயின்ற கலையை தன்னைச் சார்ந்தவர்களிற்கு பயிற்றுவித்து அதனூடாகத் தானும் தன் சார்ந்தவர்களும் நிறைவு பெறும் அரிய பணியை செய்து வருகிறார் பெலிக்கான். ஈழத்துக்கூத்துத்துறைக்கு பெரும் பங்காற்றியவர்களில் அண்ணாவியாரும் ஒருவர் என்பது குறிப்பிடப்பட வேண்டியதொன்று.

பெண் பாத்திரம் ஏற்று நான் நடித்த நாடகங்கள் பெரும் புகழை ஈட்டித்தந்தன!


நாட்டுக்கூத்து மாமேதை செ.டானியல் பெலிக்கான்


யாழ்பாணத்திலே நாட்டுக்கூத்து கலை மரபுகளைப் பேணிப்போற்றி வளர்க்கின்ற இடங்களுள் ஒன்றாக நாவாந்துறை விளங்குகின்றது. பல நாட்டுக்கூத்து கலைஞர்களையும், புலவர்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கித் தந்த பெருமை இக்கிராமத்தைச் சேர்ந்தது.
நாவாந்துறை வடக்குப் பகுதியிலே வசித்து வருகின்ற நாட்டுக்கூத்துக் கலைஞர் அண்ணாவியார் செ. டானியல் அவர்களைச் சந்தித்து அவரது கலை அனுபவங்களையும், அவருக்கு இக்கலையிலுள்ள ஈடுபாடு பற்றியும் அறியும் முயற்சியே இச்சந்திப்பின் நோக்கமாகும்.
கலைக்குடும்பம்
அண்ணாவியார் டானியல் அவர்களைச் சந்திக்க நான் அவரது வீட்டிற்குச் சென்றிருந்த சமயம் அவர் நாடக விடயம் சம்பந்தமாகவே பல கலைஞர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். என்னை நான் முதலில் அவருக்கு அறிமுகம் செய்து கொண்டு வந்த நோக்கத்தையும் தெரிவித்தேன். முகம் மலர வரவேற்ற அண்ணாவியார் கூட இருந்த நாட்டுக்கூத்து கலைஞர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அண்ணாவியார் டானியல் அவர்கள் ஒரு உயர்ந்த கம்பீரமான மனிதர், 62 வயதிலும் நாட்டுக்கூத்தின் மீத தீராத ஆர்வம் உள்ளவராக இருக்கின்றார். இவர் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்லாது சிறந்த விளையாட்டு வீரராகவும் யாழ்ப்பாணத்தில் விளங்கியவர். சமூகசேவையிலும் ஈடுபாடு கொண்டவர்.
ஒன்பது வயதிலே முதன் முதலாக ஷஷஏழு பிள்ளை நல்ல தங்காள்|| என்ற பெண் பாத்திரம் ஏற்று நடித்ததில் இருந்து இத்துறையில் ஈடுபாடு கொண்டு உழைத்து வருகிறார். அண்ணாவியார் டானியல் குடும்பம் ஓர் கலைக்குடும்பம். இவரது தந்தையார் திரு. செபஸ்தியாம் பிள்ளை ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞராகவும், இசைப்பிரியராகவும் விளங்கியவர். இவர் தான் தனது மகனுக்கு ஆர்வத்தைக் ஊட்டி, வழிகாட்டி நெறிப்படுத்தியவர். அதன்பிறகு புலவர் சூசைப்பிள்ளை, ஷகலைக்கவி| நீ எஸ்தாக்கி, ஷபுகுந்தான்| ம. ஜோசப் ஆகியோர் இவரது கலை ஆர்வத்திற்கு பக்கத்துணையாக நின்றவர்களாவர். அண்ணாவியார் டானியல் அவர்களது பிள்ளைகளான டானியல் அன்ரனி, டானியல் சவுந்திரன், டானியல் ஜீவா ஆகியோரும் எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், நாடக ஆசிரியர்களாவும் விளங்கி வருகின்றார்கள்.
இவர் ஓர் சிறந்த நாட்டுக்கூத்து கலைஞராக இருந்த போதிலும் எதுவிதமான பெருமையோ, பெருமிதமோ இவரிடம் இல்லை என்பதனை நேரடியாக அவதானிக்க முடிந்தது. இவரது தம்பியார் திரு. எஸ். மைக்கல் ராஜா என்பவரும் சிறந்த நாட்டுக்கூத்துக் கலைஞராக விளங்குகின்றார்.

நடிப்பும் பாட்டும்
அண்ணாவியார் டானயில் அவர்கள் ஈழத்திலே வாழ்ந்து, அத்துடன் தற்பொழுது வாழ்ந்து வருகின்ற புகழ் பூத்த பல அண்ணாவிமார்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர்களுடன் பல்வேறு நாட்டுக்கூத்துக்களை ஆடி வந்தவர். கொழும்பில் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட ஷஷசங்கிலியன்|| நாட்டுக்கூத்தில் ஷஷபுகுந்தான் ஜோசேப்|| சில்லையூர் செல்வராஜன் போன்றோருடன் நடித்ததை நினைவு கூர்ந்தார். வடபகுதி எங்கும் இவரது நாட்டுக்கூத்துக்கள் மேடையேற்றப் பெற்றன. இலங்கை வானொலியில் இவரது நாட்டுக்கூத்துப் பாடல்கள் ஷஷநாடகமேடைப்பாடல்கள்|| நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வானொலியில் எல்லாமாக ஐந்து நாட்டுக்கூத்துக்கள் ஒலிபரப்பப்பட்டன. அவற்றுள் வீரத் தளபதி செபஸ்தியார், மத்தேஸ்மகிறம்மா, கருங்குயில் குன்றத்தில் கொலை என்பன குறிப்பிடத்தக்கன. இவரது சிறந்த நாட்டுக்கூத்துக்களில் ஒன்றாக செபஸ்தியார் நாட்டுக்கூத்து விளங்குகின்றது. அண்ணாவியார் அவர்கள் செபஸ்தியார் நாட்டுக்கூத்தில் செபஸ்தியாராக நடித்துள்ளார். இதுவே இவரது சிறந்த நாட்டுக்கூத்து எனக் கருதுகிறார். ஒரு கட்டப்பாடல் வருமாறு:
ஷஷகட்டிக்கள்ளி நட்டணையாய்
துட்ட வேடர்தான் - வில்லில்
தொட்டு நெஞ்சை பூட்டி அம்பை
எய்யப் போறாரோ||
இவர் இதை தனது கணீரென்ற குரலில் பாடியபோது நானே இசையில் வசமானேன்.
நமது நாட்டுக்கூத்து மரபுகளைப் பேணுகின்ற நல்நோக்குடன் அவர் தனிப்பட்ட ரீதியிலும், மன்றத்தினூடாகவும் இணைந்து பல வருடங்களுக்கு முன்னர் தமது ஊரிலே உள்ள சென்மேரிஸ் முத்தமிழ் மன்றத்தில் கலையரங்கத் தலைவராக இருந்து அரும் கலைப்பணியாற்றி இருக்கிறார். பல நாடகங்களை சென்மேரீஸ் முத்தமிழ் மன்றத்தின் சார்பாகவும், தனிப்பட்ட வகையிலும் மேடையேற்றி வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அண்ணாவியார் ஷஷஅலசு|ஷ நாட்டுக்கூத்தின் அலசுவாக பாத்திரமேற்று பாடி, நடித்ததை பலர் பாராட்டியுள்ளார்கள்.
அண்ணாவியார் சிறந்த நாட்டுக்கூத்து nநிறப்படுத்துனராகவும், ஒப்பாரிபாடுவதில் சிறந்த இசைஞானம் கைவரப் பெற்றிருக்கின்றார். இவரை நாட்டுக்கூத்து கலையில் ஈடுபடச் செய்வதற்கு காரணங்களில் ஒன்றாக இருந்தது இவருக்கு இயல்பாகப் பாடுகின்ற திறமையே ஆகும். தங்களது ஊரிலே யாரும் இறந்து விட்டால் இரவில் இறப்பு வீட்டிலும் பின்னர் வீட்டில் இரந்து சேமக்காலைவரை ஒப்பாரிப்பாடல்களை பாடுவதாக அவர் கூறினார்.

தயாரிப்பும் நெறிப்படுத்தலும்
அண்ணாவியார் டானியல் அவர்கள் ஏறக்குறைய முப்பத்தைந்து நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல நாடகங்களைத் தானே தயாரித்து, அந் நாடகங்களைத் தானே தயாரித்து, அந் நாடகங்கள் பலவற்றில் முக்கிய பாத்திரங்களை ஏற்றும் நடித்துள்ளார். தற்பொழுது பல நாடகங்களைத் தயாரித்தும், நெறிப்படுத்தியும் வருகின்றார். தற்பொழுது ஷஷஏழு பிள்ளையும் நல்ல தங்காளும்|| என்னும் நாட்டுக் கூத்தையும், பூநகரி குமுளமுனை கலைஞர்களுக்காக ஷஷசஞ்சுவான்|| நாட்டுக்கூத்தையும் நெறிப்படுத்தி வருகிறார். நாட்டுக்கூத்துக் கலையில் கொண்டுள்ள ஆர்வமும் ஈடுபாடுமே தன்னை இத்துறைக்கு மென்மேலும் இட்டுச் செல்ல உதவியது என அவர் கூறினார். இந்நாட்டுக்கூத்து கலை மூலம் எதுவிதமான வருமானத்தையும் எதிர்பாராது ஒரு கலைச் சேவையாகவே இவர் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். நாட்டுக் கூத்துக் கலையை வளர்ப்பதில் அரசினரின் ஆதரவு கிடைப்பதில்லை என வருத்தப்பட்டதுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதி சி. மௌனகுரு, கலாநிதி அ. சண்முகதாஸ், கலாநிதி இ. பாலசுந்தரம், கலாநதி இ. சவரிமுத்து அடிகளார் போன்றோர் ஆர்வத்துடன் உழைப்பதை பாராட்டினார்.
அண்ணாவியார் டானியல் அவர்கள் நெறிப்படுத்திய நாடகங்களுள் வேதசாட்சிகள், விஜயமனோகரன், ஜெனோவா, மத்தேசு மசிறம்மா, சங்கிலியன், ஞானசவுந்தரி, கருங்குயில் குன்றத்தில் கொலை, நல்லதங்காள், சஞ்சுவான் என்பன குறிப்பிடத்தக்கன.

நாவாந்துறை கலைஞர்கள்
தனது ஊராகிய நாவாந்துறையில் பல்வேறு கலைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் சிறந்த நாட்டுக்கூத்து தயாரிப்பாளர்களாகவும், புலவர்களாகவும், கவிஞர்களாகவும் இருந்தார்கள். இவர்களது முயற்சியினால் தான்பல நாட்டுக்கூத்துக்கள் இயற்றப்பெற்று, கையெழுத்துப் பிரதிகளாக எழுதப்பட்டிருந்தன. இவர்களது கையெழுத்துப் பிரதிகளைத்தான் தான் பயன்படுத்தி பல்வேற நாட்டுக் கூத்துக்களை தயாரித்தும், நெறிப்படுத்தியும், நடித்தும் வருவதாகக் கூறினார். இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த மூன்று புலவர்களின் நாடகப் பிரதிநிதிகள் தான் தனக்குப் பெரிதும் பயன்பட்டன எனக் கூறினார். அவர்களுள் புலவர் மரியாம்பிள்ளை, புலவர் நல்லையா, அதிபர் கலைக்கவி நீ எஸ்தாக்க ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் என்றார்.
நாட்டுக் கூத்துக்களை பொதுவாக திருவிழாவின் போதும் மற்றும் பொதுவான கொண்டாட்டங்களும் மேமையேற்றுவது வழக்கமாக உள்ளது. வருடத்தின் ஒவ்வொரு ஆவணி மாதத்தில் தான் பரலோக மாதா கோயிலில் வருடாந்த திருவிழா நடைபெறும் இக்காலங்களிலே கோவிலுக்கு முன்பாக அமைந்திருக்கும் மேடையிலே பல்வேறு நாட்டுக் கூத்துக்கள் நடைபெறும். இரவு தொடங்கினால் அடுத்த நாள் காலை வரைக்கும் விடிய விடிய நடைபெறுவது வழக்கம்.
அண்ணாவியாருடைய நாட்டுக் கூத்துக்கள் பல மேடையேற்றப்பட்டன. குறைந்தது ஒரு நாட்டுக் கூத்து எட்டு மணித்தியாலங்கள் வரை நடைபெறும்.

நாட்டுக்கூத்து மாமேதைப் பட்டம்
அண்ணாவியார் டானியல் அவர்கள் நாட்டுக் கூத்திலே பெரும்பாலும் கதாநாயகன் பாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார்.
பெண் பாத்திரங்கள் தாங்கி நடித்த நாடகங்கள் தான் தனக்கு பெரும் பாராட்டைத் தேடித் தந்ததாக கூறுகின்றார். யாழ். மேற்றாசனக் கோயிலின் கட்டிடநிதிக்காக நடாத்தப் பெற்ற எஸ்தாக்கியார் நாட்டுக் கூத்திலே எஸ்தாக்கியாரின் மனைவியாக ஏற்று நடித்தார்.
இவருடைய நடிப்புத் திறனைப் பாராட்டி வண. தியாகுப்பிள்ளை தலைமையில் டாக்டர் பலி அவர்களால் பொன் ஆடை போர்த்திக் கௌரவித்து ஷஷநாட்டுக்கூத்து மாமேதை|| என்ற பட்டத்தையும் வழங்கியமை இவரது திறமைக்கு ஓர் சாட்சியாகும். இவர் பழக்கி நடித்த ஷஷஅலங்கார ரூபன்|| என்ற நாட்டுக் கூத்து அண்மையில் வீடீயோப் படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கூடுதலான இளம் பெண்கள் நடிக்கின்ற ஷஷசஞ்சுவான்|| நாட்டுக் கூத்து இவராலேயே பழக்கப்பட்டு பின்னர் வீடீயோ படமாகவும் தயாரிக்கப்பட்டது.
நாவாந்துறையில் சென்ற வருடம் நடைபெற்ற கலை விழாவிலேயே ஈழத்தின் சிறப்பாக வடபகுதியில் உள்ள மூன்று முதுபெரும் நாட்டுக் கூத்துக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களுள் அண்ணாவியார் டானியலும் ஒருவராவார். எனையவர்கள் அமரர். அண்ணாவியார் வி.வி. வைரமுத்து, அண்ணாவியார் வின்சன்டிபோல் ஆகிய இருவராவர். இம்முவருக்கும் இவ்வூர் மக்கள் பொன்ஆடை போர்த்தி பொற்கிழி வழங்கிக் கௌரவித்தார்கள்.
-----------------------------------------------------------------------

Tuesday, November 17, 2009

Sirukathai-Theresa





Monday, November 16, 2009

நாட்டுக்கூத்துக் கலைஞர் திரு நீ.வின்சென் டி போல்

திரு.போல் அவர்கள் தனது ஒன்பதாவது வயதில் படிக்கின்ற காலத்திலேயே கலை வாழ்வில் பிரவேசித்தவர். ‘தீத்தூஸ்’ என்னும் சமய நாடகத்தில் ‘கபரியேஸ் தூதன்’ என்னும் பாத்திரத்தில் நடித்திருந்ததுதான் இவரது முதலாவது மேடையேற்றம்!
அன்று தென் இந்திய திரைவானில் பிரபலமாக இருந்த நடிகர் எம்.கே.தியாகராஜ‌பாகவதர் அவர்களின் குரல் வளத்தில் கவரப்பட்ட இவர், தனது பதினாறாவது வயதில் அவர் நடித்திருந்த ‘அசோக்குமார்’ படக்கதை பாடல்களை நாடகமாக அரங்கேற்றி ‘குணாளன்’ என்னும் பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இவர் நாடகங்களில் பாகவதர் பாணியிலேயே பாடி நடித்ததனால் யாழ்ப்பாணத்தில் இவரைச் சின்னப் பாகவதர் என்றே பலரும் அழைப்பார்கள்!
தனது இருபத்தி மூன்றாவது வயதில் ‘ஏழையின் கண்ணீர்’ என்னும் நாடகத்தில் பரதம் பாத்திரத்தை ஏற்று நடித்து கலை வாழ்வில் பிரகாசிக்கத் தொடங்கினார். இவரது சகோதரர் நீ.பர்னாண்டோ அவர்கள் சிறந்த அண்ணாவியாராகையால் அவர் தனது சகோதரரான இவரின் குரல் வளத்தைப் பயன்படுத்தி ‘புனித யுவானியா பார்ப்பாரம்பாள்’ நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவைத்து பத்திற்கும் மேற்பட்ட முறைகள் மேடையேற்றி போல் அவர்களுக்கு பெரும் புகளைத் தேடிக்கொடுத்தார்.
திரு.போல் அவர்கள் தனது நாட்டுக்கூத்து அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘அன்றைய காலத்தில் நாட்டுக்கூத்திற்கு பின்னணி இசை மத்தளம் கைத்தாளம் பிற்பாட்டு மட்டும்தான். ஆர்மோனியம் ஒலிபெருக்கி (ஸ்பீக்கர்) இவையெல்லாம் கிடையாது! வாயினாலேயே பெரும் குரலெடுத்துப் பாடவேண்டும். வசனமும் ராக ஓசையுடந்தான் பேசவேண்டும்! அதேநேரம் பாத்திரங்களுக்கேற்ற ஆட்டமும் உண்டு! எனது குரல் வளம் மூன்றரைச் சுருதியில் இருந்ததனால் என்னால் பாடி ஆடி நடிப்பது சிரமமில்லாமல் இருந்தது.
நான் குறிப்பிடும் காலகட்டத்தில் கரையோரப்பகுதி கிறிஸ்த்தவ மக்களே நாட்டுக்கூத்தில் புகழேணியில் இருந்தார்கள். இவர்களில் மிகத் திறமையானதொரு கலைஞர் இயக்குனர் காலம்சென்ற திரு.பூந்தான் யோசப்பு அவர்கள். நான் நடித்த நாடகங்களை இவர் பார்த்துள்ளார். ஒருமுறை என்னைச் சந்தித்து தனது நெறியாழ்கையில் இயங்கும் நவரசக் கலா மன்றத்தில் இணையும்படி அழைத்தார். நான் நவரசக் கலா மன்றத்தில் இணைந்ததும் அவரின் இயக்கத்தில் ஜெனோவா, சங்கிலியன், கருங்குயில்க் குன்றத்துக் கொலை, மனம் போல மாங்கல்யம், சவேரியார்” போன்ற நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடிக்க வைத்தார். இந்த நாட்டுக்கூத்து நாடகங்களும் இசை நாடகங்களான ஞானசௌந்தரி, புது வாழ்வு, ஆகிய நாடகங்களும் சுமார் தொண்ணூறுக்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப் பட்டிருக்கின்றன. இந்த நாடகங்களையெல்லாம் இவர் இரவு எட்டு மணிக்கு தொடங்கி மறுநாள்க் காலை ஆறு மணிவரை நடத்துவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். திரு பூந்தான் யோசேப்பு அவர்கள்தான் என்னை நாட்டுக்கூத்தில் மேன்மையடையச் செய்தவர் என நன்றி உணர்வோடு ஒரு செவ்வியல் கூறியிருந்தார் திரு.போல் அவர்கள்.
நாட்டுக்கூத்து, இசை நாடகங்களென பதினாறுக்கும் மேற்பட்ட நாடகங்களை இவரே எழுதியிருப்பதோடு பலாலி, மயிலிட்டி, தாளையடி, நாவாந்துறை, சுண்டுக்குளி, அல்லைப்பிட்டி, முதலான ஊர்களில் உள்ள கலைஞர்களுக்கு பழக்கி நெறியாழ்கை செய்து பல கலைஞர்களை உருவாக்கியும் உள்ளார்.
திரு.வின்சென் டி போல் என்ற இந்த நாட்டுக்கூத்து அண்ணாவியாருக்கு நவரசக் கலா மன்றத்தால் ‘எழிலிசைக் கலைஞன்’ என்னும் விருதும் குழந்தைக் கலைஞர் சத்தியசீலனால் ‘இசைந‌ம்பி’ என்னும் விருதும் வழங்கப்பட்டதோடு திரு.முல்லைக்கவியும், திருமறைக் கலாமன்றமும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்திருக்கின்றனர். என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
முகவரி74-3 கடற்கரை வீதியாழ்ப்பாணம்
பிறந்த திகதி :- 19-05-1924

Sunday, November 15, 2009

நாவாந்துறை வீதி




நாவாந்துறை வீதி நாவலர் வீதியாக உருவான கதை
இன்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களை நாம் நீள நினைப்பதற்கு நம்மிடையே நிலவுகின்ற நினைவுச் சின்னங்கள், எச்சங்கள் பலவாகும். அவை பாடசாலைகள், படிப்பகங்கள், பண்ணைகள், நூல்கள், எனப் பலவாகும்.

இவற்றுள் நாவலர் அவர்களை நாம் நீள நினைப்பதற்கு ஏதுவாயுள்ளது நீளமான ஒரு வீதியாகும். அது கிழக்கில் அரியாலை மாம்பழச் சந்தியில் இருந்து மேற்கில் நாவாந்துறை வரை நீண்டதாகும்.


இன்றைய நாவலர் வீதி அன்று நாவாந்துறை வீதி என்றே பெயர் பெற்று நிலவியது. இதனூடாகப் போகும் புகைவண்டிப் வீதியோரமாக அமைந்த ஒரு தரிப்பு நிலையமும் நாவாந்துறைத் தரிப்பு என்றே பெயர் பெற்றிருந்தது.

இவ்வாறாக நாவலர் பாடசாலையில் 1932, 1933 ஆம் ஆண்டுகளில் ஆறாம், ஏழாம் வகுப்புகளில் பயின்று வந்த சரவணமுத்து முதலான மாணவர்களில் சிலர் குறும்புத்தனம் உள்ளவர்களாய் மூன்று சதத்து அஞ்சலட்டையும் ஆறு சதத்து முத்திரையும் வாங்கி தங்களுக்குள்ளேயே தபால்கள் எழுதி நாவலர் வீதி என விலாசமிட்டு, கீழே நாவாந்துறை வீதி என அடைப்புக்குறிக்குள் எழுதி அனுப்பி வந்தார்கள். நாளடைவில் இவர்களின் அபிமானத்தைக் கேட்டறிந்த நகர மாவட்ட சபைத் தலைவர் இ. சிவகுருநாதர் என்பார் இவ்விளைஞர்களைப் பாராட்டி அவ்வீதிக்கு நாவலர் வீதி எனப் பொதுமக்கள் அறியப் பெயரிட்டார்.

சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேர்ந்தது.

நன்றி: மில்க்வைற் செய்தி, ஆனி 1990, கௌரவ ஆசிரியர்: க. சி. குலரத்தினம்.

Thursday, November 12, 2009

திருப்பாடுகளின் காட்சி

யாழ் நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய மைதானத்தில் ‘கல்வாரி கண்ட கடவுள்’ என்ற திருப்பாடுகளின் காட்சி, பக்தி இசை உரை நாடகச் சித்திரம் மேடையேற்றப்பட்டுள்ளது. பொதுவாகவே, பங்குனி மாதத்தில் கிறிஸ்தவ மக்களின் தவக் காலத்தை முன்னிட்டு திருப்பாடுகளின் காட்சி பிரமாண்டமான தயாரிப்பாக மேடையேற்றப்பட்டு வருகின்றது.
அண்மைக் காலங்களில் திருமறைக் கலாமன்றத்தினர் நூறுக்கும் மேற்பட்ட நடிகர்களை கொண்டு இதனை மேடையேற்றுவதும் பெரும் திரளான மக்கள் இதனைத் தரிசிப்பதும் வழமையான நிகழ்வாகிவிட்டது.
இவ்வருடம் சுமார் 20 வருட காலங்களுக்கு பின்னர் யாழ். நாவாந்துறை மக்களால் திருப்பாடுகளின் காட்சி மேடையேற்றப்பட்டமை குறிப்பிடவேண்டிய அம்சமாகவுள்ளது. என்.எம். பாலச்சந்திரன் அவர்களின் கதை வசனம், பாடல், இயக்கம் என்பவற்றோடு எம்.எக்ஸ். கருணரட்ணம் அடிகளாரின் தயாரிப்பில் உருவான இவ்வாற்றுகை 150 அடி மேடையில் சுமார் 200 நடிகர்களுடன் மேடையேற்றப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய பங்குத்தந்தை அவர்கள் – “இது ஒரு நாடகமல்ல இது இறைவனின் வாழ்க்கை வரலாறு” என்றார். உண்மையில் திருப்பாடுகளின் காட்சி ஓர் பக்தி நிறைந்த தரிசனத்திற்குரிய கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைச் செய்து காட்டும் ஆற்றுகையாகவே அமைந்து கொள்கின்றது. அரங்கின் பிரமாண்டமான காட்சிப்படுத்தல் மருட்கையுடன் தவக்காலத்தின் இறை சிந்தனையை வலுவூட்ட கிறிஸ்தவ மக்களுக்கு இவ்வாற்றுகை உதவுகின்றன. ஊரே திரண்டு வந்து அரங்க வெளியை நிறைத்து நிற்பது இதற்கு சான்று பகர்கின்றது.

கூத்து வளர்வதற்கு எனது தம்பியும் ஒருவராக இருந்துள்ளார்.





தென்மோடி நாட்டுக்கூத்து ஆரம்பத்திலிருந்து இன்றுவரை கரையோரப்பகுதியான நாவாந்துறைப் பகுதியில் பெருமளவு வரவேற்பினைப் பெற்று வருகின்றது. அதே ஊரில் 60 நாடகங்களுக்கு மேல் நடித்து நெறியாள்கை செய்த அண்ணாவியார் செ. டானியல் பெலிக்கான் என்பவரை தாய்மனை நாவாந்துறை வடக்கு எனும் அவரது இல்லத்தில் நேர்காணல் ஒன்றிற்காகச் சந்தித்துப் பேசியபோது எங்களுடன் உரையாடிய விடயங்களை வாசகர்களுக்காகத் தருகின்றோம். ஷஷநாவந்துறைப் பாடசாலையில் 8ஆம் வகுப்புவரை படித்தேன். படிக்கும் காலங்களில் இருந்து படிப்பு முடிந்த பின்னரும் கூட என் மனதில் வெற்றிடமேயில்லாத வகையில் ஆக்கிரமித்து இருந்தது நானும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான். நடிப்பேன் என்று என் மனதில் நம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது யக்கரசு மாமா ராசரெட்டிணம் இன்னாசி போன்ற எனக்கு முன்னோரான நாட்டுக்கூத்து நடிகர்கள் நினைவு கூரத்தக்கவர்கள். அவர்கள் முன்னர் நடித்த நாடகங்களில் இருந்து பார்த்துப் பெற்ற அனுபவங்களேயாகும். எனது தந்தை செபஸ்தியாம் பிள்ளை ஒரு நாட்டுக்கூத்து கலைஞராகவும் இசைப் பிரியராகவும் விளங்கியவர். இவர்தான் எனக்கு நாடக ஆர்வத்தினை ஊட்டி வழிகாட்டி நெறிப்படுத்தியவர். அப்போது எனக்கு 21 வயது இருக்கும். ஊரில் உள்ள மக்கள் என்னுடைய குரல் வளத்தினைப் பார்த்து பாராட்டினார்கள். ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றதனால் மேலும் என்னை நானே வளர்த்துக் கொண்டேன். இதே ஆண்டில் ஷஅலசு என்ற பெயருடைய நாட்டுக்கூத்தில் அலசுவாக பாத்திரமேற்று நடித்தேன். அலசு நாடகமானது கத்தோலிக்க வேத நாடகமாகும். இந்த நாடகம் நடித்ததில் முதல் பாராட்டினைப் பெற்றேன். 1977ஆம் ஆண்டு கொழும்பில் சரஸ்வதி மண்டபத்தில் ஷஷசங்கிலியன் நாடகத்தில் நடித்தேன். எனக்குப் பிடித்த நாடகமும் பாராட்டினைப் பெற்ற நாடகமும் இதுவாகும். இலங்கை வானொலியில் எனது நாட்டுக்கூத்துப் பாடல்கள் நாடக மேடைப்பாடல்கள் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனது சிறந்த நாட்டுக்கூத்துக்களில் ஒன்றாக விளங்குகின்றது. நான் செபஸ்தியானாக நடித்துள்ளேன். தற்போது பல நாடகங்களையும் தயாரித்து நெறிப்படுத்தி வருகின்றேன். வருடத்தின் ஒவ்வொரு ஆவணி மாதத்திலும் பரலோக மாதா கோயிலில் வருடாந்த திருவிழா வழக்கமாக நடைபெறும். இக்காலங்களில் கோவிலுக்கு பக்கமாக அமைந்திருக்கும் மேடையில் பல்வேறு நாட்டுக்கூத்துக்கள் இடம்பெறும். இரவு தொடங்கினால் விடியும்வரை நடைபெறுவது வழக்கம். அப்போது நாங்கள் எங்கள் கூத்துக்களையும் ஆண்டு விழாவில் அரங்கேற்றுவோம். முன்னைய காலங்களில் ஆண்களே பெண் வேடம் போட்டு நடிக்க வேண்டும். நான் பெண் பாத்திரம் தாங்கி நடித்த நாடகங்கள்தான் பெருமை சேர்த்தது. இதன் காரணமாக நாட்டுக்கூத்து மேதை என்ற பட்டமும் எனக்குக் கிடைத்தது. முன்னர் கூத்துக்களின் பின்னிசையாக மிருதங்கமும் தாளமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது நவீன கருவியின் மூலம் பல்வேறு வாத்தியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. கூத்துக்கள் கரையோரப் பிரதேசங்களில் அன்றிலிருந்து இன்றுவரையும் வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. ஆனால் வெளியிடங்களில் இதற்கு வரவேற்பு அதிகமாக இல்லை. வரவேற்பு இல்லாமல் போனதற்கு சினிமாவும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்றைய இளைஞர்களுக்கு இதில் நாட்டம் வருகின்ற அளவுக்கு ஏதோ ஒரு வகையில் மாற்றம் செய்து கூத்துக்களை அளிக்கை செய்ய வேண்டும். நாங்கள் ஆடுகின்ற நாட்டுக் கூத்து முறையான தென்மோடி ஆட்டங்கள் குறைவு. ஆனால் எமது ஆடைகள் பாத்திர வெளிப்பாடுகள் கச்சிதமாக அமைந்து விளங்கும். வசனங்களைப் பேசுவதும் பாடல்களைப் பாடுவதும் என எமது குரல் வளத்தினூடாக எமது திறமைகளை வெளிப்படுத்தி விடுவோம். ஆட்டம் இல்லை என்ற குறை எமது கூத்துக்களில் ஏற்படுவதில்லை. தற்போது நடிகர் ஒருவர் மேடையில் நிற்க பின்னால் அவருக்குப் பதிலாக பாடுகின்ற பேசுகின்ற முறையே அதிகளவில் காணப்படுகின்றது. முன்னர் இவை இல்லையென்று கூறிவிடமுடியாது. சில சந்தர்ப்பங்களிலேயே நாம் இவற்றைப் பயன்படுத்தி வந்தோம். தற்போது குரல்வளம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்று கூறிவிடமுடியாது. முன்னரெல்லாம் அவ்வாறில்லை. ஒரு நடிகன் ஒரு கட்டை முதல் எட்டுக் கட்டை வரை குரல் வளமுடையவனாக இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. காத்தவராயன் கூத்திலிருந்து வித்தியாசப்பட்டது எங்கள் தென்மோடி நாட்டுக்கூத்து முறையாகும். இதில் காட்சி அமைப்புக்கள் வித்தியாசமாகவும் பாடல்கள் வித்தியாசமாகவும் அமைகின்றன. கிறிஸ்தவ மதம் தழுவிய கதைகளையேமையமாகக் கொண்டு நமது கூத்துக்கள் அமைகின்றன. நான் தயாரித்து நெறிப்படுத்திய நாட்டுக்கூத்து 2003ஆம் ஆண்டு ஆவணிமாதம் யாழ்ப்பாணத்திலுள்ள திருமறைக் கலாமன்றத்தில் ஷஷபுனிதவதி என்ற பெயருடன் அரங்கேறியது. யாழ். மாவட்டத்தில் முற்று முழுதாக பெண்களே நடித்திருக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் ஆண்கள்தான் பெண்கள் வேடம் போட்டு நடித்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பெண்களே பெண்கள் பாத்திரமேற்று நடிக்கும் அளவுக்கு மாற்றம் பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலுள்ள சென் சேவியர் கல்லூரி மாணவர்களால் ஷசெபஸ்தியார் என்ற பெயருடைய நாடகம் மன்னார் மாவட்டத்தில் முதலாவது இடத்தினைப் பெற்றது. வடக்கு - கிழக்கில் சிறந்த நாடகமாக தெரிவு செய்து மூன்றாவது இடத்தினைப் பெற்ற பெருமை இந்த நாடகத்துக்கு உரியது. இந்தக் கூத்து முறை வளர்ந்து வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் எனது தம்பியும் ஒருவராக இருந்துள்ளார். எனது தம்பியின் பெயர் ம.செ.மைக்கல்ராஜா. அவர் இன்று இந்த மண்ணில் இல்லை. இறந்துவிட்டார். தம்பி இருந்தால் பல கருத்துள்ள நாடகங்கள் வெளி வந்திருக்கும் என்று கவலையுடன் கூறியவர் சில நிமிடம் அவரின் நினைவில் மௌனம் காத்து விட்டு தொடர்ந்தார். ஆரம்ப காலங்களில் வாழ்ந்த வாழ்வு வாழ்வில் ஏற்பட்டுள்ள அனுபவங்கள் தான் இன்றும் நாடகங்களாக அரங்கேறுகின்றன. இன்றைய காலத்தில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களை உள்ளடக்கியதான நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய தேவையுள்ளது. அதற்கேற்ப முயற்சி செய்து வருகின்றோம். ஆனால் தென்மோடி நாட்டுக்கூத்து முறையில் அமைந்த கிறிஸ்தவ நாடகங்களைப் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்டதனால் இந்த வழியிலிருந்து மக்களை திசைதிருப்புவது சிரமம்தான். ஆனால் வெளியிடங்களுக்கு இந்த நாடகங்களை கொண்டு செல்ல முடியாத நிலை சினிமாவினால் ஏற்பட்டுள்ளது. எனினும் சினிமா எவ்வளவுக்கு எவ்வளவு மக்களை தன் பக்கம் இழுத்திருக்கின்றதோ அதே போல் இந்த நாடகங்களையும் எல்லோரின் பக்கமும் திருப்பமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்களின் ரசனையை அறிந்து அதற்கேற்ப நாடக வடிவங்களை பாடல் இசை அமைப்புக்களை மாற்றி அமைத்து இதனூடாக மென்மேலும் வளரச் செய்ய முடியும். இதற்கமையத்தான் நாடகங்களின் நேரத்தையும் சுருக்கி வருகின்றோம். ஆரம்ப நாடகங்களின் வடிவங்களிலிருந்துதான் இன்றைய சினிமா வளர்ந்து வந்திருக்கின்றது. ஆனால் இன்று நாடகங்களை அது மேவி நிற்கின்றது. இதற்குக் காரணம் இலகுவான முறையில் மக்களிடம் சென்றடையும் வழியை நாம் மேற்கொள்வதேயாகும் என்று கூறியவர். அந்தக்கால போர்த்துக்கீச தளபதி தனது படைகளுடன் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியனைச் சிறைப்பிடிக்க படகேறுகின்றனர். இந்தக் காட்சியில் இடம்பெறும் பாடல் என்று கூறியபடி ஷஷஇடிநேரு கொடி துவக்கதுவே நீட.... என்ற பாடலை முழுவதுமாக பாடி முடித்தார். அவர் பாடும் போது - படைகள் வரிசைப்படுத்தி நடக்கும் காலடி ஓசை போல் வீரனின் உணர்வு வெளிப்பட நடுங்கும் எதிரிப்படை என்ன பாடுபடும் என்று உணர்ந்தோம். நம்மில் வீரத்தையும் உணர்ந்தோம். அன்றைய நாளில் சங்கிலியனைச் சிறைப்பிடித்த கதையினை நடித்துப் பாடினோம். ஆனால் இன்று தமிழன் நிமிர்ந்த இந்த சமூகத்தில் உள்ள கதையினைக் கொண்டு நாடகங்களை அமைக்காது கவலைக்குரியதாகவே இருக்கின்றது என்று அவர் சொல்லி முடித்தபோது பழைய தலைமுறைக் கலைஞர் ஒருவரின் புதிய தலைமுறைக்குரிய ஆதங்கம் தென்படவே செய்தது.

Wednesday, November 04, 2009

நெய்தல் -சிறப்பு மலர்


நெய்தல் (நாவாந்துறைச் சிறப்பு மலர்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க நாவாந்துறை பற்றி 'நாவாந்துறை புனித மரியாள் அபிவிருத்திச் சபை, நோர்வே'யினால் வெளியிடப்பட்ட மலர் நெய்தல். சிறுகதை, கவிதை, ஆய்வுக் கட்டுரை மற்றும் ஆசியுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ள மலர்.
நெய்தல்
- நாவாந்துறை பற்றிய மலர் -
வெளியீடு
நாவாந்துறை புனித மரியாள் அபிவிருத்திச் சபை, நோர்வே
மலர்க்குழு
யூலியஸ் அந்தோனிப்பிள்ளை (நிமல்)
அருமைராசா ஆரோக்கியசீலன்
பாபு மைக்கல்ராஜா
தொடர்புகளுக்கு
Navanthurai Dev.Fond
Langerinden - 144
5132 Nyborg
Norway
(நன்றி- பதிவுகள்)